ஒரு மனிதன் மரண தருவாயில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தான்; அவனுக்கு உதவி தேவைப்பட்டது. அங்கு ஒரு மருத்துவர் வந்தார், அவன் அவர் தொடுவதையோ அல்லது சிகிச்சையளிப்பதையோ மறுத்துவிட்டான். காரணம் என்னவென்றால், அவர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல தன் சாதியை விட மருத்துவர் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் . அதன் விளைவு சிகிச்சை கிடைக்காததால் அவன் இறந்து போனான். அவன் மேட்டிமையால் அவன் உயிர் போனது. "அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" (நீதிமொழிகள் 16:18).
1) தனிச்சலுகை:
மக்கள் தங்களை எல்லாவற்றிலும் சிறப்புரிமை பெற்றவர்களாக கருதுகின்றனர். அவர்கள் உயர்ந்தவர்கள், பெரியவர்கள்; ஆகையால் ‘பொதுவானது’ என அழைக்கப்படும் எதிலும் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள். சமூக அல்லது அரசியல் படிநிலை அல்லது கல்வி அல்லது பொருளாதார வசதி என அவர்களின் நிலை அல்லது அந்தஸ்தின் காரணமாக சிறப்புரிமை இருக்கலாம்.
2) பரம்பரை:
இன்னும் சிலர் எப்போதும் தங்கள் முன்னோர்கள் அல்லது பரம்பரையைப் பற்றியே பெருமை பேசுவார்கள். மேலும் தாங்கள் எப்போதும் சரியானவர்கள் என்பது போலும்; கடந்த காலத்தில் செய்ததைப் போலவே செய்வார்கள். பலர் தங்கள் முன்னோர்களை வணங்குகிறார்கள், ஏனெனில் ஜனங்கள் இறந்த பிறகு கடவுள்களாக மாறுவதாக நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய யோசனைகளையும் சத்தியத்தின் புதிய ஒளியையும் நிராகரிக்கிறார்கள்.
3) கலாச்சாரம்:
சிலருக்கு அவர்களின் கலாச்சாரம் உயர்ந்தது, அதுவும் வாழ்க்கையை விட பெரியது. எனவே, அவர்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்க விரும்புகிறார்கள். அப்படி அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஜாதிக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை கௌரவ கொலை அல்லது ஆணவ கொலை செய்வதை நம்மால் காண முடியும். ஆக, அவர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள், மற்ற கலாச்சாரங்களைப் பற்றிய குறைந்த கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.
4) மொழி:
இன்னும் சிலருக்கு தங்கள் மொழி ஏதோ சொர்க்கத்தில் பேசப்படும் மொழி போலவும் ; பிற மொழி பேசுபவர்கள் கலாச்சாரமற்றவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும், முட்டாள்களாகவும் கூட கருதப்படுகிறார்கள்.
5) தோற்றம்:
சிலர் சுற்றுச்சூழலின் காரணமாக உயரமாகவோ அல்லது அழகாகவோ அல்லது ஆரோக்கியமாகவோ இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை பார்க்கும் பார்வை இழிவாக காணப்படுகிறது. அழகாக அல்லது நல்ல தோற்றம் கொண்ட நபர்கள் மற்றவர்களை கேலி செய்வதுண்டு.
6) இனம்:
இனங்களின் மேன்மை சிலரைப் பற்றிக் கொண்டு மனித குலத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிட்லரின் ஆரிய மேன்மை மற்றும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆகியவை இதற்கு சில எடுத்துக்காட்டுகள். பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை காரணமாக கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
7) கிருபை:
மிகவும் ஆபத்தானது ஆவிக்குரிய பெருமை அல்லது கிருபையைக் குறித்த பெருமை. தேவன் தம்முடைய மக்களுக்கு அன்பு, இரக்கம் மற்றும் கிருபை ஆகியவற்றை வழங்கியுள்ளார். இருப்பினும், சிலர் தங்களை 'மற்றவர்களை விட பரிசுத்தமானவர்கள்' என்று எண்ணிக் கொண்டு கண்டனம் செய்கிறார்கள் மற்றும் மோசமாகவும் நடத்துகிறார்கள். அதாவது தங்களின் சபை/ஆலய பிரிவு மற்றவர்களை விட உயர்ந்ததாகக் கருதும் மதப் பெருமையின் வடிவத்தை உதாரணமாக கொள்ளலாம்.
என் உள்ளத்தில் பெருமை உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்