தியோத்திரேப்பு, ஒரு சுய சேவிப்பாளன்

சில தலைவர்கள் தங்களையே சேவிப்பவர்களாகவும் மற்றும் ஒன்றுக்கும் உதவாத தலைவர்களாகவும் மாறுகிறார்கள்.  அவர்கள் ஒரு பெரிய வாக்குத்தத்துடன், அனைத்து திறன்களுடன், தாலந்துகளுடன் மற்றும் வரங்களுடன் மற்றும் சாதகமான சூழலைக் கொண்டு நல்ல தலைவர்களாக உருவாக கூடும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்; ஆனாலும், தோல்வி அடைகிறார்கள்.  அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று தலைவர்களைப் பற்றி எழுதுகிறார், அதில் இருவர் சிறந்தவர்கள்; காயு மற்றும் தேமேத்திரியு; மற்றுமொரு பயனற்ற தலைவன் தியோத்திரேப்பு  ஒருவேளை, அவன் ஒரு புறஜாதி பின்னணியில் இருந்து வந்த சீஷனாக இருக்கலாம்.  இது ஒரு பொதுவான பெயரல்ல, 'வியாழனால் வளர்க்கப்பட்டது' என்பது அவன் பெயரின் அர்த்தம்.

பெருமை:
தியோத்திரேப்பு பெருமிதம் கொண்டவன், அவன் தன்னைப் பற்றி உயர்வாக நினைத்தான், எனவே யோவான் உட்பட அப்போஸ்தலர்களின் அதிகாரத்தை நிராகரித்தான். சீஷர்கள் தேவ அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும், பின்னர் அவர்களுக்காக தேவன் நியமித்த தலைவர்களின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்.  தாவீதை வேட்டையாடிய சவுல் ராஜாவைப் போன்ற தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றனர்.  ஆனால் மற்றவர்களிடம் மென்மையாகவும், வளர்ந்து வரும் தலைவர்களின் நலனை நாடும் ஒரு சில தெய்வீகத் தலைவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

அவமதிப்பு:
தியோத்திரேப்பு தனது வார்த்தைகளில் கவனமாக இருக்கவில்லை.  அவன் மற்றவர்களை நியாயந்தீர்த்தான் மற்றும் எந்த அர்த்தமும் இல்லாத, அசுத்தமான மற்றும் முட்டாள்தனமான வார்த்தைகளை பயன்படுத்தினான்.  அவன் மற்றவர்களின் நற்பெயரை சேதப்படுத்தும் வகையில் அறிந்தும் அறியாததுமான மற்றும் தேவையற்ற வதந்திகளை பரப்பினான்.  மற்றவர்களைப் பற்றி தவறாகவோ அல்லது தீயதாகவோ பேசுவதை எதிர்த்து அப்போஸ்தலனாகிய யாக்கோபு எச்சரிக்கிறார் (யாக்கோபு 4:11).

சளசளப்பு:
இது முட்டாள்தனமாக பேசுவது அல்லது சிறிய விஷயங்களில் நீண்ட நேரம் பேசுவது.  தியோத்திரேப்பு போன்ற தலைவர்கள், முக்கியமற்ற மற்றும் தேவையற்ற விஷயங்களைப் பற்றி நீண்ட விரிவுரைகளை வழங்குகிறார்கள், ஆனால் மிக முக்கியமான பாடங்களைப் புறக்கணிக்கிறார்கள்.  வித்தியாசமாக, அவர்கள் சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து பாடங்களிலும் தங்களை ஒரு நிபுணராகக் காட்டுகிறார்கள்.

முக்கியத்துவம்:
தியோத்திரேப்பு போன்ற தலைவர்கள் யூத மதத் தலைவர்களைப் போல இருந்தனர், அவர்கள் தங்கள் இருப்பை உணர முக்கிய இடங்களை விரும்பினர் மற்றும் கோரினர் (லூக்கா 11:43). எங்கு சென்றாலும் அவர்கள் அமர்வதற்கும், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், ஒரு பெரிய நன்கொடை அளிப்பதற்கும் முதல், சிறந்த மற்றும் முதன்மையான இடங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

மக்களை வெளியேற்றுதல்:
கிறிஸ்தவ தலைவர்கள் அன்பாகவும், இரக்கம் காட்டுபவர்களாகவும், உபசரிப்பவர்களாகவும், அனைவரையும் வரவேற்பவர்களாகவும் இருக்க வேண்டும்.  இருப்பினும், பயணப் பிரசங்கிகள் மற்றும் போதகர்களிடம் மற்றும் விருந்தோம்பலுக்கு தகுதியானவர்களை கூட தியோத்திரேப்பு உபசரிப்பதில்லை.  தேவ ஜனங்களை ஏற்றுக் கொள்ள மனதில்லாதவனாக இருந்தது மட்டுமல்லாமல், சபையை விட்டு வெளியேற்றுவதிலும் வெறிக் கொண்டவனாக செயல்பட்டான். மக்களை தேவனிடம் நெருங்கிச் சேர்ப்பதற்குப் பதிலாக மக்களைத் துரத்திக் கொண்டிருந்தான்.

தவறான உதாரணம்:
கிறிஸ்தவ தலைமைக்கு தியோத்திரேப்பு ஒரு மோசமான முன்மாதிரியாக இருந்தான்.  துரதிர்ஷ்டவசமாக, இன்றும் பலர் அவனுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.

நான் ஒரு பயனுள்ள சீஷனா/தலைவனா அல்லது பயனற்ற சீஷனா/தலைவனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download