லியோ டால்ஸ்டாய் ஒரு ரஷ்ய எழுத்தாளர், அவர் பலவிதமான கதைகளை எழுதியுள்ளார்; அதில் 'ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?' என்ற சிறுகதை மிகவும் அர்த்தமுள்ளது. கதையில் பஹோம் என்ற மனிதனுக்கு ஒரு வித்தியாசமான சவால் இருக்கும், அதாவது தனது மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அடையாளமிட்டபடி சூரிய உதயமானதும் ஒரு இடத்திலிருந்து நடக்க தொடங்க வேண்டும், சூரிய அஸ்தமனத்திற்குள் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர வேண்டும். அப்படி பஹோம் நடந்து குறித்த இடங்களெல்லாம் அவருக்கே சொந்தமாகும், அதற்காக பஹோம் ஆர்வத்தில் உற்சாகமாக வெகுதூரம் நடந்து விட்டார், திடீரென்று திரும்பிப் பார்த்தவர், தான் வெகுதூரம் வந்து விட்டதை உணர்ந்தவராய் ஐயோ சூரிய அஸ்மனத்திற்குள் ஆரம்பித்த இடத்திற்கு சென்று விட வேண்டுமே என்றவருக்கு பதட்டம் ஆட்கொண்டது. அதனால் ஓட ஆரம்பித்தார். ஆம், அவர் தனது அதிர்ஷ்டத்தைப் பிடிக்க ஓட வேண்டியிருந்தது. அவர் தான் ஆரம்பித்த இடத்திற்கு உரிய நேரத்திற்குள்ளாக வந்து அடைந்திடுவார்; பஹோம் தான் விரும்பியபடி இடத்தையும் சுதந்தரித்தார். ஆனால் ஓடிய களைப்பில் சோர்வடைந்து கீழே விழுந்தவர் இறந்து விட்டார். இறுதியில் வெறும் ஆறு அடி நீளமுள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார். ஆம்,பாஹோம் போன்று இன்றும் அநேக ஜனங்கள் ஏதோன்றை நாட்டம் கொண்டு அதை துரத்தி ஓடி உயிரை இழக்கின்றனர்.
அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த ஒரு நல்ல விசுவாசி கர்த்தருக்காக சிரத்தையுடன் செயல்பட்டார். அவரது வருடாந்திர கோடைகால விடுமுறைகள் இளைஞர்களுக்கான தலைமைத்துவ முகாம்களை நடத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டன. ஆன்லைனில் இறையியல் படிப்புகளைக் கற்றுக் கொண்டதின் மூலம் இன்னும் அதிகமாய் ஊழியத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். இருப்பினும், பொதுவாகவே அலுவலகங்களில் ஒரு அரசியல் காணப்படும், அதில் பாதிப்புக்குள்ளானார். தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. வருத்தம் என்னவெனில், அவர் அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டார். ஆகையால் தான் எப்படியும் பதவி உயர்வு பெற்றிட வேண்டும் என்று தீர்மனித்தவராய் அனைத்து ஆதாரங்கள், அதிகாரத்தில் இருக்கும் நபர்கள், பரிந்துரைகள், அரசியல் மற்றும் சட்டத் தலையீடுகள் என அனைத்து சாராரையும் முயற்சித்தார். அதனால் அவரின் நேரமும் ஆற்றலும் பெலனும் வீணானது. நாட்கள் செல்ல செல்ல சபையில் இருந்த ஈடுபாடும் அவருக்கு குறைந்தது, நாளடைவில் அதிலிருந்து விலகினார். படிப்படியாக அவர் தனது அநுதின ஆவிக்குரிய வாழ்வின் வழக்கத்தையும் இழந்தார். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வை இழந்ததைக் குறித்தும் அதை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனே இருந்தார். ஒருவழியாக அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது, ஆனால் என்ன கொடுமை! பதவி கிடைத்த ஒரு வாரத்தில் அவர் கொரோனாவிற்கு பலியாகி இறந்தார். கதையில் வரும் பஹோம் போல, அவர் விரும்பியதைப் பெற்றார், ஆனால் அதை அனுபவிக்க முடியவில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்: "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" (மத்தேயு 16:26). உலக செல்வம், அதனுடன் வரும் பாதுகாப்பு, அது அளிக்கும் கௌரவம், அது அளிக்கும் ஆறுதல் போன்றவற்றைப் பின்தொடர்வது போதையாக இருக்கலாம். "இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்" (நீதிமொழிகள் 23:5). ஆம், வாழ்க்கையில் எல்லாம் மாயமாய் மறைந்து விடும். "ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்" (2 கொரிந்தியர் 4:18). நம் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவை நித்தியமானவைகள் என்பதைக் காண தேவன் நம் கண்களைத் திறக்க வேண்டும்.
நித்திய மதிப்புள்ள விஷயங்களைக் காண என் ஆவிக்குரியக் கண்கள் திறந்திருக்கிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran