வால்ட் மேசன் தனது உரைநடையில் ஒரு சுவாரஸ்யமான கதையை எழுதுகிறார். ஒரு வேட்டைக்காரனை சிங்கம் தாக்கியது. அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது; அதனால் வலிகளையும் துன்பங்களையும் தைரியமாக எதிர்கொண்டான். ஆனால் அதே வேட்டைக்காரனை, பூச்சி கடித்தால், கூச்சலிடுவதுடன், அநாகரிகமாகவும் மாறுவான். இதில் வால்ட் மேசன் ஒரு விஷயத்தைக் கவனிக்கிறார். வேட்டைக்காரனை சிங்கம் தாக்குவது என்பது ஒரு பெரிய விஷயம், சிங்கம் தாக்கிய நபர் என்பது ஒரு சமூக அந்தஸ்து. எப்படியெனில் தன் தழும்புகளைக் காட்டி இது சிங்கம் தாக்கியது என பெருமை கொள்ளலாம், அந்த தழும்புகள் அவரின் வலியிலும் ஒரு புகழைக் கொடுத்தன. அதுமாத்திரமல்ல தன்னைக் கடித்த சிங்கத்தை வேட்டைக்காரன் ஆசீர்வதிக்கவும் செய்தான். ஆனால், பூச்சி அல்லது கொசு கடியை சகித்துக்கொண்டால், அவனுக்கு புகழ் கிடைக்காது. இதன்மூலம் வால்ட் மேசன் அவர்கள் சொல்வது என்னவென்றால் சிறிய பிரச்சனையோ பெரிய பிரச்சனையோ அனைத்தையுமே சமமான மனநிலைமையோடு தைரியத்துடனும், உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
சிங்கத்தை எதிர் கொள்ளல்:
சிம்சோனை நோக்கி ஒரு இளம் சிங்கம் ஓடி வந்தது, அதற்கு அவன் பயப்படவில்லை, அச்சமடையவில்லை. ஆயுதம் ஏதுமின்றி, கசாப்புக்கடைக்காரன் ஆட்டைக் கிழிப்பது போல் சிங்கத்தை தன் கைகளால் கிழித்துப் போட்டான் (நியாயாதிபதிகள் 14:6). அவனின் அச்சமின்மை ஆச்சரியமானது. அவன் கலங்கவும் இல்லை, அதிர்ச்சியடையவும், முடங்கவும் இல்லை, சர்வசாதாரணமாக சிங்கத்தைக் கொன்றான்.
எதிரிகளை எதிர் கொள்ளல்:
பெலிஸ்தியர்கள் சிம்சோனைக் கட்ட வந்தார்கள்; லேகி நகரவாசிகள் அவனைக் கட்டி, அவர்களிடம் ஒப்படைத்தனர். "கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்" (நியாயாதிபதிகள் 15:14-15).
வார்த்தைகளை எதிர்கொள்ள இயலவில்லை:
சிம்சோனின் வலிமையின் ரகசியத்தைக் கண்டறிய பெலிஸ்திய அதிபதிகள் தெலீலாளை பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு நாளும், அவள் சிம்சோனை வார்த்தைகளால் துன்புறுத்தினாள். அவள் உணர்வுபூர்வமாக அவனை நெருக்கினாள், 'நீ என்னை உண்மையாக காதலித்தால், அந்த ரகசியத்தை என்னிடம் சொல்' என்றாள்; ஆரம்பத்தில் சிம்சோனோ பொய் சொன்னான், பின்னர் அழுது அழுது தொல்லைக் கொடுத்தாள். அவளின் கண்ணீரைக் கண்டு சிம்சோன் முட்டாள் ஆனான். அவளுடைய சித்திரவதைகளான வார்த்தைகளை எதிர்கொள்ள அவனிடம் ஆவிக்குரிய நிலையோ அல்லது உணர்வின் சரியான வெளிப்பாடோ இல்லை. அவளின் தொடர் தொல்லையினால் விரக்தியடைந்த அவன் எல்லா உண்மையையும் கூறினான். பின்னர் கைது செய்யப்பட்டு, கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டான் (நியாயாதிபதிகள் 16:16).
வார்த்தைகளின் கனம்:
சிம்சோனால் உடல் ரீதியான, கண்களால் காணக்கூடிய எதிரியைத் தோற்கடிப்பது எளிதானது. ஆனால் கண்ணுக்கு தெரியாத, சக்தி வாய்ந்த வார்த்தைகளின் தாக்குதலை தாங்க முடியவில்லை. ஆம், பலர் வார்த்தைகளின் தாக்குதலினால் உணர்வு ரீதியாக புண்படுத்தப்படுகிறார்கள், மனரீதியாக சோர்வடைகிறார்கள், ஆவிக்குரிய ரீதியில் ஆற்றலையெல்லாம் இழக்கிறார்கள். மொத்தத்தில் செயலற்றுப் போகிறார்கள்.
ஜெயம் கொள்கிறவர்கள்:
சிங்கமோ அல்லது பெரிய படையோ அல்லது வார்த்தைகளோ என எதுவாக இருந்தாலும், அதிலும் ஜெயம் காணவே தேவன் நம்மை அழைத்துள்ளார்.
நான் தொடர்ந்து ஜெயம் கொள்கிறவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்