விசுவாசியான கணவன் தன் விசுவாச மனைவியை மிக மோசமாக அடிக்கிறான். அவள் பாதுகாப்பு தேடி, போதகரின் வீட்டிற்குள் நுழைகிறாள். இதனை அறிந்த போதகர் என்ன செய்ய வேண்டும்? அல்லது ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை அந்த வீட்டின் குழந்தையிடமிருந்து இந்த குடும்ப வன்முறை பற்றி அறிய நேரும் போது ஞாயிறு பள்ளி ஆசிரியை என்ன செய்ய வேண்டும்? பாவிகளின் தவறை எதிர்ப்பதும் மற்றும் சுட்டிக் காட்டுவதும் திருச்சபைக்கு முக்கியமான மற்றும் உன்னதமான பணியாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல திருச்சபைகள் ஊழியத்தின் இந்த அம்சத்தை புறக்கணிக்கின்றன. ஒரு பெண் அல்லது குழந்தை தங்கள் வீட்டில் உள்ள சோகமான சூழ்நிலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்தலாம். போதகர்களும் பெரியவர்களும் இத்தகைய பாவங்களை தெரிந்துக் கொண்டு அதை சரி செய்ய முனைய வேண்டும்.
எதிர் கொள்ளும் முறை:
விசுவாசிகளிடையே பாவத்தை காணும் போது அதை எதிர்க்க திருச்சபைக்கு அதிகாரம் உள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதைப் போதித்தார்; "உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக" (மத்தேயு 18:15-17). கர்த்தர் வழங்கிய மாதிரியின்படி ஒரு தவறான கணவன் அல்லது வழிதவறிய குழந்தை நேரடியாக கண்டிக்கப்பட வேண்டும்.
வித்தியாசமான மனிதர்கள்:
தீமோத்தேயு போன்ற போதகர்கள் சபையில் உள்ளவர்களின் பாவங்களையும் தவறுகளையும் கண்டிக்க முடியும் என்றும் பவுல் எழுதுகிறார். "முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு" (1 தீமோத்தேயு 5:1-2).
தீர்ப்பு செய்வதற்கான அதிகாரம்:
திருச்சபைக்குள் நியாயந்தீர்க்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக பவுல் எழுதுகிறார், மேலும் தேவனின் பரிசுத்தவான்கள் தேவதூதர்களை நியாயந்தீர்ப்பார்கள் (1 கொரிந்தியர் 5:12; 6:2). எனவே, போதகர்கள் மற்றும் சபைத் தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்களுக்கு தீயவர்களை எதிர்கொள்ள யோவான் ஸ்நானகன் மற்றும் நாத்தான் போன்று தைரியம் வேண்டும்.
இன்று, ஒரு சபை ஒரு மலையின் மீது உள்ள நகரம் போல, பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும். "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது" (மத்தேயு 5:14). திருச்சபைக்குள் பாவம் வெளிச்சத்தை மங்கச் செய்கிறது.
நான் ஒழுங்குள்ள சீஷனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்