நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பவுல் பேசுகையில், பேலிக்ஸ் பயந்தான். பேலிக்ஸ் செய்தியை புரிந்து கொண்டான். ஆனால் அதை நிராகரித்தான். செய்தியினால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. பேலிக்ஸ் முற்றிலுமாக ஆண்டவரை நிராகரிக்கவில்லை, ஆனால் தனது முடிவை ஒரு வசதியான நேரத்திற்கு ஒத்திவைப்பதன் மூலம் தனது நிராகரிப்பை வெளிப்படுத்தினான் (அப்போஸ்தலர் 24:24-25). வருத்தம் என்னவெனில் அவனுக்கு அப்படி ஒரு வசதியான நேரம் அமையவே இல்லை.
சகேயு ஒரு வரி வசூலிப்பவன், அவன் தனது உத்யோகத்திற்காக யூதர்களால் வெறுக்கப்பட்டான். அவன் கர்த்தராகிய இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். கர்த்தராகிய இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். சகேயு மனம் மாறினவனாய்; தான் அதிகமாகச் சேகரித்த அனைத்தையும் செலுத்துவதாகவும், தனது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகவும் உறுதியளித்தான். பேலிக்ஸைப் போல, தனது முடிவை சரியான சமயம் வாய்க்கும்போது பார்க்கலாம் என்பதாக ஒத்திவைக்கவில்லை. "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே" (லூக்கா 19:9) என்றார்.
சிலுவையில் கர்த்தராகிய இயேசுவின் வலது பக்கத்தில் அறையப்பட்ட திருடன் மனந்திரும்பி மன்றாடினான். அவர் ராஜ்யத்தில் தன்னை நினைவுகூரும்படி ஆண்டவரிடம் வேண்டினான்; "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (லூக்கா 23:43). பேலிக்ஸைப் போல முடிவை தள்ளிப்போட அவனுக்கு அதற்குமேல் சமயம் இல்லை.
வேதாகமம் எச்சரிக்கிறது: “அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்" (சங்கீதம் 95:7-8). "இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்" (2 கொரிந்தியர் 6:2) என்பதாக பவுல் எழுதுகிறார். ஆம், செய்தியைப் புரிந்துக் கொண்ட பின்பும் பேலிக்ஸ் ஒத்திவைத்தது சரியல்ல. அவன் தனது ஆவிக்குரிய வாழ்வில் தீவிர கவனம் செலுத்தவில்லை என புரிந்துக் கொள்ள முடிகின்றது.
இந்த பூமியில் தங்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொண்ட மற்றவர்களும் உள்ளனர். பணக்காரன் ஒருவன் அமோகமான விளைச்சலைக் கண்டான். அந்த விளைந்த தானியங்களை பல ஆண்டுகளுக்கு சேர்த்து வைக்க தனது கிடங்கை விரிவுபடுத்த விரும்பினான். "தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?" (லூக்கா 12:20) என்றார்.
தேவன் தண்டிப்பதைக் குறித்து அநேகர் ஐயோ தேவன் மிகவும் அன்பானவராயிற்றே; அவர் தண்டிப்பது எப்படி என்று நினைக்கின்றனர். தேவன் பரிசுத்தமானவராக இருந்தால், அவர் பாவிகளைத் தண்டித்து நியாயந்தீர்ப்பார் அல்லவா. பரிசுத்தமான தேவனால் பாவிகளைத் தண்டிக்காமல், எப்படி பாவத்துடன் சமரசம் செய்துகொள்ள முடியும்?
இரட்சிப்பின் நிச்சயம் இன்று எனக்கு உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்