சமூக ஊடகங்களை கையாள்வது என்பது இன்று அனைவருக்கும் ஒரு சவாலாக உள்ளது.
1) தினசரி நீக்குதல்:
வாட்ஸ்அப் என்பது ஒரு அற்புதமான தகவல் தொடர்பு கருவிதான், இது தகவல்களை மிக விரைவாகவும், சரியான நேரத்திலும் மற்றும் அதிக செலவின்றியும் கொண்டுபோய் சேர்க்கின்றது. வாட்ஸ்அப் போன்றே டெலிகிராம், சிக்னல் போன்ற ஒத்த செயலிகள் உள்ளன. இருப்பினும், இதில் நாளொன்றுக்கு ஏராளமான செய்திகளும், படங்களும், புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களும் வந்து நிறைகின்றது, அதில் வருந்தத்தக்கது என்னவெனில், ஒரு சில தகவல்கள் தேவையானது என்றோ நன்மை பயக்கக்கூடியது என்றோ எதுவுமே இல்லை. அவையெல்லாம் பெரும்பாலும் உபயோகமற்ற தகவல்களே. பலருக்கு ஒவ்வொன்றையும் பார்த்து கவனித்து நீக்குவது என்பதே தினசரி வழக்கமாகிவிட்டது, இதை ‘தினசரி நீக்குதல்’ என்றும் குறிப்பிடலாம். சிலர் ஒட்டு மொத்த செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நீக்குகிறார்கள். இல்லையெனில், மொபைல் போன் திடீரென்று இயங்காமல் தளர்ந்து விடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்மார்ட் போன் ஒரு ‘குழப்பமான’ போனாக மாறி, செயல்பட முடியாமல் போகிறது.
2) தினசரி வடிவமைப்பு:
அதேபோல், ஒரு சீஷனும் கலாச்சாரம், சமூகம், சமூக ஊடகங்கள், மரபுகள்… போன்றவற்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நம் மனதில் நிரம்பிய தேவையற்ற, பொருத்தமற்ற மற்றும் தவறான கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் முன்னுதாரணங்களை மனதிலிருந்து நீக்கிவிட வேண்டும். இருப்பினும், நீக்குதல் மட்டும் போதுமானதல்ல, ஏனெனில் வெற்றிடம் வேறு சில யோசனைகளால் நிரப்பப்படும். எனவே, ஒரு சீஷன் சத்தியமான தேவனுடைய வார்த்தையின் எண்ணங்களால் மனதை நிரப்ப வேண்டும் அல்லது மறுவடிவமைக்க வேண்டும், அதாவது தேவனுடைய வார்த்தையான சத்தியத்தில் நிரப்ப வேண்டும். அதைதான் புதுப்பிக்கப்பட்ட மனம் (மறுரூபமாக்கப்பட்ட சிந்தை) என்று அழைக்கிறோம் (ரோமர் 12: 2). தினசரி ஒழுக்கமான வாசித்தல், தியானம் செய்தல் மற்றும் நம் மனதை நிறைவு செய்தல் ஆகியவை புதுப்பிக்கப்படுவதற்கு அவசியம். தினசரி வடிவமைத்தல் அல்லது நம் மனதை புதுப்பித்தல் என்பது ஒரு புனிதமான ஆவிக்குரியப் பணி.
3) தினசரி மறுப்பு:
தினசரி நீக்குதல் மற்றும் தினசரி வடிவமைத்தல் என்பது தினசரி மறுப்புக்கு வழிவகுக்கிறது. "ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா 9:23). யார் ஒருவர் தன் சிந்தையை அல்லது எண்ணங்களை தேவ வார்த்தைகளால் சத்தியங்களால் புதுப்பித்துக் கொள்கிறார்களோ அந்நபரின் வாழ்க்கை சாட்சியாக அமைகிறது. தன்னைதான் வெறுப்பது என்பது இயேசு கிறிஸ்துவைப் போல வாழ வழி வகுக்கிறது. அதுபோல் தன்னைதான் வெறுத்து மனதைப் புதுப்பிக்கும்போது சுய கட்டுப்பாட்டின் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது, மேலும் அது அந்நபரை ஆளுகை செய்கிறது. அந்த ஆளுகை என்னவென்றால் சரியான வார்த்தைகளைப் பேசுவது, நல்ல செயல்களைச் செய்வது, சரியான அணுகுமுறை, பரிசுத்த நடத்தை மற்றும் ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருத்தல் என்பதாகும்.
4) தினசரி மரித்தல்:
ஒரு சீஷன் தன் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக அநுதினமும் ஒப்புக்கொடுக்க வேண்டும் (சமர்ப்பிக்க வேண்டும்) (ரோமர் 12: 1). இது தினசரி ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
தினசரி தேவையற்றவற்றை நீக்குதலும், புதுப்பித்தலும், தினசரி சார்ந்திருப்பதும் மற்றும் தினசரி பாவபழக்க வழக்கங்களுக்கு மரிப்பதும் என எனது அன்றாட ஆவிக்குரிய வாழ்வில் பயிற்சியாக இருக்கிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran