கணினிமயமாக்கப்பட்ட உட்டளவரைவு ஊடறிதல் (CT ஸ்கேன்) என்பது, உடலின் எலும்புகள், இரத்த நாளங்கள் மற்றும் மென்மையான திசுக்களின் குறுக்கு வெட்டு படங்களை உருவாக்க எக்ஸ்ரே நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு வகை இமேஜிங் ஆகும். CT ஸ்கேன் நோய் அல்லது காயத்தைக் கண்டறியவும், மருத்துவ, அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைத் திட்டமிடவும் பயன்படுகிறது. ஒருவனின் இருதயம் மிகவும் தந்திரமானது! இருதயம் மிகவும் சுகவீனம் அடையக் கூடும். உண்மையில் எவரும் ஒருவனின் இருதயத்தை புரிந்துகொள்வதில்லை. ஆனால், நானே கர்த்தர். என்னால் ஒருவனின் இருதயத்தைப் பார்க்கமுடியும். நான் ஒருவனின் மனதை சோதிக்கமுடியும். ஒவ்வொருவனிடமும் என்ன இருக்கிறது என்பதை என்னால் முடிவு செய்யமுடியும். என்னால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சரியான கூலியைக் கொடுக்கமுடியும் (எரேமியா 17:9)என்கிறார் கர்த்தர்.
ஊடுருவும் வார்த்தை:
தேவ வார்த்தை ஆன்மாவுக்கான CT ஸ்கேன் ஆகும். "தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது” (எபிரெயர் 4:12).
உலகக் கண்ணோட்டம்:
ஒரு நபர் சாலையில் வாகனம் ஓட்டும்போது, சிவப்பு நிறத்தில் உள்ள போக்குவரத்து விளக்கைப் பார்க்கிறார், ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறாரா அல்லது சிசிடிவி இருக்கிறதா என்று சுற்றிப் பார்க்கிறார். பிறகு நிறுத்த வேண்டும் என்று தெரிந்தாலும் அவர் தொடர்ந்து ஓட்டுகிறார். ஆக, உலகக் கண்ணோட்டம் என்பது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது முக்கியமல்ல, ஆனால் தண்டனையைத் தவிர்ப்பது முதன்மையானது என நினைக்கும் ஜனங்கள் இருக்கிறார்கள். தேவன் ஆபிரகாமிடம், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன், எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட” என்று கட்டளையிட்டார் (ஆதியாகமம் 17:1).
நோக்கம்:
மக்கள் பாசாங்குத்தனமாக இருக்கிறார்கள், தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள். அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள். நல்ல மென்மையாகப் பேசுகிறார்கள் மற்றும் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை. ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை (சங்கீதம் 55:21). ஒரு விசுவாசி மனந்திரும்பி நீதியான வாழ்க்கையை நடத்துவதற்கு தேவனுடைய வார்த்தை அத்தகைய நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது.
மனப்பாங்கு:
மற்றவர்களை தாழ்வாக நடத்துவது ஒரு மோசமான அணுகுமுறை. சாதி, வகுப்பு, கல்வி, தேசியம், மதம் போன்ற காரணங்களால் பிறரை இழிவாகப் பார்ப்பது பாவம். மற்ற எல்லா யூத மக்களைப் போலவே பேதுருவும் புறஜாதிகளை தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினார். அவர் யோப்பா நகரத்தில் இருந்தபோது, செசரியாவிலுள்ள கொர்னேலியு வீட்டிற்குச் செல்லும்படி அவருக்கு ஒரு தரிசனம் கொடுத்து, புறஜாதிகளை நேசிக்கும்படி கர்த்தர் அவரைத் தூண்டினார் (அப்போஸ்தலர் 10).
சட்டப்பூர்வ ஆவிக்குரிய ஜீவியம்:
சமையலறைத் தோட்டத்தின் மூலிகைகளிலிருந்து தசமபாகம் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருந்த பரிசேயர்களைப் போல, இன்றும் பிரசங்கியார்கள் தசமபாகம் மற்றும் ஞானஸ்நானம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் நீதி, இரக்கம் மற்றும் விசுவாசத்தை புறக்கணித்தது போல், இன்றைய விசுவாசிகளும் செய்கிறார்கள்.
*எனது இருதயத்தின் ஒவ்வொரு நோக்கமும், எண்ணமும், காரணமும், அணுகுமுறையும் சரியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்