பரிபூரண அல்லது நேர்த்தியான அன்பின் ஏழு குணங்களை பவுல் முன்வைக்கிறார் (1 கொரிந்தியர் 13). இங்கு பயன்படுத்தப்படும் அன்பு என்ற வார்த்தை கணவன் மனைவி அன்பைப் பற்றியோ அல்லது குடும்பத்திற்குள் இருக்கும் அன்பைப் பற்றியோ அல்லது சகோதர அன்பைப் பற்றியோ அல்ல; இது தெய்வீக அன்பைக் குறிக்கிறது.
1) அன்பு நீடிய சாந்தமுள்ளது:
இந்த வகையான அன்பைக் கொண்ட ஒரு நபர் தன் மீது விழுந்த குற்றங்களைச் சுமக்கிறார், மெதுவாக எதிர்வினையாற்றுகிறார் அல்லது திருப்பிச் செலுத்துகிறார் அல்லது காயப்படுத்தும்போது தண்டிக்கிறார். இது கவலையற்ற நிலையோ அல்லது கொடிய மனப்பான்மையோ அல்ல, ஆனால் திரும்ப கொடுக்கும் சக்தி இருப்பினும் அல்லது பழிவாங்க முடிந்தாலும் நீடிய பொறுமையோடு இருத்தலாகும், இந்த பொறுமையான அன்பு தெய்வீக பண்பு (2 பேதுரு 3:9).
2) அன்பு இரக்கமுள்ளது:
இரக்கம் பண்பில் வெளிப்படுகிறது. இரக்கம் கொண்ட ஒரு நபர் மற்றவர்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்துகிறார், மற்றவர்களின் நலனை நாடுகிறார். கஷ்டங்கள் மத்தியிலும், தேவைப்படும்போது சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவரின் இரக்கம். அது போல, அன்பானவர்கள் இரக்கமுள்ளவர்கள், ஆனால் இது கண்மூடித்தனமான அன்பு கொண்டதல்ல.
3) அன்பு எப்போதும் பாதுகாக்கிறது:
இந்த வகையான அன்பு ஒரு நபரைப் பாதுகாக்க முற்படுகிறது, குறிப்பாக சோதனைக்குட்படுபவர்களை பாதுகாக்கிறது. அதாவது பாவத்தில் விழுவதால் ஏற்படும் தீங்கு, இழப்பு அல்லது அவமானத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பது ஆகும். அப்படி ஒரு பாவி வீழ்ந்தால், இந்த அன்பு அந்த நபரை அவமானப்படுத்துவதற்கும் கண்டனம் செய்வதற்கும் பதிலாக மீட்கவும் பாதுகாக்கவும் பாடுபடும்.
4) அன்பு சகலத்தையும் நம்புகிறது:
நீதி அமைப்புக்கு ஒரு கருத்து உள்ளது; அதாவது சந்தேகத்தின் பலன் அல்லது ஐயநிலையின் சாதகத்தை அளித்திடுவதாகும். அந்த வகையான அன்பு வதந்திகள் அல்லது புறம் பேசுவதையோ அல்லது கற்பனை பயங்களை நம்புவதில்லை, ஆனால் மற்றவர்களை நம்புகிறது மற்றும் அவர்களின் நல்ல நோக்கங்களை நம்புகிறது.
5) அன்பு சகலத்தையும் விசுவாசிக்கிறது:
இந்த வகையான அன்பு, தம்மிலும் மற்றவர்களிலும் தம்முடைய உன்னத வேலையைத் தொடங்கியவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்புகிறது (பிலிப்பியர் 1:5). உண்மையுள்ள தேவனை விசுவாசித்து, இந்த வகையான அன்பைக் கொண்ட ஒரு நபர் முன்னோக்கி நகர்கிறார், மேலும் மற்றவர்கள் முன்னேறவும் ஊக்குவிக்கிறார்.
6) அன்பு எப்போதும் நிலைத்து நிற்கும்:
கஷ்டங்கள் மற்றும் சோதனையின் கடினமான நேரங்கள் இருக்கும். அப்படி சூழ்நிலைகள் சரியற்ற நிலையிலும், அன்பு நம்பிக்கையை கைவிடாமல் அல்லது விட்டு விடாமல் நிலைத்து நிற்கிறது.
7) அன்பு தோற்காது:
இந்த உலகத்திற்கோ காலத்திற்கோ இடத்திற்கோ மட்டுப்படுத்தப்படாத நித்திய அன்பைப் பற்றி பவுல் எழுதுகிறார். இந்த தெய்வீக அன்பு ஒருபோதும் ஒழியாது. அந்நிய பாஷை, தீர்க்கதரிசனங்கள் மற்றும் அறிவு அனைத்தும் நித்தியத்தில் ஒழிந்து போகும், இருப்பினும், அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
அந்த அன்பின் ஆழத்தை நான் உணர்ந்தேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்