குழந்தைப் பருவத்தில் நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு அனுபவம் உண்டு. அது என்னவென்றால், காலில் நெருஞ்சி முள் சடக்கென்று குத்தி விடும். அதிலும் இந்த ரப்பர் மாதிரியான செருப்புகளை அணியும்போது செருப்பையும் தாண்டி காலில் முள் குத்திவிட அது பெரும் வேதனையை அளிக்கும். நடக்கும் போதெல்லாம் ஒரு வலி தாங்கொண்ணா வேதனையைத் தரும். இது சில நேரங்களில் மிக நீண்ட வேதனையான அனுபவமாகும். பாருங்களேன், ஒரு சாதாரண முள் நம்மை ஒரு நிமிடம் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வலியையும் தருமென்றால், முள்ளினால் நிறைந்த கிரீடத்தை நம் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசுவுக்கு அணிவிக்கும்போது எப்படி ஒரு வேதனையை அனுபவித்திருப்பார் என நினைக்க முடிகிறதா? (மத்தேயு 27:29, யோவான் 19: 2). ஆம், இது கர்த்தருக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்திருக்கலாம்.
1) அவமானம்:
ரோமானிய வீரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவமானப்படுத்தினர். இது மனிதாபிமானமே இல்லாத செயல், அது மட்டுமா அவரின் கண்ணியம் கௌரவத்தையே அழித்தனரே.
2) அவமதிப்பு:
‘யூதர்களின் ராஜா’ என்று கூறிய ஒரு மனிதனை ரோமானிய வீரர்கள் அவமதிக்க விரும்பினர். அவரைத் தாக்குவதன் மூலம் ஒரு அவமரியாததையும் சிவப்பு அங்கியை அணிவித்தும் அவமதித்தனர். பின்னர் அவர்கள் முட்களின் கிரீடத்தை சூட்டினர்.
3) அவமரியாதை:
சமூக அடிப்படையில் தாழ்ந்த ரோமானிய வீரர்கள் யூதர்களின் ராஜாவை கேலி செய்தனர், அடித்தனர், துப்பினர், அவமானப்படுத்தினர். ரோமானியப் பேரரசின் முழு நிர்வாக அமைப்பும் அவரை கேலி செய்து கொண்டிருந்தது.
4) அவதி:
ஆதி மனிதர்களின் வீழ்ச்சியால் முட்களும் குருக்குகளும் தோன்றின. "அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்" (ஆதியாகமம் 3:17-18). இதை உணராமல் ரோமானிய வீரர்கள் சாபத்தின் பொருளை எடுத்து ஒரு கிரீடமாக வடிவமைத்தார்கள், இதனால் தேவன் அந்த சாபத்திலிருந்து நம்மை மீட்க வேண்டியதாயிற்று. "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" (கலாத்தியர் 3:13). ஜனங்கள் பாவங்களைச் செய்யும்போது, அவர்களுடைய மனசாட்சி கூர்மையான முட்களைப் போல் ஆத்துமாவைச் சுருக்கென்று குத்துகிறது.
5) ஆச்சரியமான முடிசூட்டு:
சி. எச். ஸ்பர்ஜன் இதை 'ஆச்சரியம் தரும் முடிசூட்டு’ என்று குறிப்பிடுகிறார். அவிசுவாசிகள் அவருக்கு மகுடம் சூட்டிக் பணிந்துக் கொண்டிருந்தார்கள். இந்த முழு உலகமும் அவருடைய நாமத்திற்கு முன் பணிந்து குனிந்து அவரே இரட்சகர் என்பதையும் நிச்சயமாக அறிக்கையிட்டே ஆக வேண்டும்.
தன் மக்கள் எண்ணிலடங்கா ஆசீர்வாதத்தைப் பெறவும் நல்வாழ்க்கை வாழவும் முள் கிரீடத்தை சகித்த ஈடு இணையற்ற தேவனல்லவா நம் தேவன். "வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர், உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது" (சங்கீதம் 65:11). கிருபையாலும் ஏராளமான நன்மைகளாலும் முடிசூட்டப்பட்ட மனிதகுலம் அவருக்கு முள்ளின் கிரீடத்தைக் கொடுத்தது. சே.. என்ன ஒரு நன்றியற்ற மனித சமுதாயம்.
நான் என்னையும் எனக்கான அனைத்தையும் அவரின் பாதத்தில் வைக்கின்றேனா? அவரை நன்றியோடு துதித்து ஆராதிக்கின்றேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J. N. Manokaran