ஒரு பிரசங்கியார் தங்கள் நகரத்தில் நடக்கும் விசேஷ கூட்டங்களுக்கு தன்னை அழைக்க வந்திருந்த தலைவர்களிடம் சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது ஒரு கூட்டத்திற்கான நிதி திரட்டலைக் குறித்தும், பட்ஜெட் நிர்ணயம் குறித்தான யோசனைகளையும், மேலும் எப்படியெல்லாம் கூட்டத்திற்கான நிதி வசூலிக்கப்படலாம் என்றும், அனைவரும் அல்லது குடும்பம் அல்லது வணிகம் அல்லது நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்; கூட்டம் அதிகமாக இருக்கும் போது ஒரு சிறப்பு காணிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் போன்ற ஆலோசனைகளை பிரசங்கியார் வழங்கினார். நற்போதனைகளை அளித்தல் மற்றும் மக்களைச் சென்றடைதல் என்ற இலக்கை விட அதிகமான நிதியைப் பெறுவதில் போதகர் அதிக ஆர்வம் காட்டினார். மிகப் பெரிய பிரசங்கியான பவுல் வித்தியாசமானவர், அவர் கொரிந்து நகரத்தில் உள்ள தலைவர்களிடம் தனது வருகையின் போது அல்லது அவரது முன்னிலையில் எந்த வசூலையும் (நிதி திரட்டுதல்) செய்யக்கூடாது என்று குறிப்பிட்டார்.
கையின் பிரயாசம்:
பணத்தைப் பற்றிய இந்த அணுகுமுறையில் பவுல் தீவிரமானவர். ஒரு அப்போஸ்தலராக, நிதியுதவி பெறும் உரிமை அவருக்கு இருப்பதை அவர் அறிந்திருந்தார் (2 கொரிந்தியர் 9:14). ஆனாலும் அவர் எபேசு நகரத்தில் ஊழியம் செய்தபோது இந்த உரிமையைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். கூடாரம் செய்யும் தொழிலான தனது கடின உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தில் உடன் பணிபுரிபவர்களைக் கூட பவுல் கவனித்துக் கொண்டார் (அப்போஸ்தலர் 20:34). தான் ஊழியம் செய்தவர்களுக்கு பாரமாக இருக்க பவுல் விரும்பவில்லை.
சிறப்பு சந்தர்ப்பங்கள்:
விசேஷ சமயங்களில் மட்டும் கொடுப்பது கூடாது என்று உள்ளூர் சபைத் தலைவர்களுக்கு பவுல் அறிவுறுத்தினார் (1 கொரிந்தியர் 16:1-2). பவுலைப் போன்ற ஒரு பிரபலம் சபைக்கு பிரசிங்கிக்க வரும் போது, அந்த நேரத்தில் பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு மாதத்தின் தொடக்கத்திலேயே அவரவர் வருமானத்திற்கு ஏற்ப ஒரு தொகையை இதற்கென ஒதுக்க வேண்டும் என்று பவுல் ஆலோசனை அளிக்கிறார். கர்த்தருக்காக கொடுக்காமல், ஒரு ஈர்ப்பின் அடிப்படையில் அல்லது வரங்கள் அல்லது திறமைகளின்படி ஒருவருக்கு கொடுக்க மக்கள் தவறாக வழிநடத்தப்படலாம். கொடுப்பது என்பது மகிழ்ச்சியாகவும், சிரத்தையுடனும், ஆவிக்குரிய ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
நிதி திரட்டுதல்:
நிதி திரட்டுவதில் ஆர்வமுள்ளவர்களால் தனது வருகை தவறாக பயன்படுத்துவதை பவுல் விரும்பவில்லை. பவுலின் ஊழியம், தேவ ஜனங்களை நிதி ரீதியாக சோர்வடையச் செய்யாமல், அவர்களை ஆயத்தப்படுத்துவதும், அதிகாரம் அளிப்பதும், தரிசனத்தைக் காட்சிப்படுத்த உதவுவதும், புத்துணர்வு அளிப்பதும் மற்றும் புதுப்பிப்பதாகும்.
தேவனால் செலுத்தப்பட்டது:
பார்வோனின் மகள் மோசேயின் தாயான யோகெபேத்திடம் மோசேயை வளர்க்க கூறினது மட்டுமல்லாமல், அவளுக்குப் பணமும் கொடுப்பாள். (யாத்திராகமம் 2:9). ஊழியர்கள் கர்த்தருக்காக தேவ ஜனங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள். எனவே அவர் அவர்களின் தேவைகளைச் சந்திக்கிறார்.
கொடுப்பதன் மூலம் தேவனின் தரத்தை நான் புரிந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்