ஒரு கல்லூரியில் கட்டுக்கடங்காத, கல்லூரி விதிமுறைகளை மதிக்காத சில மாணவர்கள் இருந்தனர். அவர்களுக்கு படிப்பின் மீது எந்த அக்கறை இல்லை. நன்கு படிக்கும் மற்றும் கல்லூரி ஒழுங்குகளுக்கு கீழ்ப்படியும் மாணவர்கள் மீது எரிச்சலடைந்து அவர்களை வம்புக்கு இழுப்பதும், கேலி செய்வதும், துன்புறுத்துவதும், கொடுமைப்படுத்தவும் என இருந்தனர். ஆசிரியர்களையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இந்தக் கட்டுக்கடங்காத மாணவர்கள் இருந்த வகுப்புகளைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் மாணவர்களாக இருந்ததால், நகரத்தில் உள்ள கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார்கள். எனவே, சில மாணவர்களை வெளியேற்றும் ஒழுங்கு நடவடிக்கையை, கல்வி நிர்வாகம் எடுக்க வேண்டியிருந்தது. கட்டுக்கடங்காத மாணவர்களைப் போலவே, சபையிலும் கூட சில உறுப்பினர்கள் ஒரு சபையைச் சேதப்படுத்தலாம். ஆம், "புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்" (கலாத்தியர் 5:9). கொரிந்து பட்டணத்திலுள்ள சபையிலும் கூட இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களைப் போல சில ஒழுங்கில்லாத விசுவாசிகள் இருந்து கொண்டு சபை விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதும் ஆணையிடுவதுமாக இருந்தனர்.
கற்க மறுத்தல்:
சபையின் சில உறுப்பினர்கள் உள்ளூர் சபையை தவறாக வழிநடத்தலாம், திசைதிருப்பலாம் மற்றும் சேதப்படுத்தலாம். அவர்கள் சத்தியத்தையோ நீதியையோ கற்று, அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில்லை.
சீஷர்களை திசை திருப்புதல்:
இந்த கட்டுக்கடங்காத உறுப்பினர்கள் சபையின் பணி, தேவ தரிசனம் மற்றும் தேவ ராஜ்யத்திற்கான முன்னுரிமை ஆகியவற்றிலிருந்து சீஷர்களை திசை திருப்புகிறார்கள். முணுமுணுத்தல் மற்றும் கிசுகிசுக்கள் மூலம், அவர்கள் சபைக்குள் குழப்பத்தையும், பிளவையும் உருவாக்கி, வெறுப்பு விதைகளை விதைக்கிறார்கள்.
போலி தலைவர்கள்:
இந்த கட்டுக்கடங்காத உறுப்பினர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட தலைவர்கள், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மந்தையை பராமரிக்கும் மேய்ப்பர்களை கேலி செய்கிறார்கள். அவர்களின் போதனைகளைக் கேட்டு, அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்களின் கண்டிப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் தலைவர்களுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள்.
சாட்சியில்லாத நிலை:
இவ்வாறு, உள்ளூர் சபை அதன் சாட்சியை இழந்து இருளில் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கத் தவறுகிறது. சபைக்கு வெளியே உள்ளவர்கள் சபை உறுப்பினர்களின் வாழ்க்கையில் எந்த வித்தியாசத்தையும் தனித்துவத்தையும் பார்க்க முடிவதில்லை. எனவே, ஒரு உள்ளூர் சபை சுற்றியுள்ள மக்களுக்கு சாட்சியாக அல்லது உதாரணமாக இல்லை.
ஒழுங்கு நடவடிக்கை:
அந்த கட்டுக்கடங்காத உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவுல் அறிவுறுத்துகிறார். இப்படி குழப்பத்தை அல்லது களைகளை விதைக்கும் உறுப்பினர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதும், பாதுகாப்பதும் என இருப்பதற்குப் பதிலாக, தலைமைத்துவம் அத்தகையவர்களை மனந்திரும்புவதற்கு ஏதுவாக கடுமையாக கண்டிக்க வேண்டும். அப்படி அவர்கள் மனந்திரும்ப விரும்பவில்லை என்றால், அவர்கள் அவிசுவாசியாக நடத்தப்பட வேண்டும்.
பவுல் அறிவுரை:
ஒழுக்கக்கேடான, பேராசை கொண்ட, விக்கிரக ஆராதனை செய்பவர்கள், பழிவாங்குபவர்கள், குடிகாரர்கள், மோசடி செய்பவர்கள் போன்ற ஒழுக்கக்கேடான நபர்களுடன் பழக வேண்டாம் என்று பவுல் அறிவுறுத்துகிறார். அவர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் (1 கொரிந்தியர் 5:11-13). இது புற்றுநோய் செல்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்வது போன்றது என்பதை மனதில் கொள்வோம்.
அடங்காத விசுவாசிகளை கண்டித்து மனந்திரும்பும்படி நான் அழைக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்