ஒரு வயதான மனிதர் தினமும் ஏழு விதமான மாத்திரைகள் உட்கொள்வதாக தனது வேதனையை விவரித்தார். தினமும் இவ்வாறு மருந்துகளை சாப்பிடுவது அவருக்கு ஒரு போராட்டமாக இருந்தது. அதிலும் ஒவ்வொரு மாத்திரையும் தனித்தனி நிறம், வடிவம் மற்றும் அளவைக் கொண்டிருந்தன. அப்போது தனது அருகில் இருந்த நண்பரிடம் "நீங்களும் தினமும் மருந்து எடுத்துக் கொள்கிறீர்களா?" எனக் கேட்டார். அவர் நண்பரோ நல்ல ஆரோக்கியமாக தான் இருந்தார்; ஆனாலும் அவர் நண்பர் ஏமாற்றம் அடைய விரும்பாமல் தானும் தினமும் காலையில் ஏழு மாத்திரைகள் சாப்பிடுவதாகச் சொன்னார். உடனே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அவர், அப்படியா அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். தன் நண்பரிடம் மாத்திரைகளின் விவரங்களைப் பட்டியலிட்டு விளக்கினார்;
1. நன்றி:
முதல் மாத்திரை என்னவென்றால் ஒவ்வொரு புதிய நாளுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவதாகும். ஒரு நாள் முடிந்து மறுநாளைக் காண்பது என்பது நமக்கு கிடைத்த வெகுமதி. ஆம், தேவன் கொடுத்த வரம். நாம் ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்பது நன்றியுணர்வின் கொண்டாட்டமாகும்.
2. தாழ்மை:
"தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (யாக்கோபு 4:6). இந்த மாத்திரை தேவனிடமிருந்து போதுமானளவும், நிறைவாகவும், ஆதரவான கிருபையையும் அளிக்கிறது.
3. அன்பு:
"நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5). தேவன் அன்பாக இருக்கிறார், அவருடைய அன்பு ஒரு நபரை வியக்குத்தகும் அமைதியுடன் மாற்றுகிறது.
4. விசுவாசம்:
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்" (எபிரெயர் 10:38). அந்த விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலே வருகிறது (ரோமர் 10:17). வேதாகமத்தை வாசிப்பது அல்லது கேட்பது, தியானிப்பது, ஜெபம் செய்வது ஆகியவை ஒரு நபரை பலப்படுத்தி, தேவ நோக்கங்கள் நிறைவேற ஜீவனோடு காக்கிறது.
5. நம்பிக்கை:
சரீரம் தளர்ந்து போனாலும், வறுமை நிலை வந்தாலும் நம்பிக்கை ஒருநாளும் குறையாது. பரலோக நகரமான புதிய எருசலேமில் நித்திய வாழ்வே இறுதி இலக்கு. தேவனின் வார்த்தை, வாக்குறுதிகள் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அடிப்படையிலான நம்பிக்கை ஒரு விசுவாசியை வெட்கப்படவோ அல்லது ஏமாற்றவோ செய்யாது (ரோமர் 5:5).
6. மகிழ்ச்சி:
"கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்" (நெகேமியா 8:10). "மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்" (நீதிமொழிகள் 17:22).
7. சமாதானம்:
கர்த்தராகிய இயேசு சமாதானத்தைக் கொடுப்பதாக வாக்களித்தார், அது உலகம் கொடுக்கவும் முடியாது, பறிக்கவும் முடியாது. "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக" (யோவான் 14:27). தேவன் தரும் அமைதி மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 4:7).
உலகில், அனைவரும் நோய், வலி, துன்பம் மற்றும் மரணத்திற்கு ஆளாகிறார்கள். முறையான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் தான். ஆனால் ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, இந்த 7 மாத்திரைகள் பெரிதும் உதவுகின்றன.
இந்த ஆவிக்குரிய மாத்திரைகளை நான் தினமும் எடுத்துக் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்