தாவீதின் ஆலயமா அல்லது சாலொமோன் ஆலயமா?

ஒரு அமைப்பு ஒரு நகரத்தில் சமூக சேவை செய்தது, பிரசுரங்களை விநியோகித்தது, ஜெபம் செய்தது, உபவாசம் மேற்கொண்டது மற்றும் சுவிசேஷம் அறிவித்தது. இவ்வாறு உழைத்துக் கொண்டிருந்த அமைப்பு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நகரத்தை விட்டு மற்றும் ஊழியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது;  இரண்டு தசாப்தங்களாக அவர்களின் உழைப்புக்கு வெளிப்படையான பலன் கிடைக்காததால் அல்லது அறுவடையைக் காணாததால், அப்படியொரு முடிவு எடுத்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, மற்றொரு அமைப்பு அங்கு ஊழியத்தைத் தொடங்கியது.  சில மாதங்களுக்குள், இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட ஒரு சபை நிறுவப்பட்டது. சரி, இப்போது யாருக்கு இந்த புகழ் சேர வேண்டும்? எருசலேமில் உள்ள ஆலயம் எப்போதும் சாலமோன் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. ஆலயத்தைக் குறித்த புகழாரத்தில் தாவீதுக்கும் பங்கு உண்டா? 

சொந்த நிலம்:
தாவீது நிலத்தை நன்கொடையாக ஏற்க மறுத்துவிட்டான், ஆனால் அதை எபூசியனாகிய அர்வனாவிடம் விலைகிரயமாக வாங்கினான் (2 சாமுவேல் 24:1-25).

கட்டுமான திட்டம்:
தாவீது விரிவான கட்டிடத் திட்டத்தையும், ஆலய வளாகத்தில் இருக்கும் மற்ற கட்டிடங்களுக்கான திட்டங்களையும் உருவாக்கினான். “தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்" (1 நாளாகமம் 28:11‭-‬13).  ஆம், அனைத்தும் தாவீது மனதில் வைத்திருந்த திட்டம். 

பொருட்கள்:
தாவீது ஆலயத்திற்கு தேவையான பொருட்களை சேகரித்தான்.  "ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும்" (1 நாளாகமம் 22:14) சேகரித்தான்.

மனித வளம்:
தாவீது மனித வளத்தையும் திரட்டினான். அவன் அங்கு வசிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது குடியேறியவர்கள் அல்லது அடிமைகளை சேகரித்தான். 'தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்றவற்றில் வேலை செய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும், கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உடனிருந்தனர்’ (1 நாளாகமம் 22:2, 15-16).

ஆலய கலைப்பொருட்கள்:
தாவீது ராஜா ஆலயத்திற்குள் தேவையான மற்ற பொருட்களையும் ஆயத்தம் செய்தான். விளக்குகள், சமுகத்தப்பங்கள் வைக்கும் மேசை என போன்றவற்றையும் ஆயத்தம் செய்தான். 

அமைதியான சூழல்:
தேவாலயத்தைக் கட்டுவதற்கு வசதியாக, இஸ்ரவேலர்களைச் சுற்றியுள்ள நாடுகளுடன் சமாதானத்தையும் ஏற்படுத்தினான்.

நிர்வாகம்:
தாவீது ஆசாரியர்கள், லேவியர்கள், ஆராதனை ஒழுக்கம், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் என ஏற்பாடு செய்தான்.  ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு குழுவினரும் சேவை செய்வதற்கான பட்டியலைத் தயாரித்தான்.

"தேவன் மரியாதை/புகழ் உள்ளவரைப் புதைத்துவிட்டு, அவருடைய பணியைத் தொடர்கிறார்" என்பது 
சார்லஸ் வெஸ்லி கூற்று.

 நான் ஆரம்பித்த பணி, எனக்கு தான் அதற்கான மரியாதை, புகழ் என்ற எண்ணம் கொண்ட நபரா அல்லது நான் தேவராஜ்ய உணர்வுள்ள நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download