சமூக ஊடக தளங்களில் அதிக நேரம் செலவிடும் பல வாலிப வயதினர் மற்றும் இளைஞர்கள் மனச்சோர்வின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்குகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. விடாமல் தொடர்ந்து பயன்படுத்தி அடிமையாகாமல் இருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும். ஒரு குழந்தைக்கான கற்பித்தல், பயிற்றுவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவை பெற்றோரின் பொறுப்பாகும். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6). சமூக ஊடக தளங்கள் பதின்மூன்று வயதுடைய குழந்தைகளை பயனர்களாக மாற்ற அனுமதிப்பதால், பெற்றோருக்கு ஒரு அற்புதமான பொறுப்பு உள்ளது.
ஆன்லைன் ஆளுமை:
மெய்நிகர் இருப்பு உண்மையான இருப்பு என்று பிள்ளைகள் நம்புகிறார்கள். ஆன்லைனில் தாங்கள் காண்பதெல்லாம் நிஜம் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட விரும்புகிறார்கள், அதே நேரத்தில் மற்ற பார்வையாளர்களுக்கு பிரமிப்பு உணர்வைத் தருகிறார்கள். ஆன்லைன் ஆளுமையை விட அவர்களின் நிஜ வாழ்வின் (ஆஃப்லைன்) ஆளுமை முக்கியமானது என்பதை பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
முன்மாதிரி:
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். பல பெற்றோர்கள் தங்கள் உத்தியோகத்திற்காக அல்லது வணிகத்திற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆயினும்கூட, அவர்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் மற்றும் தேவைக்கு அப்பால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை அவர்கள் பிள்ளைகளிடம் நிரூபிக்க வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை இரவில் அல்லது சாப்பாடு நேரங்களில் வேறொரு அறையில் தங்களை விட்டு தூரமாக வைத்திருப்பார்கள்.
தூக்கம்:
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போதுமான தூக்கம் அவசியம். அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக இருந்தால் சமூக ஊடகங்கள் அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும். இரவு 10 மணிக்குப் பிறகு, குழந்தைகள் தங்கள் மொபைல் ஃபோனை அணைக்க வேண்டும், மேலும் அவர்கள் தினசரி ஜெபத்தையும் வேதாகமத்தைப் படிப்பதையும் முடிக்காத வரை மொபைலை தொடவே கூடாது. தொலைபேசிகளை தலையணைக்கு அடியில் அல்லது படுக்கைக்கு அருகில் வைப்பது நல்ல யோசனையும் அல்ல.
சரீர செயல்பாடு:
குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி சரீர செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். ஆரம்ப கட்டத்திலிருந்தே, குழந்தைகள் தங்கள் சரீரங்களை கவனித்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் சரீரம் என்பது பரிசுத்த ஆவியின் ஆலயம்.
ஞானம், பகுத்தறிவு மற்றும் முன்னுரிமை:
மொபைல் போனை பயன்படுத்த பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்த ஞானமும் விவேகமும் தேவை. சில அம்சங்கள் அவர்களின் படிப்பிற்கு உதவியாக இருக்கும், அர்த்தமுள்ள பொழுதுபோக்காக இருக்கும் விளையாட்டுகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், எப்போது, எப்படி என்பது ஒழுக்கம் மற்றும் முன்னுரிமையின் விஷயமாக இருக்க வேண்டும்.
நான் சமூக ஊடகங்களுக்கு அடிமையா அல்லது எஜமானா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்