முழுமையை நோக்கும் சபை
1 கொரிந்தியர் 11, 12, 13 அதிகாரங்கள்
சபையாக கூடி வாழும் வாழ்வில் முழுமைப் பெற வாஞ்சிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் இதை விரும்புகிறார். அவர் தம் ஊழியர்களை தெரிந்து, பயிற்றுவித்து சபையை முழுமையை நோக்கி பயணிக்க வைக்கிறார். இதன் வழியில் வரும் சங்கடங்கள் தெரிந்திருக்க வேண்டும். தார்ப்பரியங்களை தைரியமாய் கூறி, தேவைப் பட்டால் தழும்புகள் பெற்றும் இப்பாதையில் நம்மை நடத்தும் தலைவர்களையும் கொண்டிருக்க வேண்டும் தரிசனங்களும் வெளிப்பாடுகளும் நமது பெலத்தையும், பெலவீனத்தையும் வெளிக்கொணற வேண்டும். களத்திருச்சபைகளை பெற்று அதன் மீது. கரிசனை கொள்ளவேண்டும். அப்போதைக்கு அப்போது அத்து மீறி நடப்போரை கண்டித்துணர்த்திகை கோர்த்து திருத்தி வாழ பிரயாசம் வேண்டும். முழுமையை பெற்றோம் என்றல்ல அடைவோம் என்ற நம்பிக்கையோடு தேவ அன்பிலும், கிறிஸ்துவின் கிருபையாலும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்திலும் வேரூன்றி முடிவுபரியந்தம் நிலைத்து வாழ்வோம். நித்தியம் நமது முழுமை. ஆமென்.
சகிப்புத்தன்மையில் சங்கடங்கள்
எப்படியெனில் உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால் , நன்றாய்ச் சகித்திருப்பீர்களே, 2 கொரிந்தியர் 11 : 4
சகிப்புத்தன்மை வாழ்வின் உச்ச நிலை. பிறரை ஏற்றுக் கொள்வதில் பிறரது கருத்துக்களைக் கற்றுக் கொள்வதில் கருத்து உடன்பாடில்லாமையால் உறவுகள் சங்கடப்படுகின்றன. ஏதாவது ஒரு நிலையில் உள்ளான மன நிலையில் அன்புக்கு சேதம் வராதபடி பார்த்துக்கொள்ள பிறரை சகித்துக் கொள்ளதான் வேண்டியதுள்ளது. அப்படி சகித்து கொள்ளும்போது கருத்து திணிப்புகளுக்கு ஆளாக இருக்க முடிவதில்லை. ஆனால் அந்தக் கருத்து திணிப்பு நான் ஏற்கனவே பெற்றிருக்கும் உண்மைக்கு பொருந்தாவிடில் அதினின்று விலகி தான் வாழ வேண்டும், எனது சகிப்புத்தன்மை எனக்கு சங்கடங்களை ஏற்படுத்தி விடக்கூடாது. உங்களது சகிப்புத்தன்மையின் ஆற்றலைத் தவறாக பயன்படுத்தி உங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் நவீன
போதனைகளினால், நாவன்மைகளினால் உங்கள் ஆவியை திசை திருப்பும் முயற்சிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அறிமுக வேட்கை இன்று, நேற்றல்ல. ஆதி தோட்டத்தினின்று புறப்பட்டுவந்த தவறான சொல்பிரளயங்கள். பாவத்தின் சுபாவம் அது. உள் வாங்குவோமென்றால் நமது உள்ளத்தை சங்கடப்படுத்திவிடும். அதனால் நமது மனம் கரை பட்டு நமது உண்மையான அர்ப்பணிப்புகள் மங்கலாகப் போய்விடும். பதிவிரத பத்தினியாய் நம்முடைய அர்ப்பணிப்பை கடவுளுடைய சுவிசேஷத்துக்கு மாறான எந்த புது யுக கருத்துகளுக்கும் உட்படாதபடி பேணி காத்துக்கொள்ள வேண்டும். ஆண்டவர் வைராக்கியமானவர், நீயும் நானும் அவருக்கே, அவர் ஒருவருக்கே என்பதில் அவர் மிகுந்த வைராக்கியம் பாராட்டுபவர். ஆகவே வேறு வழியாக வரும் கள்ளரும் கொள்ளைக்காரருக்கும் விலகி வாழுங்கள். நலமானதை பற்றிக்கொண்ட நீங்கள் இன்னொரு நலமானதாய் தோன்றும் மாயையின் நிழலுக்கு ஒதுங்க வேண்டாம். தேவையானது ஒன்றே. பத்தில் ஒன்றல்ல. ஒன்றே ஒன்று என்றிருப்போம். நாம் கொண்டாடுவது பல்பொருள் அங்காடி அல்ல.ஒரே ஞானக்கன்மலை, வித விதமான சந்தை பொருள்களால் நமது இதயத்தை நிரப்புவதை விடுத்து பெற்ற சுவிசேஷத்தில் முழுமையாக திருப்தி பெற்று போதுமென்ற தேவபக்தியோடு இதுவே மிகுந்த ஆதாயமென்றிருப்போம். சுய ஆதாயங்களுக்கு சுய சரிதைகள் சொல்லி வரும் பிழைப்புக்கடுத்தவர்களுக்கு சம்மதம் சொல்லாதீர். உங்களது சகிப்புத்தன்மையின் வாசலில் அவர்களை அனுமதித்து விடாதீர்கள். இது ஆதிமுதல் சுற்றித்திரிகிறவனுடைய புது யுக்தி. பன்மை அறிவல்ல, இரண்டல்ல, ஒன்றே ஒன்று. கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவே அது. அதற்காக மற்றவைகளையெல்லாம் குப்பையாக எடுத்தெறியுங்கள். குப்பைகளினால் மனமேட்டை சங்கடப்படுத்தாதிருங்கள். பெற்ற ஆவியானவராலே அவற்றையெல்லாம் எரித்துப்போடுங்கள். சகிப்புத்தன்மை உங்கள் உள்ளத்தை சங்கடத்தில் ஆளாக்க விடாதிருங்கள். பிறரை சகித்து சத்தியத்தை அவருக்கு அளியுங்கள். சத்தியம் அவர்களை விடுதலையாக்கட்டும்.
தழும்புகளும் தார்ப்பரியங்களும்
யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன். 2 கொரிந்தியர் 11 : 24
மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிற நானே ஆகாதவனாய் போய்விடாதபடி என்னை நானே ஒடுக்கி ஆளுகிறேன் என்று சொன்ன பவுலை தன்னிடத்தில் பெருமைப்படுத்தி சொல்லும் அளவுக்கு தார்ப்பரியங்கள் உண்டெனவும் குறிப்பிடுகிறார். நியாயப்பிரமாணத்தின்படி குற்றம் சொல்லப்படக்கூடாதவர் பிறப்புரிமையிலும் மதவைராக்கியத்திலும் மற்றவர்களை மிஞ்சி நிற்பவர். எபிரேயன் இஸ்ரவேலன் ஆபிரகாமின் வம்சவழி , கிறிஸ்துவுக்கு சேவையாளனாக மாறிய பின் மறு உருவாக்கம் பெற்ற ஊழியக்காரன் கடின உழைப்பை தனது ஊழியத்தில் கைக்கொண்டு வந்தவர். தன்னை பிரகடனப்படுத்த விரும்பாதவர். ஆண்டவர் தற்புகழ்ச்சியை விரும்பாதவரென அறிந்தவர். கிறிஸ்துவின் சீடத்துவத்தை சரியாக தெரிந்து கொண்டவர். தொண்டூழியம் செய்ய தன்னை எழுதி கொடுத்தவர். பாடுகளின் வழியில் ஊழியப்பாதையை அமைத்துக் கொண்டவர். பாடுகளின் மத்தியில் தழும்புகள் ஏற்றவர். யூதர்களினால் அவர்களது அதிகாரத்தினால் மிகுந்த உபத்திரவத்திற்குள்ளாகி சித்திரைவதைக்குள்ளானவர். கல்லெறியப்பட்டவர். கிறிஸ்துவுக்காக பிரயாணம் மேற்கொள்ளுகையில் விபத்துகளையும் ஆபத்துகளையும் சந்தித்தவர். தவறான நண்பர்களால் ஆபத்துக்குள்ளானவர். ஒய்வில்லாமல் இரவு நேரங்களிலும் கூட கண் விழிப்போடு தான் ஏற்ற ஊழியத்தை கடும் பிரயாசங்கள் நடுவில் செய்து முடித்தவர். மழையானாலும். வெயிலானாலும் பசியிலும், பட்டினியிலும் தான் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை காத்துக் கொண்டவர். இவையெல்லாவற்றின் மத்தியிலும் திருச்சபைக்கென கரிசனை கொண்டு தரிசனத்தின் தாகத்தை குறைவில்லாமல் காத்துக் கொண்டவர். பெலவீனருக்கும், பாவிகளுக்கும் உற்ற நண்பராயிருந்தவர். எப்படியாகிலும் ஒரு சிலரை கிறிஸ்துவுக்குள் நடத்துவதற்காக உபாதைகளையும் உபத்திரவங்களையும் ஏற்றுக்கொண்டவர். ஊழிய பாதையில் மனரம்மியத்தோடு வாழ்ந்தவர். இராஜாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு புதிரானவர். அவருடைய ஊழிய அறிக்கையில் பொய் சொல்லாதவர். தழும்புகள் ஏற்கும் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தினார். தார்ப்பரியமிக்க ஒரு தலைமையைக் கொண்டவர். தார்ப்பரியங்களை சொல்லி புகழ் தேடாதவர். சுவிசேஷத்துக்காக பாடு அனுபவித்தவர். இக்காலத்து திருச்சபையில் இத்தகைய தலைமைத்துவத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தரிசனமும் அதன் விளைவும்
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன் அவன் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்?; தேவன் அறிவார் 2 கொரிந்தியர் 12 : 2
வானங்கள் அவரது கிரியையை வெளிப்படுத்துகிறது. நாம் பார்க்கிற ஆகாய விரிவில் பறவைகள், ஆகாயவிமானம் உலா வருகின்றன. இரண்டாவது வானத்தில் கோள்கள், கண்டிராத எண்ணற்ற மண்டலங்கள், வியாபித்திருக்கின்றன. மூன்றாவது வானத்தில் நமது ஆண்டவர் தமது தூதர்களோடு வீற்றிருக்கிறார். சர்வ வியாபி சர்வ வல்லமையுள்ளவர். காணக்கூடாத ஒளி மண்டலத்திலிருந்து சர்வத்தையும் ஆளுகை செய்கிறார். சர்வ சேனையும் அவரைத் துதிக்கிறது. அங்கே நமக்கு வாசஸ்தலத்தை ஏற்படுத்தியிருக்கிறார் . இதை பவுல் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட மூன்றாவது வானம் என எழுதியிருக்கிறார்.
வெளிப்பாட்டைக் கூறும்போது மிகவும் ஜாக்கிரதையாகக் கூறுகிறார். ஒரு மனிதனை அறிவேன் என கூறுகிறார். தன்னை வெளிப்படையாக கூற தயங்குகிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறார். கடவுளையும், கடவுளுடைய சாம் ராஜ்யத்தையும் கண்ட அவர் தன்னை காண்கிறார். அவர் தனது பெலவீனத்தை உணருகிறார். தனது பெலத்தையும் உணருகிறார் பெலவீனம் முள் என கண்டு கொண்டார். பெலவீனத்திலே கடவுளுடைய கிருபையை காண்கிறார்... எனது பெலவீனம்?. அவர் வாசம் செய்யும் களம் என கண்டு கொண்டு பெலவீனத்திலே பெருமிதம் கொள்கிறார். அவர் திருச்சபைகளுக்கு செய்த காரியங்களை, ஊழியத்தை, பெலனாகக் கருதுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் கடவுளை கண்டோமென்றால் நமது பெலன்களையும் பெலவீனங்களையும் அறிந்திருக்கவேண்டும். கஷ்ட நஷ்டங்களில் சோர்ந்து போகாமல் பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் கிருபையை நம்பி திருச்சபைக்கு பெலனாக வேண்டும். ஆண்டவருக்கு ஊழியம் செய்யவே ஆண்டவர் நமக்கு காட்சி, தரிசனம் வெளிப்பாடு இவை யாவும் தருகிறார். பெற்ற வெளிப்பாடு பிறருக்கு பணிவிடை செய்ய என்ற சிந்தையோடு செயல்படுவோம். ஆமென்.
களத்திருச்சபையின் மீது கரிசனை :
அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும் வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே. 2 கொரிந்தியர் 12:12
திருச்சபை வளர்ச்சிக்கு வளர்ந்து வரும் களத்திருச்சபைகளே சான்று. தாய் திருச்சபையோடு, வசதியோடு கட்டமைப்புகளோடு நின்றுபோகாமல் அறியப்படாத இடங்களுக்கு சென்று சகோதர திருச்சபைகளை நிறுவிப்பதே சபை வளர்ச்சி எனப்படும். அப்படி ஸ்தாபிக்கப்படும் சபைகள் மீது தொடர் கண் காணிப்பும் பின் தொடர்பணியும் செய்து வந்தார். அவரது உபதேசத்தில் சபைகள் மலர்ந்தன. கடவுள் வல்லமையினால் அச்சபையில் அடையாளங்கள் அற்புதங்கள் நடந்தன. வளர்ந்து பெருகின. சபையின் எண்ணிக்கை பெருகும்போது, வளங்களும் அமைப்புகளும் பெருகும். புதிய தலைமுறை தலை எடுக்கும். அவர்களை அணுகும் முறைகளை பவுலிடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். மக்கள் விரும்புவதையெல்லாம் மேடையில் முழங்குவதல்ல நற்செய்தி அறிவிப்பு. வித்தியாசங்கள் நடுவில் தடுமாறி பேசாதபடி நல் மாதிரியை நிலை நிறுத்த வேண்டும். அவர்களது எண்ணத்தை ஏற்காததினால் ஒரு சிலர் நம்மை ஏற்றுக் கொள்ளாதிருக்கலாம். நமக்கு உதவாமல் இருக்கலாம். கூடுதலாக நம்முடைய பங்களிப்பையே விமரிசிக்கலாம். மனித ஞானத்தோடு இவர்களை அணுக முடியாது. மாறாக பவுலைப் போல் மனத்தாழ்மையோடு பொது பணிக்காக அவர்களை மன்னித்து ஒப்புரவாகுதலை செய்ய வேண்டும். பெற்றெடுத்தவல் பவுல், தூர நின்று பார்வையாளாராக இருக்க முடியாது. தகப்பன் பிள்ளை உறவை சபை பணியில் சுவிஷேகரும் சபையாரும் கொள்ள வேண்டும். விளங்கிக் கொள்ளாதவர்களை விளங்கிக் கொள்ளவேண்டும். தொடர்ந்து நற்பணியாளர்களை அனுப்பி வைத்து அச்சபையினரை ஊக்குவிக்கவேண்டும். பவுல் இதை செய்தார். கடவுள் முன்னிலையில் பேசுகிறோமென்பதை சாட்சி பகர வேண்டும் எனக்காக அல்ல, எங்களுக்காக அல்ல உங்களை பெலப்படுத்துவதற்காகவே என அறிவிப்பு செய்ய வேண்டும்.
எந்தவிதத்திலும் களச்சபையில் எழுந்திருக்கும் பாவ நாற்றுகளை வளர விடாதபடி பவுலைப்போல அன்பிலும் கண்டிப்பிலும் தொடர்பணி செய்ய வேண்டும். கண்டிப்பது உங்களை அல்ல உங்கள் பாவத்தை என கூற வேண்டும். தண்டிக்கபடவேண்டியது பாவ வாழ்க்கையே, மனிதர்களல்ல அன்போடு எடுத்து சொல்லி சபையை சீர்படுத்த வேண்டும்.
கண்டிப்பும் நோக்கமும்
ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக்கட்டவே கர்த்தர் எனக்கு கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும் போது கண்டிதம் பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன் 2 கொரிந்தியர் 13:10.
நமது சபையின் மனந்திரும்புதலும் பாவமன்னிப்புமே நமது பிரதான நோக்கமாயிருக்க வேண்டும். இந்நோக்கம் நிறைவேற, முயற்சி பெலனற்று போகுமானால் இறுதி எச்சரிப்புகள் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பாவமான செயலுக்கு உட்பட்டவர்களுக்கு குறிப்பாக இந்த செய்தி சேர்ந்தாக வேண்டும் நிருபணம் செய்ய குறிப்பிட்ட சாட்சிகளை நியமனம் செய்ய வேண்டும். வெளித் தலையீடு இல்லாமல் சபைக்குள்ளாகத் தீர்க்கப்பட வேண்டும். பவுல் இறுதி வாய்ப்பாக இதை கையாண்டார், வெளி உலக மக்கள் சபையைக் குறித்து இழிவாக பேசும் விஷயத்தில் முன் ஜாக்கிரதையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபைக்குள்ளே எழும் உள்ளான விவாத வேதனைகளையும் கையாள வேண்டும். யதார்த்தங்களையும் சம்பவங்களையும் ஆராய்ந்து ஒழுங்கு பண்ணவேண்டும். பிறரை அழித்து ஒழிப்பது அல்ல நோக்கம். ஆளாக்குத் நோக்கமே மேலோங்கி நிற்க வேண்டும். ஒரு மனமும் ஒப்புக் கொள்ளுதலும் தீர்ப்பில் முக்கியப்படுத்தப்பட வேண்டும். அவசர முடிவுகளுக்கு உடன்படக்கூடாது. சீர் பொருந்துவதற்கு காலக் கெடு கொடுக்கலாம். ஆனால் அது நீட்டிக்கப்பட கூடாது. பவுல் போன்று கிறிஸ்துவால் அதிகாரம் பெற்றவர்கள் தலைமைத்துவம் கொடுத்து இறுதி நடவடிக்கைக்கு விளக்கம் சொல்லி கண்டிப்புடன் சீர்க்கேட்டை சரி செய்ய வேண்டும். சாந்தமும் பெருந்தன்மையும் உள்ளவர்கள்; பிரம்பெடுக்கும் நிலையை நம்முன் வரவழைக்க வேண்டாம். அதற்கு முன் உணர்வு பெற்று திருந்தி வாழ வேண்டும். அதிகாரத்துக்கும் எதிர்த்து நிற்கும் சூழ்நிலையை ஏற்படுத்துதல் தகாதது. திருச்சபையை சத்தியத்தினின்று விலகாமல் காப்பதே நோக்கமாகும். சத்தியத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பார்களென்றால் இந்த உச்சகட்ட எச்சரிப்பு வர அவசியமில்லையே, இதை அறிந்து முன் ஜாக்கிரதையாய் பாவ செயலுக்கு விலகி வாழ வேண்டும். திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்வதற்கல்ல அதிகாரம் கடவுளுடையது கிறிஸ்துவின் அதிகாரத்தினால் மாத்திரம் கண்டிப்பின் நோக்கம் மனந்திரும்புதலாக மாற வாய்ப்பு உண்டு. சபையைக் கட்டுவோம். இடித்து போடமாட்டோம், ஆனால் பாவத்துக்கு இடமளிக்கவுமாட்டோம். மிக சாதுரியமான பணி இது. நின்று நிதானத்துடன் அன்புடனும்கண்டிப்புடனும் கட்டி காக்க வேண்டிய பணி. திருச்சபை பூமிக்கு உப்பு சாரமற்றுப் போனால் பூமிக்கு வழி ஏது? திருச்சபை பூமிக்கு வெளிச்சம். இருண்டு போனால் பூமிக்கு வெளிச்சம் எங்கே?
முழுமையை நோக்கி:
கடைசியாக சகோதரரே சந்தோஷமாயிருங்கள் நற்சீர்பொருந்துங்கள் ஆறுதலடையுங்கள். ஏக சிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள். அப்பொழுது பவுல் சபையினரை சகோதரர்களாக பாவித்து இவையெல்லாம் வாழ்வின், சபையின் முழுமைக்காகவே சொல்வதாக உணர்த்தி முழுமையை நோக்கி பயணிக்க குறிப்பிடுகிறார். அவரது வேண்டுகோளை ஏற்று ஒருவருக்கொருவர் இசைந்த மனதுள்ளவராகுங்கள் என கேட்டுக் கொள்கிறார். சமாதானத்துடன் வாழ்வும் கடவுளுடைய அன்பும் சமாதானமும் உங்களில் இதை நிறைவேற்ற முடியுமென அதை கூறி வலியுறுத்துகிறார். ஒருவரையொருவர் வாழ்த்துவதின் மூலம் உற்சாகம் பெற்று சகோதர அடையாளத்தை தரித்து கொள்ள வேண்டுகிறார். முழுமையை நோக்கி செல்லும் பாதையில் இசைவு சமாதானம் அன்பு, வாழ்த்து கூறுதல்களை இந்த வாழ்வில் முக்கியப்படுத்துகிறார். இப்படி பிரயாசப்படும் பவுல் தான் தனியாய அல்ல; கூடவே தேவ பிள்ளைகளையும் கொண்டுதான் இதை நிறைவேற்ற பிரயாசப்படுகிறேன் என கூறும் வண்ணம் அவர்களது வாழ்த்துதல்களையும் ஒப்புதலாகப் பெற்று முழுமையை நோக்கி செல்ல வேண்டிய சபைக்கு எழுதி அனுப்புகிறார். இறுதியில் இந்த முழுமை வேண்டிய சபையை கிறிஸ்துவினுடைய கிருபைக்கும், தேவ அன்புக்கும், பரிசுத்த ஆவியானவருடைய ஐக்கியத்துக்கும் ஒப்புக்கொடுத்து ஜெபமும் ஏறெடுக்கிறார். இதுவே தற்கால திருச்சபைக்கும் ஆசீர்வாத ஜெபமாக திகழ்கிறது. மனுக்குலம் முழுமைபெற திருத்துவ கடவுளும் செயலில் ஒன்றுபட்டு மனிதர்கள் மத்தியில் வாசம் பண்ணுகிறார். கடவுள் ஒருவரே பிதாவாகிய கடவுள் குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியானவாரகிய கடவுள் நம்மை ஆண்டு கொண்டு நாம் வாழ்வின் முழுமையை கற்றுக்கொள்ளவும் முழுமையை நோக்கி பயணிக்கவும் அருள் புரிவாராக, முடிவோ நித்திய ஜீவன். ஆமென்
துர் இச்சைக்கு விலகுங்கள்
வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நில்லுங்கள்! எல்லை தாண்டாதிருங்கள் வரையறுக்கப்பட்டதிலும் சமச்சீர் கொள்ளுங்கள் மிஞ்சாதிருங்கள்! துர் இச்சை உங்களை ஆதீக்கம் செலுத்தாதபடி கவனமாயிருங்கள்! நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கீறீர்கள்! நீங்கள் உங்களுக்கு சொந்தமல்ல கடவுளுக்கு சொந்தம் பரிசுத்தத்தை பேணிக் காத்துக் கொள்ளுங்கள் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை பிரியப்படுத்தமுடியாதே ஆவிக்கேற்றப்படி நடந்து கொள்ளுங்கள். அப்போது பிழைப்பீர்கள், ஒழுக்கக்கேடுள்ளவன் தன் சரீரத்துக்கு விரோதமாகவே குற்றம் செய்கிறான். உங்கள் சரீரம் வாழ்வின் முடிவில் ஒரு உயர்ந்த; சரீர உயிர்த்தெழுதலுக்கென்று பத்திரப்படுத்த வேண்டிய ஒன்று பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. இக்காலத்தோடு எல்லாம் முடிந்து போவதில்லை. நித்திய இராஜ்யத்திற்கென்று உங்களை காத்துக்கொள்ளுங்கள். அந்த மகிமை பிரவேசத்துக்கென்று உங்கள் உடலையும் ஆத்துமாவையும் பரிசுத்தமாக பேணிக் கொள்ளுங்கள்.
வழக்காட வெளிமன்றம் செல்லாதீர் 1 கொரிந்தியர் 6. 1-11
வழக்காடுவோம் வாருங்கள் என கூறும் கர்த்தர் உங்களுக்கு உண்டு உங்கள் வழக்குகளை உங்களுக்குள்ளே தெரிவு பெற்ற மனிதர்களைக் கொண்டு தீர்ப்பு பெற்று சமாதானப்படுங்கள். அநீதிக்காரர் நிற்கும் தீர்ப்பாயத்துக்கு சென்று உங்கள் வழக்குகளை முறையீடாதீர்கள் உங்களில் ஒருவர் பேரில் குற்றமென்றால் சகோதர சிநேகத்தோடு உங்களுக்குள்ளே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இராஜ்யத்தின் புத்திரரே இராஜாவின் பிள்ளைகளாக வாழ பழகுங்கள். ஒருவரையொருவர் விசாரியுங்கள். முற்காலத்து சடங்குகளை திரும்ப சபைக்குள் அறிமுகம் செய்யாதிருங்கள். முற்காலத்தில் கிறிஸ்துவை அறியாதிருந்தீர்களே. இப்போதோ இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஒப்புரவாக்கப்பட்டவர்களானீர்கள் மேலானவைகளை நாடுங்கள்; சுத்திகரிப்போடு சுத்தவான்களாக வாழுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள். கிறிஸ்து நமக்காகச் செய்த இரட்சிப்பை இலவசமாய் பெற்றீர்களே இலவசமாய் மன்னிப்பு வழங்குங்கள். உங்களின் வழக்காடுதல் மன்னிப்பையும் ஒப்புரவாகுதலையும் திரளாகத் தரட்டும்.
Author Bro. C. Jebaraj