உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த புதிய தகவல் யுகத்தில், ஆதிக்கம் செலுத்துபவர்கள் அநேகர் தோன்றியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பலர் தவறான மாதிரிகளாக இருக்கிறார்கள், ஒரு சிலர் பொய்யை ஊக்குவித்து மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.
சமூக ஊடகங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவோர்:
ஆதிக்கம் செலுத்துபவர் ஒரு பிரபலமான சமூக ஊடகப் பணியாளர் ஆவார், அவரைப் பின்தொடர்பவர்களை அல்லது ரசிகர்களின் முடிவுகளை கட்டாயப்படுத்தவும் தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும். அவர்கள் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், அவர்கள் தங்கள் ரசிகர்களுக்கு கல்வி, பொழுதுபோக்கு, ஊக்கம் மற்றும் ஈடுபாடு தரும் உயர்தர உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்குகிறார்கள்.
தெய்வீக தாக்கத்தை ஏற்படுத்துவோர்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தேவனால் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, உலகிற்கு அனுப்பப்பட்டவர்கள். தெய்வீக தாக்கத்தை ஏற்படுத்துவோர் தற்போதைய சூழலை மாத்திரமல்ல, ஆனால் நித்தியத்திற்கு நேராய் வழி நடத்துகிறார்கள்.
ஒளி:
கர்த்தராகிய இயேசு சீஷர்களுக்குக் கற்பித்தார், சீஷர்கள் உலகத்தின் வெளிச்சமாயும் மற்றும் பூமிக்கு உப்பாகவும் இருக்கிறார்கள் (மத்தேயு 5:13-16). ஒரு கிறிஸ்தவ சீஷனின் செல்வாக்கு ஒரு மலையின் மீது அமைக்கப்பட்ட நகரத்தைப் போல பிரகாசிக்கிறது. ஆம், மிகுந்த பிரகாசம், ஒளிவுமறைவு இல்லை, எல்லாரும் பார்க்கக்கூடிய வகையில் வெளியே தெரியும். வீட்டில் ஒரு இடத்தில் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது, அது மூடி வைக்காமல் அல்லது எவ்வித தடையின்றி வைக்கப்படும் போது வீடு முழுவதும் வெளிச்சம் இருக்கும். ஆக, தேவ ஜனங்கள் வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் முழு சமூகத்திற்கும் அல்லது சமுதாயத்திற்கும் தவிர்க்கமுடியாத ஒரு தாக்கம். ஒரு விசுவாசியின் செல்வாக்குடன் ஒப்பிடும்போது, ஒரு சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர் ஒரு வெளிர் நிழலே.
உப்பு:
உணவில் அதன் இருப்பு குறைவாக இருந்தாலும், அது சுவை சேர்க்கிறது. உணவைப் பாதுகாக்கவும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. தெய்வீக தாக்கத்தை ஏற்படுத்துவோர் உப்பு போன்ற இரண்டு விஷயங்களைச் செய்கிறார்கள். சீஷர்களின் இருப்பு அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையில் சுவையையும் மணத்தையும் சேர்க்கிறது. அவர்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் கற்பித்து நிரூபிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை தேவனளித்த வரம் என்றும் கொண்டாடுகிறார்கள். விசுவாசிகள் ஒரு கலாச்சாரத்தில் ஒழுக்கத்தின் பாதுகாவலர்கள். அவர்களின் இருப்பு இல்லாமல் கலாச்சாரம் மற்றும் நாடுகள் குழப்பத்திலும் பேரழிவிலும் மூழ்கிவிடும்.
சாட்சி:
உயிர்த்தெழுந்த இரட்சகர் தம் சீஷர்களுக்கு எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் உலகின் கடைசிப் பகுதியிலும் சாட்சியாக இருக்கும்படி கட்டளையிட்டார் (அப்போஸ்தலர் 1:8). அவருடைய சாட்சிகளாக இருப்பது எல்லா சீஷர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு பாக்கியம், மரியாதை மற்றும் பொறுப்பு. விசுவாசிகள் சுய-சாட்சிகள் அல்ல, அவர்கள் தேவன், அவருடைய அன்பு, கிருபை, நீதி, ஞானம், வல்லமை, சத்தியம், மகிமை, மீட்பு, பரிசுத்தம் ஆகியவற்றின் சாட்சிகள் மற்றும் அவருடைய ராஜ்யத்தின் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
நான் தெய்வீக தாக்கத்தை ஏற்படுத்தும் நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்