எமிலி புஸ்தானி (1907-1963) என்பவர் லெபனானில் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கொடையாளி ஆவார். தன்னை தலைநகர் பெய்ரூட்டில் அடக்கம் செய்வதற்காக அவர் ஒரு கல்லறையை வாங்கி கட்டினார். துரதிர்ஷ்டவசமாக, தனது சொந்த விமானம் பெய்ரூட்டில் விபத்திற்குள்ளானது, அதில் அவரது சரீரம் கடலில் விழுந்தது. அவரது விமானம் மீட்கப்பட்டது, ஆனால் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே புதைக்கப்படவில்லை. ஆகையால் அவருடைய கல்லறை காலியாக இருந்தது; அவருடைய சந்ததியில் யாரேனும் அதை நிரப்பக்கூடும். ஆனால் அவருடைய கனவுகள் அவரோடு மரித்து போனது.
கல்லறை இறுதி இலக்கா?
சிலர் தங்களுக்கு கல்லறைதான் தங்களின் இறுதி இலக்கு என்று நம்புகிறார்கள். எனவே, அவர்கள் அதை முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட தாஜ்மஹால் போன்ற சுற்றுலா தலங்களான கல்லறைகள் இருப்பது என்னவோ உண்மைதான். பொருளாசை கொண்ட உலகக் கண்ணோட்டம் கொண்டவர்கள் தாங்கள் வெறும் சரீரம் சார்ந்தவர்கள் (பௌதிக உயிரினங்கள்) என்று நினைத்து மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.
மரணத்திற்கு பின் வாழ்க்கை:
தேவன் மனிதர்களை நித்தியத்திற்கு உரியவர்களாகப் படைத்தார். மக்கள் சரீர மரணத்தை அனுபவித்தாலும், தீர்ப்பை எதிர்கொள்ள அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 20:13). ஒரு நபர் பாவங்களிலிருந்து மனந்திரும்புவதற்கும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருடன் என்றென்றும் வாழ்வதற்கும் சரியான தெரிவை உலகத்திலே எடுக்க முடியும். மேலும் மற்றவர்களும் வாழ்வார்கள் ஆனால் நரகத்தில் நிரந்தர வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
பூலோக வாழ்க்கை முதல் பரலோக வாழ்க்கை வரை:
உலகில் வாழும் சில வருடங்களோ அல்லது பல வருடங்களோ அது ஒரு முட்டுச்சந்து போலான கல்லறையை நோக்கிய பயணம் அல்ல. இந்த உலக வாழ்க்கை என்பது பரலோகத்தில் நம்மை சிருஷ்டித்த தேவனோடு என்றென்றும் நித்திய நித்திய காலமாய் வாழ்வதற்கான ஆயத்தமாகும். சரி இதற்கு சாத்தியமா என்றால் நிச்சயமாக சாத்தியமே; ஆம் சரியான தெரிவுகளால் மட்டுமே சாத்தியமாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் தேவனின் பிள்ளைகளாகவும், தேவன் மற்றும் அவருடைய வாக்குத்தத்தின் வாரிசுகளாகவும் மாறுகிறார்கள் (யோவான் 1:12; கலாத்தியர் 3:29).
பரலோகத்தின் நித்தியவாசிகள்:
தேவன் தம் சீஷர்களை நித்திய குடியிருப்பாளர்களாகவும், பரலோகத்தின் குடிமக்களாகவும் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களுக்கு கல்லறைகள் உண்டா என்றால் அது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் "நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்று பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 3:20). கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு பரலோகத்தில் உள்ள பிதாவின் வீட்டில் பல வாசஸ்தலங்கள் உள்ளன, அதை உங்களுக்காக ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:2&3) என வாக்களித்துள்ளாரே.
எனது இலக்கு தேவனுடனான நித்திய பரலோகமாக உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்