தெபோராளே, எழும்பு! (மகிழம் பூ)

தொடர் - 14 (நிறைவு)

காலை மணி பத்து சார்லஸ், சத்யபிரியா, மரகதம்மா, ஜான்பிரபு ஆகியோர் ஹாலில் அமர்ந்திருந்தனர். ஜான் பிரபுவின் மனைவி ஸ்கூலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டடாள். ஜாஷ்வா காலேஜ்க்கும், ஜான் பிரபுமெர்ஸியின் பிள்ளைகள் டேவிட்டும், டாரத்தியும், அவரவர் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். காலையில் இருந்த பரபரப்பு ஓய்ந்து, அந்த வீட்டில் அமைதி நிலவியது. மெளனத்தை ஜான்பிரபுதான் கலைத்தான்.

“ஏப்பா, என்னை மட்டும் 'பேங்க்' போக விடாமல் லீவு போடச் சொன்னீங்க?” கேள்விக் குறியோடு தன் தந்தையைப் பார்த்தான்.

“சுத்தி வளைச்சு பேச விரும்பவில்லை. உனக்கும் மெர்ஸிக்கும் தகராறா? ஒட்டுதலே இல்லாம இருக்கேங்க. நாங்க வந்து ரெண்டு நாளாச்சு. நீ அவளோட அன்பாயிருக்கிற மாதிரியே தெரியலையே!”

“ஏன்? அவ ஏதும் சொன்னாளா?”

“அவ சொல்லித்தான் தெரியணுமா? நீ வீட்டில் நடமாடுற லட்சணமே உன்னைக் காட்டிக் கொடுத்திடாதா?” சத்யா கூறவும்,

“அவளுக்கு என்மேல் அன்பே இல்லம்மா. என்னய மதிக்கவே மாட்டேங்கிறா. சமைச்சுப் போடறது கூட அவளுக்கு கஷ்டமா இருக்கும் போல. ஏனோ தானோன்னு செய்யற. வாயில வைக்க முடியலை.”

“ஏன் அப்படி பண்றா? பேங்க்ல வேலை வேலைன்னு கஷ்டப்படுற பிள்ளைக்கு நாக்குக்கு ருசியா சமைச்சுத் தர வேண்டாமா?” என்ற மரகதம்மாவின் பேச்சு ஜான்பிரபுவுக்கு காதில் தேன் பாய்ந்தது போல இனித்தது.

“ஆமா பாட்டியம்மா! சரியா சமைக்கிறதில்ல காலையிலதான் என்னவோ அவசர அவசரமா செஞ்சு சாப்பிட்டு போறோம்ன்னா, ராத்திரியாவது நல்லா சமைச்சு. சாப்பிட வேண்டாமா? ஜெபக் கூட்டம், ஊழியம், அது, இதுன்னு போயிட்டு கடனேன்னு எதையாவது செய்து வைக்கிறா. இதில நம்ம ஆலயத்தில் சிறுவர் இதழ் நடத்தப் போறாங்களாம்.

அதுல ஓவியம் வரையச் சொல்லி இவளை கேட்டிருக்காங்க இவ இணை ஆசிரியரா இருக்கணுமாம்....” குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தன.

“எனக்கு இப்பத்தான் விஷயமே புரிந்தது. டுவெல்த்துக்கு (பன்னிரெண்டாம் வகுப்புக்கு)ப் பாடம் எடுக்கிறா. அவளால வீட்டையும் கவனிச்சு. ஊழியத்தையும் பார்த்து வேலையும் பார்க்க முடியலை”. சார்லஸ் கூறவும்,

“ஒவ்வொரு மனைவியோட கடமையும் ஜான்பிரபு சொல்ற மாதிரி வீட்டை கவனிக்கணும். அதுதான் முக்கியம். நான் அவளுக்கு அட்வைஸ் பண்றேன். நீ கவலைப்படாதே ஜான். பேசாம அவளை வேலையை இராஜினமா செய்யச் சொல்.” மங்களம்மா கட்டளை 

“பாட்டி” அலறியேவிட்டான் ஜான். சற்று நிதானித்து தொடர்ந்தான். “வேலையை எதுக்கு பாட்டி விடனும்? இவதான் ஓவியமா வேலை பார்க்கிறாளா? எல்லாப் பெண்களும் இந்தக் காலத்துல வேலைக்குப் சம்பாதிக்கிறாங்க. லோன் வாங்கி வீடு கட்டியிருக்கேன் பாட்டி. அண்ணன் மகன் ஜாஷ் இங்க இருந்துதானே படிக்கிறான். டேவிட்டும் டாரதியும் படிச்சிட்டு இருக்காங்க. என் ஒரு சம்பளம் போதாது பாட்டி.” மடமட வென்று கொட்டினான்.

“அவ வேலைக்குப் போக வேண்டிய கட்டாய சூழ்நிலை இருக்குன்னு தெரியுதுல்ல. உனக்கு ஒரு வேலைன்னா அவ உன்னைய்போல மூணு மடங்கு வேலை செய்றா. “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு” ன்னு வேதம் சொல்லுது. கர்த்தர் ஈவா கொடுத்த உன் மனைவியை நீ ஈவு இரக்கம் இல்லாமல் கொடுமைப் படுத்திக்கிட்டு இருக்க.” குற்றம் சாட்டினார் சார்லஸ்.

நம்ம வீட்டில இதைத்தான் நீ படிச்சியா? அப்பா வேலைக்குப் போகாத எனக்கே எப்படி உதவி செய்தார்ன்னு உனக்குத் தெரியும். அது என்னடா பழக்கம்?சாப்பாட எப்பப்பார்த்தாலும் குறைசொல்றதும் “தூ...தூ'ன்னு துப்புறதும், தக்காளித்தோல், கறிவேப்பில்லை சாப்பாட்ல இருக்கத்தான் செய்யும் அத மெதுவா எடுத்து தட்டு பக்கத்தில வைக்க வேண்டியதுதானே. அவ மூஞ்சில துப்புறதா நினைச்சு துப்புறையா? இதே பழக்கமாயிட்டா.... யாரும் உன்னைப் பார்த்தா. உன்னைத்தான் அநாகரீம்ன்னு சொல்வாங்க”. உப்புபத்தலைன்னு ஒரு குறை. டேபிள் சால்டைக் கொஞ்சம் எடுத்துப் போட்டுக்க வேண்டியதுதானே. அடுத்தவர்களைப் பற்றி 'இவ... சமையல் நல்லாயிருக்கு, அவ சமையல் நல்லாயிருக்குண்ணு வேணும்ன்னே நீ பேசற.. அவ வேதனைப்படட்டும்ன்னு'” என்ற சத்யாவை இடைமறித்தான் ஜான். அவன் முகம் சிவந்தது. 'இதையெல்லாம் உங்கிட்ட ஓதிட்டாளா?”..... மண்ணு மாதிரி சமையல் இருந்தா... நல்லாயிருக்குன்னா.... சொல்வாங்க?”” ஆத்திரம் தனியாமலேயே கேட்டான்.

நல்ல சமையல் புத்தகம் வாங்கி கொடுத்து வீட்ல இருக்கவை. விதவிதமா ருசியா சமைச்சுப் போடுவா” மங்களத்தம்மா அழுத்தமாகக் கூறினாள். “உனக்கு கல்யாணமாகி பதினைந்து வருஷமாச்சு. இந்த பதினைந்து வருஷமா அவ சமைச்ச சாப்பாட்டைத் தானே சாப்பிட்ட. இப்ப மட்டும் ஏன் ருசியா இல்லாம போச்சு.?” சார்லஸ் கேட்கவும்.

“ஜான்!” அழைத்தபடி அவனருகே உட்கார்ந்தான். சத்யா உங்க அண்ணி ரோஸலினை நினைச்சுப்பார். அவங்களே தான் வலிய வந்தாங்க. என்னனென்னவோ சொன்னாங்க. அண்ணன் எனக்கு ஊழியம் தான் முக்கியம் என்று சொல்லிட்டாள். ஒன்பது மாதம் கழித்து தன் மகளும் ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்திட்டான்னு திரும்பவும் அவங்களேதான் தேடி வந்தாங்க . நாமும் ஜெபம் பண்ணிணோம். கர்த்தர் வழிநடத்தல் படி மேரேஜ் நடந்துச்சு. ஆனால் ஆரம்பத்தில் அவ நம்மைப்படுத்திய பாடு உனக்குத்தெரியும். அத்தை, மாமான்னு கூட கூப்பிட மாட்டா. எங்களை மதிக்கவே மாட்டா. செல்வச் செறுக்கு. ஆனந்தோட மட்டும் நல்லவா இருந்தா?

என்னை கவனிக்க மாட்டேங்கிறீங்க! என்னை நேசிக்கலை”ன்னு ஓயாத சண்டை தான். “இந்த அநாகரீக ஜனம் டாக்டரான என்னை மதிக்க மாட்டேங்குது. நர்ஸைத்தான் மதிக்குது. எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்”ன்னு சண்டை போட்டா? ரோஸலின் அங்க போறதுக்கு முன்னாடியே, சாந்தி அங்க போயிட்டாங்க. அதுமட்டுமல்ல அவங்களுடைய அன்பும் சிரித்த முகமும் கடவுளை அறிமுகப்படுத்தும் பாங்கும் அக்கரையான கவனிப்பும் தான் மக்களை கவர்ந்திருக்கிறது என்கிறதை ரோஸியினால் ஏத்துக்கமுடியலை. சாந்தியை அலட்சியப்படுத்தினா.

உன் அண்ணன் கூட தினம், தினம் பிரச்சனைதான் உன் அண்ணன் எல்லாத்தையும் சகிச்சான். அவள் மீதுள்ள அன்பை குறைக்கவில்லை. இன்னைக்கு தங்கக்கம்பியா ரோஸிலின் மாறிட்டா. முள்ளா இருந்தவ, மலரா மலர்ந்திட்டா” சத்யா நிறுத்தவும்,

மங்களத்தம்மா “மெர்ஸி அவள மாதிரி இல்லை. நீயேதான் உங்க அம்மா கிட்ட சொன்ன மெர்ஸி நல்ல பொண்ணுன்னு சொல்றாங்கம்மா. அடக்க ஒடுக்கமா இருக்கா. வாலிபர் கூட்டம் எல்லாம் நடத்தறா. ஏம்மா அவளை எனக்குப் பார்க்கக் கூடாதுன்னு?”” கேட்ட. ஜெபித்தோம். கர்த்தர் வழி நடத்தல் படிதான் திருமணம் செய்தோம். மெர்ஸி நம்ம குடும்பத்துக் கேற்ற பெண். குணசாலியா அமைந்திருக்கா. எல்லோரையும் மதிக்கிறா. அன்பைக் கொட்டுறா. அவளை நீ குறை சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை!”

“ஜான்! உங்க குடும்பத்தில நான்கு மாசமா நடக்கிற இந்த நாடகத்தை அவளுடைய அப்பா, அம்மா கிட்டையோ, அக்காவிடமோ சொல்லாம, நாங்க அவளை வற்புறுத்தி கேட்டதுனால எங்கிட்ட சொல்லியிருக்கான்னா..... அவளுடைய குணத்தை நீ பாராட்டணும்.”” சார்லஸ் கூறவும்,

"கணவனைப் பற்றிக் குறை சொல்றவதான் குணசாலியான பொண்ணா?” இகழ்ச்சி அவன் குரலில் தொனித்தது.

"உன் கிட்ட சொல்லித் திருத்த நீதான் வாய்ப்பே கொடுக்கலை. அவ கூட அன்பா பேசறதே இல்லை. பேசினா ஏச்சும் பேச்சும்தான். என்னமோ தீண்டதாகதவளை நடத்தற மாதிரி அவ பக்கத்தில வந்தாக்கூட ஒதுங்கி ஒதுங்கி போறையாம். என்னடா பழக்கம் இது?” சார்லஸ் குரலில் கண்டிப்பு ஒங்கி ஒலித்தது.

"ஜான்! சத்யா பரிவோடு அழைத்தாள். “இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? மெர்ஸி ஊழியத்துக்குப் போறது பிடிக்கலை. எங்க... மெர்ஸி பெரிய ஆள் ஆகிடுவாளேன்னு நீ பயப்படுற அதே சமயம் 'ஊழியம் செய்யாதேன்னு' சொல்ல உன்னால முடியலை. ஏன்னா..... ஊழியத்தை முதன்மைப் படுத்துற குடும்பத்தில இருந்து நீ வந்திருக்க. தேவனுடைய அற்புத வழி நடத்துதல்களை, அதிசய செயல்களை அனுபவித்தவன் நீ. சத்தியம் உனக்குத் தெரியும். ஆண்டவர் உன்கிட்ட கணக்கு கேட்பார்ன்னு உனக்கு பயம் இருக்கு. அவளா ஊழியம் செய்யாம இருக்கணும்ன்னு அவளைக் கொடுமைப்படுத்ற.'' மெதுவாக நிறுத்திப் பேசினாள்.

“அம்மா!” பிரபு சத்தமாகக் கூவினான்.

“நான் சொல்றதை பொறுமையா யோசித்துப் பார். நீ அழகா கிட்டார் வாசித்து பாடலையா.? ஆலயப் பாடகர் குழுவுக்கு நீ தான தலைவன். ஏன் உனக்குள்ள தாழ்வு மனப்பான்மை வருது? மெர்ஸி....அவங்க அம்மா தவமிருந்து பெற்ற பிள்ளை. அவ கட்டாயம் ஊழியம் செய்தாகணும் அவள் விரல்கள் வடிக்கிற உயிரோவியம் நற்செய்தி பரவுவதற்கு உபயோகமாகணும். சின்னஞ்சிறு பிள்ளைகள் வேத அறிவில் வளர அவ ஓவியம் பயன்படணும். அவளைத்தடுக்காதே! நீங்க இரண்டு பேரும் ஒண்ணுதான் வேதம் சொல்லுது. இதுல யார் செய்தாலும் இருவரும் செய்ததாகத்தான் அர்த்தம். கிறிஸ்தவர் அல்லாத ஒருத்தர், எட்டாம் வகுப்பு படித்திருந்த தன் மனைவியை படிக்க வைத்து, பட்டதாரி ஆக்கி அவளுக்கு ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொடுத்து. வேலையும் வாங்கித் தந்தாராம். அதுமட்டுமல்ல... தன் பிள்ளைகளுக்கு அவளுடைய பெயரின் முதல் எழுத்தையே இன்சியலாகவும் வைத்தாராம். அந்த மனைவி தன் கணவனை தெய்வமா மதிச்சிருப்பா இல்லையா? இயேசுவின் அன்பை அறியாதவங்களே ஜான்! அவளைத்தடுத்தா... அவள் உயிரோட இருக்க மாட்டாட்டா... தேவன் அவளை எடுத்துக்குவார். அதை மறந்திடாதே. நீ சொல்றதெல்லாம் வீண்பழி. அவ ஒழுங்காத்தான் சமைக்கிறா. இரவு டிபன் செய்து “ஹாட் பேக்” ல வச்சிட்டுத்தான் போறா. அவளுக்கு உதவி செய்ய வேண்டிய நீ, உபத்திரம் தராதே. எங்களை இங்கு வரச் சொன்னதே உன் மகள் டாரதியும், டேவிட்டும் தான். பிள்ளைகள் முன்னாடி முன்மாதிரியான வாழ்க்கை நடத்து. ஊழியத்தைக் கெடுக்க சாத்தான்விரிக்கிற வலையில விழுந்திடாதே. உன் வாழ்வை நீயே இழந்து போகாதே!”

தலை குனிந்தபடி ஜான் அமர்ந்திருந்தான்.

"யூத அடிமை ஆக்கில்லாவை ரோமப்பிரபிவின் மகள் பிரிஸில்லா மணந்ததற்கு காரணம் என்ன? யூத குலத்தில் பிறந்திருந்து தன்னை விட மூத்தவளான பிரிஸில்லாவை ஆக்கில்லா திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று தேவபிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தானே. இத்தாலி, அகாயா, ஆசியா என நாடு விட்டு நாடு அலைந்து நற்செய்தியைப் பரப்புனாங்க., பவுலைப் பராமரித்தாங்க. அப்பொல்லோவை சிறந்த ஊழியக்காரனாக உருவாக்கினாங்க. இருவருக்கும் ஒரு மனம் இல்லைன்னா இதை செய்திருக்க முடியுமா? யோசிச்சிப்பாரு.” என மங்களத்தம்மா கூற,

“இயேசுவை தன் கருவில் சுமந்த மரியாளுக்கு அவளைப் பராமரித்து, பாதுகாக்க யோசேப்பு தேவை. அதேபோல் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக வாழ்ந்த தெபேராளுக்கு லபிதோத்தின் துணை அவசியம். யோசேப்புக்கும் மரியாளுக்கும், தெபோராளுக்கும் லபிதேத்திற்கும், ஆக்கில்லாவிற்கும் பிரிஸ்கில்லாவிற்கும் ஒருமனமும், பரஸ்பர அன்பும் அக்கரையும் இல்லன்னா... பாதிப்பு அவங்களுக்கு மட்டுமல்ல.... அவங்க குடும்பத்துக்கு மட்டுமல்ல... சமுதாயத்திற்கே பாதிப்பு. அந்த வரிசையில்தான் நீங்க அவ ஊழியத்துக்கு நீ உதவியா இரு. உன்மேலே உயிரையே வைச்சிருக்கிற அவ அன்பும், உன் மேல் வைத்திருக்கிற மதிப்பும் மேன் மேலும் வளரும் கர்த்தர் நாமமும் மகிமைப்படும். அநேக தம்பதியினருக்கு நீங்க முன்மாதிரியா இருக்கணும்.புரிந்ததா?” சார்லஸ் கூறியபடி அவனருகில் அமர்ந்து அவன் கேசத்தை பாசத்தோடு வருடினார்.

ஜான் நிமிர்ந்தான். தன் தாய் தகப்பனுடைய கரங்களை இருகரத்தாலும் பற்றி தன் கண்களில் ஒற்றினான். கரங்களில் கண்ணீர் பட்டது. "உங்க எல்லார் மனசையும் நோகடிச்சிட்டேன். இனிமேல் உங்க மகனாவே நடந்துக்குவேப்பா. அம்மா ஜெபிப்போமா?” என்றான்.

அனைவரும் முழங்கால் படியிட, மரகதம்மா தேவனுக்கு துதி செலுத்தி ஜெபித்தார்கள்.

பெளர்ணமி நிலா வானில் பவனி வந்தது. வராண்டாவில் அமர்ந்து பெளர்ணமி நிலாவெளியில் கானான் நோக்கிப் பயணம் செய்த இஸ்ரவேலின் கூட்டத்தை ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தாள் மெர்ஸி. மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அருகே ஜான்பிரபு வந்து அமர்ந்ததைக் கூட அவள் அறியவில்லை.

“வானில் இருப்பது நிலவா? உன் தாளில் இருப்பது நிலவா?” சிரித்தபடி கேட்டான்.

முத்துப்பற்கள் தெரிய அவனைப் பார்த்து சிரித்தாள் மெர்ஸி.

“மெர்ஸி! இவ்வளவு அழகா ஒளி சிந்தும் நிலவு, தேய்ந்து ஒன்றுமேயில்லாமல் போய் விடுகிறது. இல்லையா?”

“சூரிய ஒளியிலிருந்து அது விலக்கும் பகுதி இருளாகிறது. நம் வாழ்வும் அப்படித்தானே! நீதியின் சூரியனையே நோக்கிப் பார்க்கப் பார்க்க நாம் வளர்பிறையாய் வளர்வோம். நிலவின் முழுப்பகுதியிலும் சூரிய ஒளி பட்டால் அதுவே பெளர்ணமி. அதே போல் நம் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுமையும் தேவப்பிரசன்னத்தில் மூழ்கும் அந்நாள்... தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாளே பெளர்ணமி இல்லையா அத்தான் ?”

மெர்ஸியின் விளக்கம் ஜானை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. 

“நம் வாழ்வில் இனி தேய்பிறையே வரக் கூடாது. ஒவ்வொரு நாளும் வளர்பிறையே!” எனக் கூறியபடி அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான்.

“எல்லாம் தேவகிருபை! இயேசப்பா ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்” என அவள் இதய வீணை துதிகீதம் இசைக்க, முழுநிலவாய் அவள் சிரித்தாள்.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download