ஒருவர் அரசு அலுவலகத்தில் பொறுப்பேற்றவுடன் தன் உறுதிமொழியை அறிவிக்க வேண்டும். சிலர் கடவுள் அல்லது புனித புத்தகம் அல்லது தங்கள் நாட்டின் அரசியலமைப்பின் பெயரால் சத்தியம் செய்கிறார்கள். தினசரி கூட, பலர் தங்கள் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த அல்லது தங்கள் நேர்மையை நிரூபிக்க சத்தியம் செய்கிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; "பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்" (மத்தேயு 5:34-37) என்று எச்சரித்தார்.
தேவனுடைய சிங்காசனம்:
தேவன் இறையாண்மை ஆட்சியாளர், அவர் காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத அனைத்தின் மீதும் முழுமையான அதிகாரம் கொண்டவர். அவருடைய பெயரில் சத்தியம் செய்வது என்பது அவருடைய நாமத்தை தூஷிப்பது போலாகும்; அதுமாத்திரமல்ல பத்து கட்டளையை மீறுவதாகும் (யாத்திராகமம் 20:7). "மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?" (சங்கீதம் 8:4) என்று சங்கீதக்காரன் வியக்கிறான்.
தேவனின் பாதபடி:
பூமியில் சத்தியம் செய்ய மனிதனுக்கு உரிமை இல்லை. இது அவருடைய படைப்பு மற்றும் தேவனின் பாதபடி. சிம்மாசனம் எப்படி பரிசுத்தமானதோ, அதுபோல பாதபடியும் பரிசுத்தமானது. அது தேவனின் பூமி; மனிதர்கள் சிறிது காலம் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவ்வளவே. பூமியின் பேரில் மனிதன் சத்தியம் செய்தால் அவன் பூமிக்கு உரிமையாளன் என்பது போல் ஆகாதா?!
மகாராஜாவினுடைய நகரம்:
எருசலேம் என்பது தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிபாட்டு மற்றும் நீதி நியாயத்திற்கான இடம். சாலொமோனால் ஆலயம் கட்டப்பட்ட நகரத்தை தேவன் தேர்ந்தெடுத்தார். நகரின் புறநகரில் மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அந்த நகரம் தேவனுக்கு சொந்தமானது என்பதால், அந்த நகரத்தின் மீது சத்தியம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
சிரசு (தலை):
எந்த மனிதனும் தன் தலையை உருவாக்க முடியாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு முடியை வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ உருவாக்குமளவு வல்லமை கிடையாது என்றார் கர்த்தர். இது காண்பதற்கு அல்லது நவீன காலத்தில் ஒரு எளிய பணியாகத் தெரியலாம்; ஆனால் மனிதர்களுக்கு உருவாக்கம் என்பது சாத்தியமற்றதே. அத்தகைய சூழ்நிலையில், நயவஞ்சகர்கள் மாத்திரமே தங்கள் தலையில் சத்தியம் செய்ய முடியும்.
உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்:
நேர்மையான மக்களாக இருக்க தேவன் கற்பித்தார். சொல்லப்பட்ட அல்லது வாக்குறுதியளிக்கப்பட்ட எதுவும் செய்யப்பட வேண்டும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும். சாக்குபோக்கு இல்லை, தாமதம் இல்லை, மறுப்பு இல்லை. இல்லாததை இல்லை என்று சொல்லும் தைரியம் ஒரு சீஷனுக்கு இருக்க வேண்டும்; ஜனங்களை திருப்திபடுத்த நினைக்க கூடாது. வாக்குறுதிகளை மீறுவது அல்லது மறப்பது, முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் சரி என்று கூறுவது என அனைத்தும் தீமையிலிருந்து வந்தவை அதாவது சாத்தானிடமிருந்து வந்ததாகும்.
எச்சரிக்கை:
ஒரு சிலர் தங்கள் பெற்றோர் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறார்கள்; அப்படி செய்வது பாவமாகும்.
நான் ஒரு நேர்மையான நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்