பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரீர ரீதியாக துன்புறுத்துவது மற்றும் கொலை செய்வது போன்ற செய்திகளைக் கேட்கும் போது மனது ரணமாகிறது. அன்பு, பொறுமை மற்றும் பெற்றோருக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். பிள்ளைகளை கோபமூட்டவோ, தூண்டிவிடவோ, எரிச்சலூட்டவோ அல்லது அவர்களின் நல் ஆவியை நசுக்கவோ வேண்டாம் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21).
தாம்பத்திய இணக்கமின்மை:
கணவனும் மனைவியும் பிள்ளைகளுக்கு முன்பாக அடிக்கடி தகராறு செய்து சண்டையிடும் போது, அவர்கள் தங்கள் குழந்தைகளை மனச்சோர்வடையச் செய்கிறார்கள்.
குழந்தைகளை மையமாகக் கொண்ட வீடு:
எல்லா முடிவுகளையும் குழந்தைகளைக் கேட்டு எடுப்பது அல்லது அவர்களின் ஒப்புதல் வாங்குவது என்பது குழந்தைகளிடம் அதீத அன்பு செலுத்துவதைக் காட்டுகிறது. ஒரே குழந்தையாக வளர்க்கப்படும் பிள்ளைகள் பெற்றோர் இருவரின் கவனத்தையும் பெறுகிறது; எனவே பெற்றோரிடமிருந்து வழிகாட்டுதலும் இல்லை மற்றும் நல்பழக்க வழக்கங்களும் இல்லை.
கோபத்தோடு ஒழுங்குப்படுத்துதல்:
கோபத்தில் குழந்தையைக் கண்டிக்கும் அல்லது தண்டிக்கும் பழக்கம் தாய் அல்லது தந்தைக்கு உண்டு.
நச்சரித்தல்:
செய்த ஒரு தவறான செயலைப் பற்றி புகார் செய்து கொண்டே இருப்பதும் பிள்ளைகளை எரிச்சலடையச் செய்யும்.
ஒழுக்கத்தில் முரண்:
ஏற்றுக்கொள்ளக்கூடிய வார்த்தைகள், மனப்பான்மை மற்றும் நடத்தை என்ன என்பதை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகள் சமரசம் செய்யப்படும்போது அவர்கள் தண்டனையை பரிந்துரைக்க வேண்டும். முரண்பாடு என்பது சில சமயங்களில் தவறைப் புறக்கணிப்பதும், மற்ற நேரங்களில் அதிகமாகத் தண்டிப்பதும் ஆகும். நிச்சயமாக இத்தகைய முரண்பாடுகள் ஒரு குழந்தையை குழப்புகின்றன.
தவறாக இருக்கும்போது ஒப்புக்கொள்ளாமல் இருப்பது:
அபூரண மனிதர்களாக பெற்றோர்களும் தவறுகள் இழைக்கலாம். சில சமயங்களில் உண்மை நிலை தெரியாமல் குழந்தைகளை தண்டிக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு தாழ்மையுடன் இருக்க வேண்டும்.
ஊக்குவிக்காமல் இருப்பதும் தவறு:
குழந்தைகள் சரியானதைச் செய்யும்போது அதை உறுதிப்படுத்தி, சிறந்ததைத் தொடர்ந்து செய்ய ஊக்குவிக்கும் திறன்களை எல்லாப் பெற்றோரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக, சில பெற்றோர்கள் குழந்தைகளின் திறமைகளையும் தாலந்துகளையும் ஊக்கப்படுத்துவதோ அல்லது அங்கீகரிப்பதோ இல்லை.
மற்றவர்களுக்கு முன் கேலி செய்தல்:
குழந்தைகள் உணர்திறன் உடையவர்கள், குறிப்பாக இளைஞர்கள். மற்றவர்களுக்கு முன்பாக குழந்தைகளை கேலி செய்தல் அல்லது கிண்டல் செய்தல் மற்றும் சகாக்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அந்நியர்கள் முன்பு செய்யும் போது அது அவர்களின் மனதை நொறுக்குவது போலாகிறது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுதல்:
பெற்றோர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது, அதை நிறைவேற்றும் திறனும் விருப்பமும் அவர்களிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் மேலும் சாதிப்பதற்கு அல்லது சிறந்து விளங்குவதற்கு ஊக்கத்தொகையாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் சாதனைகளுக்கு வெகுமதி கிடைக்காதபோது அவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
உண்மையற்ற எதிர்பார்ப்புகள்:
எல்லாக் குழந்தைகளும் விஞ்ஞானிகளாகவோ, எழுத்தாளர்களாகவோ, கலைஞர்களாகவோ, நிர்வாகிகளாகவோ, விளையாட்டுப் பிரமுகர்களாகவோ இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு சில ஆற்றல்கள் மற்றும் வரம்புகள் உள்ளன. அவர்களால் முடியாத அல்லது விருப்பமில்லாத எதிர்பார்ப்புகள் அவர்களை மனச்சோர்வடையச் செய்கின்றன. பல பதின்வயதினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்களின் பெற்றோர் தங்கள் சாதனைகளைக் கோருவதில் வெறித்தனமாக இருந்தனர்.
எனது பிள்ளைகளுக்கு நான் நன்கு வளரும் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்