திசை திருப்பப்பட்ட அற்புதம்

முதல் மிஷனரி பயணத்தில் பவுலும் பர்னபாவும் லீஸ்திராவிற்குச் சென்றனர்.  அங்கு அவர்கள் நற்செய்தியை அறிவித்தனர். அங்கு "ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலுூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்". இந்த அற்புதத்தைக் கண்ட ஜனங்கள் தவறாக புரிந்துகொண்டு, பவுல் மற்றும் பர்னபாவை கிரேக்க கடவுள்களான மெர்க்கூரி மற்றும் யூப்பித்தர் என்று நினைத்தார்கள் (அப்போஸ்தலர் 14:8-12).  உண்மையைச் சொல்லப்போனால், அந்த அதிசயம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

1) மகத்துவமான அதிசயம்:

லீஸ்த்ராவில் இருந்தவர்கள் செய்தியைக் கவனமாகக் கேட்டார்கள்.  ஊனமுற்ற மனிதனைப் போலவே அவர்களும் அச்செய்தியைப் புரிந்துகொண்டிருக்கலாம். ஊனமுற்ற மனிதன் நடந்து செல்லும் அதிசயத்தையும் கண்டனர்.

2) தவறான அடையாளம்:

இந்த அற்புதம் எப்படி நடந்தது என்றும், அந்த வல்லமையின் ஆதாரம் அவர்களின் கேள்வியாக இருந்தது.  மெர்க்கூரி மற்றும் யூப்பித்தர் ஒருமுறை லீஸ்திராவுக்கு வந்ததாக ஒரு புராணக்கதை இருந்தது, வந்தவர்களை நகரத்தில் யாரும் அடையாளம் காணவில்லை.  அவர்களுக்கு விருந்தோம்பல் மறுக்கப்பட்டது.  அப்போது ஒரு வயதான தம்பதிகள் மட்டும் அவர்களை உபசரித்தனர்.  அதனால் கோபத்தில், அந்த கிரேக்க தெய்வங்கள் முழு நகரத்தையும் அழித்து, வயதான தம்பதிகளை மட்டும் காப்பாற்றியதாக கதை உண்டு. இந்த புராணத்தின் காரணமாக, இப்போதும் கிடைத்திருக்கும் வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் நகரத்திற்கு வந்திருக்கும் தேவர்களின் வரவை இழக்க விரும்பவில்லை.  எனவே, அவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் அதிகப்படியான உபசரிப்பு காட்டினார்கள். ஆனால் அவர்கள் வல்லமை கடந்து வந்ததை கவனிக்க முடிந்தும்; வல்லமையின் மூலத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

3) தவறான வழிபாடு:

"பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்". ஆக அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வழிபாடு என்பது பலியாகவும் விருந்தாகவும் இருந்தது. மேலும் விருந்தினர்கள் மரியாதைக்குரியவர்கள் தேவனுக்கு சமம், ஆகையால் அவர்கள் வணங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ஒருமித்த கருத்தாக இருந்தது.

4) தீங்கான திருப்பம்:

பவுலும் பர்னபாவும் தங்களுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, தங்களுக்கு ஜனங்கள் வழிபாடு செய்யாமல் இருக்கத் தடை செய்தார்கள். பின்பு யூதர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட கும்பல் பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

5) அற்புதமான தேவனவர்:

தேவனுடைய வழிகள் அற்புதமானவை.  இந்தக் கைகலப்பில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தெரிந்துகொண்டு, தன் வாழ்க்கையைப் அருட்பணிக்காக அர்ப்பணித்த இளைஞரான தீமோத்தேயு இருந்தான் (அப்போஸ்தலர் 16:1). அதிசயம் அல்ல, துன்பம் தீமோத்தேயுவை கர்த்தரிடம் கொண்டு வந்தது.

நான் அற்புதங்களில் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறேனா அல்லது சிரத்தையுடன் சத்தியத்தைத் தேடுகிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download