முற்பகல் செய்யின் பிற்பகல்..... (மகிழம் பூ)

தொடர் - 11

கடிதத்தை பிரித்து வாசித்தவள் சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டாள். உள்ளூரில் ஒன்று விட்ட தமக்கை எழுதியிருந்தாள். அவளுடைய கண்ணீர் முத்துக்கள் பட்டு எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்திருந்தன.

மதியம் 12.30 கடிதத்தில் கூறியபடி செயிண்ட் தாமஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேப்பலில் மாலாவை சந்தித்தாள் சத்யா.

“சித்தி” சத்யாவின் தோளில் முகம் புதைத்து தேம்பினாள் மாலா.

“மாலா. தைரியமா இருக்கணும். யாரும் வந்திடப் போறாங்க. முதுகை மெல்ல வருடினாள். “எப்பவும் நடக்கறதுதானே. இயேசப்பா.... அவர்தானே உனக்கு அப்பா. அவரு கிட்ட எல்லாத்தையும் சொல்லு. பொறுமையா இரு. கர்த்தர் நன்மையாக எல்லாத்தையும் மாற்றுவார்”.

“சித்தி! காலையில மாமியாரிடம் காபி கொடுத்தா “அங்க வச்சிட்டு போன்னு சொல்றாங்க. வச்சிட்டு வந்திட்டம்ன்னா.... தன் மகன் கிட்ட “கையில கூட காபியை கொடுக்க மாட்டேங்கிறா... அங்க பாரு ஆறிப்போய் கிடக்கு” ன்னு ரிப்போர்ட் பண்றாங்க. இவரு என்னைத் திட்றார். கையில கொடுத்தா குறைஞ்சி போயிடுவையோ? மகாராணி! வேலைக்குப் போகுறோம்ன்னு மமதை”ன்னு திட்றார். சாப்பாடு எல்லாத்தையும் மேஜை மேலே எடுத்து வச்சிட்டுத்தான் வர்றேன். என்னை வேலைக்காரியாத்தான் எங்க மாமியார் நடத்துறாங்க. தொட்டதுக்கெல்லாம் குறைசொல்றாங்க. மலடியை எம் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்” ன்னு என் காதில் படும்படி சத்தம் போட்டு புலம்புறாங்க.”

“மேரேஜ் ஆகி மூணு வருஷம்தானே ஆகுது.” சத்யா கேட்க, 'ஆமாம்' என்பதற்கு அடையாளமாய்த் தலையை ஆட்டினாள் மாலா.

“எதற்கெடுத்தாலும் 'நீ சம்பாதிக்கின்ற திமிர்ன்னு திட்றார். இவங்க பெண் கேட்டு வந்தப்ப நான் அம்மாகிட்ட சொன்னேன், இந்தக் கல்யாணம் வேண்டாம்”ன்னு. அம்மாவும் அப்பாகிட்ட “ஆசிரியர் வேலை அல்லது ஆபிஸ் வேலை பார்க்கிற பையனா பாருங்க. “பேன்ஸி ஸ்டோர்'” வச்சிருக்கிற இந்த மாப்பிள்ளை வேண்டாம்ன்னு. அப்பா, ”உன் இஷ்டப்படி எல்லாம் நான் ஆட முடியாது. என்னால முடிந்தது இதுதான். “காலேஜ்க்கு அனுப்ப வேண்டாம்ன்னு” சொன்னேன். அப்பவும் என் பேச்சை கேட்கலை. பி.எஸ்ஸி. பி.எட் படிக்க வைச்சு வேலையும் வாங்கி கொடுத்தாச்சு. என் சக்திக்கு இந்த மாப்பிள்ளை தான் முடியும். வலிய வந்து கேட்கிறாங்க. வேண்டாம்ன்னா உம் பொண்ணுக்கு கல்யாணம்ன்றதையே நீ மறந்திடுன்னு” கத்தினார். அப்பா முன்கோபம் தான் உங்களுக்குத் தெரியுமே” நிறுத்தினாள் மாலா. “போனது போகட்டும் மாலா. தன்னை விட தன் மனைவி அதிகமாக படிச்சிருக்கிறதையோ, அதிகமா சம்பாதிக்கிறதையோ, நல்ல பதவியிலிருப்பதையோ சில ஆண்கள் விரும்ப மாட்டாங்க. வீண் சண்டை எதுக்கு? உன் கணவனோடு பக்குவமாகப் பேசு. நீங்க விரும்பலைன்னா நான் வேலைக்குப் போகலைன்னு . சொல்லு.”

“சித்தி! அதையும் சொல்லிப் பார்த்திட்டேன். “என்ன சொன்ன? வேலையை விடறையா? விளையாடுறையா? உனக்கு தெண்டச்சோறு போடவா கட்டிட்டு வந்தேன்?*ன்னு கத்தறார் சித்தி. அதெல்லாம் போகட்டும் சித்தி. இப்ப என்னன்னா? அப்பாவுக்கு ஸ்டோக் வந்து படுத்த படுக்கை ஆயிட்டார். அண்ணனும் அண்ணியும் சரியா கவனிக்கிறதில்லை. அம்மாதான் போனவருஷமே போய் சேர்ந்திட்டாங்களே! என்னை ரொம்ப நினைக்கிறார். போயிட்டு வரலாம்ன்னா இவங்க ரெண்டு பேரும் விட மாட்டேங்கிறாங்க?” கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தன.

“நீ போய்ப் பார்க்கவே இல்லையா?” ஆச்சரியமாகக் கேட்டாள். 

ஒரு முறை எல்லோரும் போய் பார்த்திட்டு வந்ததோட சரி” பெருமூச்சு அவளிடம் பிறந்தது.

பின் அவளே தொடர்ந்தாள். “அம்மா இருந்தாங்கன்னா நான் கவலைப்பட வேண்டியதில்லை. என் கண்ணீர் வாழ்வைப் பார்த்து, பார்த்து அவங்க நெஞ்சே வெடிச்சிருச்சுப் போல, மாரடைப்பில போய் சேர்ந்திட்டாங்க”” “நான் பண்ண பாவம்.. என் பிள்ளையைப் பிடிச்சு :வாட்டுது”ன்னே அடிக்கடி அம்மா சொல்லி அழுவாங்க. இப்ப...... அப்பாவும் “நான் செய்த துரோகம் என் பிள்ளையே என்னைக் கேவலமாகப் பேசுது. என் மகள் முகத்தைக் கூடப்பார்க்க முடியலை. மருமக நாயிலும் கேவலமா என்னை நினைக்கிறா. பிச்சைக்காரனுக்கு கிடைக்கிறது கூட எனக்கு இல்லைன்னு” பக்கத்துவீட்டு மாமாகிட்ட சொல்லி அழுதாராம். மாமா எனக்குப் போன் பண்ணி, “ஒரு தடவை நீ வந்து பார்த்திட்டுப்போமா. நரக வேதனையை அனுபவிக்கிறார்.” அப்படின்னு சொன்னாங்க. நான்தான் போக முடியலையே. எங்கப்பா உயிரோடிருந்து சித்ரவதைபடுவதை விட இறந்திட்டா கூட நல்லதுன்னு தோணுது.” முகத்தை கைகளில் புதைத்து விம்மினாள்.

“கடவுள் செய்யறதெல்லாம் நன்மைக்குத்தாம்மா. அம்மா கண்மூடும் முன் ஆலயத்திலே போய் பாவமன்னிப்பு கேட்டாங்க. அதே மாதிரி அப்பாவும் கடவுள் கிட்ட பாவமன்னிப்பு கேட்டு, தன் பாவத்துக்கு பரிகாரம் பண்ணினா நல்லது கிடைக்கும். பாவமன்னப்பு பெறாம அவர் உயிர் போகாது.'திட்டமும் தெளிவுமாகப் பேசினாள் சத்யா

“சித்தி! நீங்க என்ன சொல்றேங்க? அப்பாவும் அம்மாவும் பாவம் பண்ணினாங்களா? என்ன செய்தாங்க சித்தி?” அதிசயமாகச் சித்தியை பார்த்தாள் மாலா.

திருமணமாகி, கிரேஸி என்ற ஒரு குழந்தையும் இருந்துச்சு. உங்க அப்பாவுக்கு வேலை மாறுதலாகி இங்க வந்ததும் உங்க அம்மாவை விரும்பி கல்யாணம் பண்ணிட்டார். அப்ப..... அந்தக் குழந்தைக்கு நான்கு மாதம் தான். அவர்களை விட்டு விட்டு... வந்துட்டார். கமலம் கண்ணீர் விட்டாங்க. அதிகம் படிக்காத அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு தன் மகளை வளர்த்தாங்க. இப்ப நல்லாயிருக்காங்க.”

“சித்தி! அவங்களை உங்களுக்குத் தெரியுமா? எங்க இருக்காங்க?” ஆவலோடு கேட்டாள். 

சிதம்பரத்திலே இருக்காங்க. அவள் பட்ட பாட்டுக்கு விடிவு காலம் பிறந்தது. நல்ல இடத்திலே சம்பந்தம் பண்ணியிருக்காங்க. அவ மருமகன் தம் மாமியாரை தன் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறார். நோவா ஜெயசீலன்னு ஒரு பேரன் கூட இருக்கிறான்.” தன் விழிகளைக் கொட்ட கொட்ட விழித்தபடி ஆச்சரியமாக தன் சித்தியைப் பார்த்தாள்!

சிறிது நேரம் எதையோ யோசித்தபடி இருந்தாள். “பாவம் பெரியம்மாவும், அக்காவும். அவங்க நல்லா இருக்கட்டும்” என்றாள். 

பின் எதையோ யோசித்தபடி, “சித்தி! அப்பா அம்மா செய்த பாவம் பிள்ளைகளைத் தாக்குமா? அன்பே உருவான இயேசு சாமி அப்படி தண்டிப்பாரா?

“ஒருவர் செய்த பாவத்தை மூன்றாம், நாண்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறார்தான், வேதம் சொல்லுது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள். ஒருவருக்கு திருமணமே இல்லை. இரண்டு சகோதரர்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் அல்லது திருமணமானாலும் குழந்தையில்லாமல் இருக்காங்க. அவங்க பையனுடன் பேசும்போது “எங்க குடும்பத்தில் நான்காவது தலைமுறையா பெண்மக்கள் வாழ்வு மலராமலேயே இருக்கு. எங்க அத்தைமார் இருவரிலும் ஒருவருக்கு திருமணம் ஆகலை. மற்றொருத்தருக்கு கல்யாணம் பண்ணியும் குழந்தை இல்லை. எங்க தாத்தாவோட தாத்தா வேட்டைக்குப் போனப்ப ஒரு வேடுவப் பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணிட்டாராம். அந்தப்பெண் 'உன் குடும்பத்தில பெண் மக்கள் வாழ்வு சீரழிஞ்சு போகும்'ன்னு சாபம் போட்டுட்டு தூக்குப்போட்டு செத்துப் போயிடிச்சாம். அதனாலதான் எங்க குடும்பத்தில் இப்படி ஆசீர்வாதம் இல்லாம இருக்குன்னு. சொன்னாங்க என்று கூறினான்.” என்று சத்யா கூறவும்,

“சித்தி! அப்படின்னா... எங்க அப்பா, அம்மா செய்த பாவத்துக்கு நான் தண்டனை அனுபவிச்சுதான் ஆகணுமா? எனக்கு குழந்தையே பிறக்காதா? அப்படின்னா..... என்னை விவாகரத்து பண்ணிடுவாங்க. இப்பவே மாமியார் 'இவளை டைவர்ஸ் பண்ணிடுடா வேறு பொண்ணு பார்க்கலாம். உன்ன கல்யாணம் பண்ண க்யூவில நிப்பாங்கடா”ன்னு ஒதிக்கிட்டு இருக்காங்க. அப்படி ஏதாவது நடந்தா நான் அனாதைதான் சித்தி. அந்த மெர்ஸி அக்காவிற்காவது அவங்க அம்மா இருந்தாங்க. எனக்கு யாருமே இல்லை.” விசும்பினாள். விரக்தி அவள் விழிகளில் மண்டிக் கிடந்தது.

“பைத்தியம்! நீ அனாதையா? உனக்கு அப்பாவா தேவாதி தேவனும் கர்த்தாகி கர்த்தாவாகிய பிதா இல்லையா? அம்மாவா பரிசுத்த ஆவியானவர் இல்லையா? உனக்கு ஆலோசனை சொல்லவும், உன்னைத் தேற்றவும் பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்தவும் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்யவும் பிதாவிடம் உனக்காக பரிந்து பேசவும் செய்கின்ற பரிசுத்த ஆவியானவரே உன் தாய். உனக்காக யாவையும் செய்து முடிக்கும் இயேசுவானவரே உன் சகோதரன். தெரிந்ததா? ஆண்வரிடம் “மூதாதையின் சாபமோ, பாவமோ என் மீது சுமர வேண்டாம். தகப்பனே! என் பாவத்தையும், சாபத்தையும் நீக்க இயேசுவானவர் சிலுவையில் தன் ஜீவனைத் தந்தார். எனக்கு நல்வாழ்வு தாரும் என்று ஜெபி. அதை விசுவாசி. அறிக்கையிடு. நீதி உண்டாக இருதயத்திலே விசுவாசிக்க (உறுதியாக நம்ப) வேண்டும். மீட்பு உண்டாக வாயினால் அறிக்கை செய்ய வேண்டும். கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” என்று திருமறை கூறுவதன் படி உன்வாழ்வு வளம் பெறும். அப்பாவின் மனந்திரும்புதலுக்காக மன்றாடு. நானும் ஜெபிக்கிறேன். ஜெபித்து விட்டு மீண்டும் அப்பாவை பார்க்கப் போக பெர்மிஷன் கேளு. கிடைக்கலைன்னா வருத்தப்படாதே. கணவனின் அன்பு இன்றி கமலமும், தகப்பனின் அன்பு இன்றி கிரேஸியும் அவதிப்பட்டதை போல இவரும் அனுபவிக்க வேண்டும் என்பது தேவ சித்தமாய் இருக்கலாம். உங்க சித்தப்பாவைப் போய் பார்க்கச் சொல்றேன்.”

“பெற்ற தகப்பனை பார்க்கவே உனக்கு அனுமதி கிடைக்கலை. இதில வீண் ஆசை எதற்கு? அவர்களுக்காகவும் ஜெபி. காலம் கனியட்டும். உன் புருஷன் திருந்தட்டும். மூடப்பட்ட வரலாறு வெளியாவது தேவ சித்தமாய் இருந்தால், கடவுள் வாய்ப்புத் தருவார் நீயா ஏதாவது உளறிக் கொட்டிடாதே. கவனமாயிரு போயிட்டு வரேன்.” என்று சத்யா கூறவும் பள்ளி மீண்டும் ஆரம்பிப்பதற்கான முதல்மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

தேங்ஸ் சித்தி. சித்தப்பா அப்பாவைப் பார்த்திட்டு வரவும் என்னைப் பார்க்க வர்றீங்களா?” ஏக்கம் அவள் சொற்களில் வழிந்தது.

“கட்டாயம் வருவேன்” என்று கூறியபடி விடை பெற்றாள்.

“சரிங்க சித்தி!” பேசாமல் இருந்தாள்.

“என்ன மாலா?”

என்றவள் கொஞ்ச நேரம்

கமலா பெரியம்மாவையும், கிரேஸி அக்காவையும் பார்க்கணும் போல இருக்கு.” பாசம் வார்த்தைகளில் வெளி வந்தது.

இதன் தொடர்ச்சி பலவான் கை அம்புகள் என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download