தொடர் - 8
ரவி கூறியது போல் இருநாட்களில் டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. ரவி மலர்க்கொடி திருச்சிக்குப் போய்விட்டார்கள். சர்ச் எலக்ஷனில் ரவி தன்னை ஏமாற்றி விட்டதை சற்று மறந்தார். எப்பொழுது பார்த்தாலும் வீடுகள் சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்பதிலும், ஆங்காங்கு கூடிப்பேசுவதிலும் சர்ச் எலக்ஷனில் போட்டியிடுபவர்கள் ஈடுபட ஆரம்பித்தனர். தனராஜ் வீட்டை மறந்தார். கூடும் இடங்களில் எல்லாம் தனராஜ் பர்ஸ் மட்டும் திறந்து, திறந்து மூடியது: மற்றவர் பர்ஸ பாக்கெட்டை விட்டு வெளியே தலைகாட்டவே இல்லை.
“நம்ம தனராஜ் கற்பகத்தரு கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று ஒருவர் புகழ்ந்தால் அவரைப் போன்ற வள்ளல் நவீன பாரி உண்டோ”? என மற்றவர் பின் பாட்டு பாட, தனராஜ் அகமும் முகமும் மலர்ந்து போவார், எலக்ஷன் முடிந்தது.
தனராஜ் பார்டி வெற்றி பெற்றது. பாராட்டுக் கூட்டம் முடிந்தது. பதவிகளைப் பங்கு போட்டனர். தனராஜ் தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென எண்ணி ஏமார்ந்தார். அவர் எதிர் பார்த்தபடி வேலை விஷயம், மாறுதல் விஷயம் மற்றும் பலகாரியங்களுக்காக தன்னை அனைவரும் நாடி வருவர் என பெருமையில் பூரித்திருந்தவர் ஏமாற்றமெனும் படுபாதாளத்தில் வீழ்ந்தார். இவற்றையெல்லாம் பார்த்த கவிதாவிற்கு அதிசயமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. சபையின் மூப்பர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென வேதம் குறிப்பிடுகிறது. தகுதியுடைய மக்களைத் தேர்ந்தெடுத்ததாக, பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் காண்கிறோம். யாக்கோபு சபையின் மூப்பர் ஜெபித்தால். வியாதி சுகமாக வேண்டுமென குறிப்பிடுகிறார். “இப்பொழுது நடக்குமா? நினைத்துப் பார்த்தாள் கவிதா. அன்று மக்களால் தகுதியுடையவர்களை “தெரிந்தெடுக்க தேவனிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். இன்றோ என்னைத் தெரிந்தெடு, என்னைத் தெரிந்தெடு'' என வீடுவீடாக அலையும் நிலை, இந்நிலை என்று மாறுமோ?
கவிதாவிற்கு தன் தந்தையின் மீது அளவற்ற இரக்கம் பொங்கியது. தன் தந்தை எல்லாவற்றிலும் ஏமாந்து போகிறாரே என்றெண்ணியபடி அலுவலகம் வந்தவள். தனக்கு வந்த கடிதத்தை ஆவலோடு பிரித்தாள்.
“என்னை மன்னித்து மறந்துவிடு: திக்பிரமை பிடித்தவள் ஆனாள். மீண்டும் மீண்டும் படித்தாள். கையெழுத்தைக் கவனித்தாள். ராஜசேகர், அவனுடையதே அவளால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கமுடியவில்லை ராஜசேகர்! அவரா? அவரா? எழுதியிருக்கிறார் நம்பமுடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை, ஆறு மாதங்களுக்கு முன் காஞ்சீபுரத்திற்கு. மாறுதலாகிச் சென்றான் ராஜசேகர், அதன்பின் ஓரிரு கடிதங்கள் வந்தன. மூன்றாவது கடிதம் இது! ராஜசேகர் தன்னிடம் சம்மதம் வாங்க அவன் கொடுத்த வாக்குறுதிகள், வடித்த கண்ணீர் அனைத்தும் அவள் நினைவில் எழுந்தது, எல்லாம் மாயையோ? பேதை திகைத்தாள். விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்,
வேதத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு குமுறிக் குமறி அழுதாள், “இயேசப்பா! ஏன் என்னைக் கைவிட்டீர்! புலம்பினாள். அவள் மனச்சான்று அவளோடு பேசியது, இந்தகாரியத்தில் நீ இயேசப்பாவிடம் கலந்து ஆலோசித்தாயா? இல்லையே! ஜாய்ஸி கூறிய அறிவுரையையும் காற்றிலே. பறக்க விட்டாயே! உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும், செய்வதறியாது தவித்தாள். சாத்தானும் வேலை செய்ய ஆரம்பித்தான். “நீ ஒரு பாவி; சீக்கிரம் தற்கொலை செய்து. இவ்வுலகைவிட்டு மறைந்துபோ பேசிக் கொண்டேயிருந்தான் இயேசுவின் பிள்ளையாகிய கவிதாவிற்கு தற்கொலை செய்து நரகத்தின் மகளாக வாழ விருப்பமில்லை! கறைபடிந்த வாழ்க்கையும் விருப்பமில்லை. தன்மனம் களங்கமடைந்ததால் துடித்தாள். துவண்டாள் ஆறுதலின்றி தவித்தாள் நாட்கள் ஆமையிலும் மெதுவாக நகர்ந்தன. ஆலயம் செல்ல கண்ணாடி முன் நின்றவள் தன்னையே பார்த்தாள் காலச் சக்கரசுழற்சியோ வேதனைத் தீயில் வெந்ததாலோ, பலத்த மாற்றத்தை உணர்ந்தாள், மெலிந்த சரீரம் ஆப்பிள் கன்னமென காலில் தன் தோழியர் கிள்ளும் கன்னங்கள் வற்றியிருந்தன. அன்று மையுண்ட விழிகள் கண்ணீரில் அடிக்கடி மிதந்ததால் சற்று குழிவிழுந்திருந்தன. அடர்த்த கேசம் உதிர்ந்து ஏதோ கொஞ்சம் இருந்தது. நிறம் கூட மாறியிருந்தாள் அன்றைய அழகுப்பதுமை, அழும்பதுமையாக இன்றுமாயிறிருந்தாள். அழகும்மாயை நிலைத்திடாதே என்ற பாடல் வெண்கலமணி ஓசையென அவள் செவிகளில் தொனித்தது. குளோரியின் அறிவுரைகள் காற்றில் மிதந்தது வந்தன.
ஆலயம் சென்றாள்! குருவானவர் பரிசுத்த ஆவியின் நிறைவில் அக்னிப் பிளம்பாகக் காட்சியளித்தார். அநாதி சிநேகத்தால் உள்னை சிநேகித்தேன். காருண்யத்தினால் உன்னை இழுத்துக் கொண்டேன். பிரசங்க வாக்கியம் அவள் நெஞ்சில் எதிரொலித்தது உனக்குத் தான்... உனக்குத்தான் பிரசங்கம் உனக்குத்தான், அவள் மனம் பேசியது குருவானவர் ஏதோ பிரசங்கிக்கிறார். எனக்குத்தான் என்று எப்படி எடுத்துக்கொள்ளுவது? கவிதா மனம் வினவ “கலங்கித்தவிக்கும் மகளே! பேசுவது நானல்ல! தேவன் பேசுகிறார். நான் ஒரு மைக்! அவ்வளவுதான் எனக் கூறியபடி உலக அன்பு மாயை, தேவ அன்பே நிலைநிற்கக் கூடியது என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார். கவிதாவின் நெஞ்சில் மெல்ல சமாதானம் புகுந்தது. ஆராதனை முடிந்து வீட்டிற்கு வந்தவள் தன் அறையில் புகுந்து முழங்காலில் நின்றாள். தன்னை முற்றிலும் தேவனுக்கு அற்பணித்தாள் அவள் முன் காட்சி விரிந்தது. அவள் மீது இயேசுவின் திரு இரத்தம் விழுந்தது அவள் பாவங்கள் அகன்றதை உணர்ந்தாள். ஆத்ம அமைதி அடைந்தாள்.
மறுநாள் அலுவலகம் முடிந்து வந்தவள், பஸ் ஸ்டாப்பில் அவள் கல்லூரித் தோழி குளோரியை வெண்ணிற ஆடையில் சந்தித்தாள். ஆனந்தமடைந்தாள். குளோரியின் வற்புறுத்தலுக்கிணங்க அவள் வீட்டிற்குச் சென்றாள். இருவரும் தத்தம் வாழ்க்கையைப்பற்றி பேசிக் கொண்டனர். கவிதா இரட்சிக்கப்பட்டதை அறிந்த குளோரி மிக மகிழ்ந்தாள்.
கவிதா நீ எந்த சர்ச்க்குப் போகிறாய்?
எதற்கு கேட்கிறாய்? நம்ம சர்ச்க்குத்தான் போகிறேன் குழப்பத்தோடு பதிலளித்தாள்.
“கவிதா!. நீ இரட்சிக்கப்பட்ட பிள்ளை! ஆவிக்குரிய பிள்ளைகளோடு ஐக்கியம் வைத்துக் கொண்டால் தான் முன்னேற முடியும் இந்த ஞாயிற்றுக் கிழமை எங்கள் வீட்டிற்கு வா. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்.
குளோரி! என்னை மன்னித்துவிடு! சபைப்பிரிவுகள் ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வது இல்லை. அவனுக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பு உறவுதான் முக்கியம்! அவனோடு கிறிஸ்தேசு! பேசுவதும் (வேதம் வாசிப்பது) அவன் கர்த்தரோடு பேசுவதும்(ஜெபிப்பது) அதிகமாக அதிமாக தேவனுக்கு உத்தம சாட்சியாக மாறுகிறான். பரம ராஜ்யத்திற்கு பங்குள்ளவனாகிறான்.
அதற்குப் பழக்குவிப்பதே எங்கள் குரூப் ஆவிக்குரிய விஷயத்தில் பலபடிகள் உண்டு இரட்சிக்கப்பட்டபின், அபிஷேகம் பெறவேண்டும் அந்நியபாஷை பெறவேண்டும். இந்த சத்தியங்கள் எங்கு கிடைக்கும் என நினைக்கிறாய்? நகைகளை வெறுத்து, தூய வெண்ணிற ஆடை அணிந்து இவ்வுலகில் பரிசுத்தமாக வாழவேண்டும். ஆத்திரமாகச் சொன்னாள் குளோரி.
அபிஷேகம் தேவை என்று சொன்னாயே ஒத்துக்கொள்கிறேன். அந்நிய பாஷை என்று கூறினாயே! எல்லாருக்கும் அந்நிய பாஷை கிடைக்காது. ஆவிக்குரிய பலவரங்களில் அதுவும் ஒன்று அபிஷேகம் என்பது ஏதோ ஒருநாள் நடந்து முடியும் சடங்காச்சாரமல்ல! அனுதினம் ஆண்டவர் பாதத்தில் காத்திருந்து .நாம் அபிஷேகிக்கப்பட வேண்டும், பரிசுத்த ஆவியினால் நிறையப்பட வேண்டும். நகைகளைக் கழற்றுவதும் வெள்ளை உடை அணிவதும் பரிசுத்தத்தைக் கொண்டு வராது. ஆடம்பரத்தைக் கண்டு வெறுக்கிறார்கள் என்றால் வரவேற்க வேண்டியதே! பாராட்டுக்குரியதே! மிக விலை உயர்ந்த வெண்ணிற ஆடை கைக்கடிகாரத்திற்கு தங்கத்தில் பட்டை (ஸ்டாப்) ஆடம்பரமான அழகுப் பொருட்கள் இவையெல்லாம் மட்டும் உபயோகிக்கலாமா?பரிசுத்தமென்பது வெளித் தோற்றத்தில்அல்ல மனதில்! வாழ்வில்! செயல்களில் உள்ளது, என்னைப் பொருத்தவரை ஆண்டவர் என்னை இரட்சித்தார். விசுவாசிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்துகிறார். உணருகிறேன், கர்த்தராகிய கிறிஸ்துவின் அடியாளாக இறுதிவரை வாழ என்னை வழி நடத்துவார். இன்னும் கிறிஸ்துவோடு, என் தந்தையாகிய அவரோடு நான் நெருங்கி வழவேண்டும். ஆவியின் கனி என்னில் காணப்பட சாட்சியின் வாழ்க்கை வாழவேண்டும். ஆவியின் வரங்கள் கர்த்தருக்கு சித்தமானால் தருவார்,” ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள் கவிதா!
உன் தந்தை உன்னை பகைப்பார் வீட்டில் எதிர்ப்பு வரும் என உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியின்றி வாழ விரும்புகிறாய் என எண்ணுகிறேன். என்னைப் பொருத்தவரை பவுல் அப்போஸ்தலரைப் போல கிறிஸ்து வுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்று ஒதுக்கி விட்டேன். என் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத்தடையான என் கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டேன்.
“யைத்தியச்காரி! கடவுள் சந்நிதியில் மரணம் தவிர எதுவும் பிரிக்காது என்று வாக்குக் கொடுத்த நீ அவரை பிரிந்துவந்துட்டேன் என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லை.
“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளோடு பிணைபடக் கூடாதென்று வேதம் கூறுகிறது, காரமாக பதில் சொன்னாள் குளோரி.
"உன் இஷ்டத்துக்கு வேதவசனத்தை கையாளாதே அவிசுவாசியான கணவனைக் கூட மனைவி பிரிந்துவரக் கூடாது மனைவியால் பரிசுத்தமாக்கப்படுவான் என்றும் அவள் அவனைத் தள்ளிவிடக்கூடாது என்றும் வேதம் கூறுகிறது. உன்னிடத்தில் உன் கணவனைப் பற்றியும் ஆண்டவர் கணக்குக் கேட்பார், மறந்து விடாதே! கணவரோடு இணைந்து எல்லாவகையிலும் தேவன் சித்தப்படி அவர் நாம மகிமைக்கு வாழவேண்டிய நீ தேவனை பிறர் தூற்ற இடம் கொடுத்து உன் கடமையை விட்டு விலகி விட்டாயே! இது பக்தி மயக்கமா மாயையா? ”ஆத்திரத்தோடு கேட்டாள் கவிதா.
இதன் தொடர்ச்சி மீண்டும் வசந்தம் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.