ஏமாற்றம்!

தொடர் - 17

புனித பேதுரு தேவாலயம் அன்று நிரம்பி வழிந்தது. நாகரீக உடையணிந்த நகரவாசிகளும், அள்ளி முடிந்த கொண்டையும், வாரிச்சொருகிய சேலையும் கொண்ட கிராமவாசிகளும் இரண்டறக் கலந்திருந்தனர். மணமகள் வசந்தி, அன்றலர்ந்த மலர்போல் அழகாக இருந்தாள். அவள் சிரத்தை மூடி பின் தொங்கிய வெண் துகிலை இரு சிறுமியர் பிடித்து வர அழகிய இளவரசி போல், சபையின் இசைக்குழுவினரின் இசை முழங்க, குருவானவர் முன் நடக்க குனிந்ததலை நிமிராமல் அடிமேல் அடியெடுத்து நடந்து வந்தாள். பெண் என்றால் பெண்தான். படித்தவள், பட்டம் பெற்றவள், பட்டிக்காட்டுப் பெண் என்றே பேதமில்லை. நாணம் அவளது விசேஷப்பண்பு. அது அவளுக்கு அதிக அழகைக் கொடுக்கிறது என்றாலும் மிகையில்லை.

திருமண ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமகனின் வாக்குறுதிக்குப் பின் மணமகள், “வசந்தியாகிய நான், துரைராஜ் ஆகிய உம்மை இன்று முதல் எனக்கு விவாக புருஷனாக ஏற்றுக்கொண்டு தேவனுடைய பரிசுத்த நியமத்தின்படி நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும், மரணம் நம்மை பிரிக்குமளவும், உம்மை நேசிக்கவும், ஆதரிக்கவும், உமக்குக் கீழ்ப்படியவும் வாக்குக் கொடுக்கிறேன்” திருமாங்கல்யத்தை வசந்தியின் சங்குக் கழுத்தில் அணிவித்தான் துரைராஜ். வசந்தியின் உள்ளத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதின. தான் முற்றிலும் ஒருவருக்கு சொந்தமாகிவிட்டோம் என உணர்ந்தாள்.

குருவானவர் அருளுரை வழங்கினார். “தேவசத்தத்திற்குக் கீழ்ப்படிந்து ரெபேக்காள் ஈசாக்குக்கேற்ற மனைவியாக விளங்கியதைப் பற்றி எடுத்துரைத்தவர். “இறைவன் விரும்பும் இல்லறமாக உங்கள் இல்வாழ்வு திகழ தேவனை பிரதானமானவராக, தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவரைத்தேடுங்கள். அப்பொழுது தென்படுவார். கேளுங்கள், தருவார், ஆண்டவரோடு நீங்கள் பேசுங்கள் (ஜெபியுங்கள்) அவர் பேசுவதைக் கவனித்துக் கேளுங்கள் ஆம் ஜெபமும், வேதவாசிப்பும் இன்றியமையாததாக இருக்கட்டும். கடவுள், கணவன், மனைவி என்ற முப்புரி நூலாக இல்லறம் இருப்பின் அது எச்சந்தர்ப்பத்திலும் அறுந்து போகாது. நீவிர் இருவரும், ஒருவரை ஒருவர் நேசியுங்கள் பின் ஒருவரை ஒருவர் பாருங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள்.

பார்வைக்கு முதலிடம் கொடுப்போமானால் தன் துணையிடம் காணப்படும் வெளிப்படையான உருவத்தையே காண்பீர். அது மாயை! நீ காணும் அழகோ, அலங்காரமோ, இளமையோ என்றும் உன்னோடு வரப்போவதில்லை. ஒருவரை ஒருவர் புரிந்தபின் அன்பு செலுத்துவேன் எனக் காத்திருத்தல் வீண். எந்த இருவருடைய எண்ணமும் எல்லாவற்றிலும் ஒத்துப்போகாது! மற்றும் முழுமையாக மனிதனைப் புரிந்துகொள்ள இறைவன் ஒருவரால் தான் முடியும்.

எனவே முதலாவது அன்பு செலுத்துங்கள். மணமகன், “தேவன் எனக்களித்த மனைவி” என்றும், மணமகள். “தேவன் எனக்கருளிய கணவர்” என்றும் அன்பு செலுத்த ஆரம்பியுங்கள். அதன்பின் ஒருவரை ஒருவர் பாருங்கள். அப்பொழுது குறைகள் மறையும், நிறைகள் தென்படும். குறையிருப்பினும் அன்பினால் திருத்த முற்படுவீர். ஒருவரை ஒருவர் புரிந்து, இணங்கி நடக்க முயற்சிப்பீர். எனவே அன்பு செலுத்துவீர். எல்லா நலன்களும் பெற்று வாழ திரியேக தெய்வம் அருள் புரிவாராக”.

ஆலய ஆராதனை முடிந்தது.

இரவு நேரம்! வீட்டின் கலகலப்பு குறைந்துவிட்டது. நெருங்கிய உறவினர் மட்டும் இருந்தனர். மாடியிலுள்ள அறையில் வேதம் வாசித்தபடி அமர்ந்திருந்தான் துரைராஜ், அவ்வறையின் வாயில்வரை வசந்தியை அழைத்துக்கொண்டு வந்தவர்கள், அவளை அங்கே விட்டுவிட்டுப் போய்விட்டனர். நிமிர்ந்து பார்த்த துரைராஜ், “வா வசந்தி” அன்போடு ஆரவாரமில்லாமல் அழைத்தான். அமைதியாக நடந்து சென்றாள். வசந்தி அருகில் வரவும், “உட்கார்” என்றான். கீழ்ப்படிந்தாள்.
“வேதம் வாசிப்போமா?” கேட்டவன் திருமறையைத் திறந்து பவுல் அப்போஸ்தலர் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் 5ஆம் அதிகாரம் 22 முதல் 33 வரை இருமுறை வாசித்தான். “ஜெபிப்போம்” என்றபடி முழங்காற்படியிட்டான். ஆனால் அவள் உள்மனமோ ஏமாற்றம் என்ற படு பாதாளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து கொண்டிருந்தது. “தான் “ திருமணம் புரிந்திருப்பது ஒரு சாமியாரோ?” என்ற எண்ணம் அலைமோதியது. பணம் படைத்தவன், ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்ற அவளது கற்பனைக் கோட்டை இடிய ஆரம்பித்தது.

இதன் தொடர்ச்சி   சுழன்றடித்த சூறாவளி!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை  இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Latchiya Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download