தொடர் - 5
* ஜாலியா இருக்க வந்த இடத்திலேயும் அறுவைதானா? “ஏய்யா நீயெல்லாம் வாத்தியார் வேலைக்கு வந்த? மத குருவா போக வேண்டியதுதானே?” என்ற தலைமையாசிரியரின் கோபக் குரல் எஸ்தர் வரலாற்றை சுவைபடக் கூறிக்கொண்டிருந்த ஜெபசிங்கையும், ஆவலோடுmகேட்டுக்கொண்டிருந்த மாணவர் குழாமையும் திடுக்கிட வைத்தது.
“சார்! தமிழாசிரியர் ஒண்ணும் அறுக்கல. இன்டரஸ்டா கதை நடந்துகிட்டிருந்தப்ப நீங்கதான் ரம்பம் போட்டுறீங்க” துணிச்சலாகக் கூறினான் துரைராஜ்.
“தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்கிற மாதிரி கதை முடியப்போற நேரம். சார்! குறுக்க நீங்க அறுவடை நடத்திட்டீங்க” ஒத்துப்பாடினான் உதயகுமார். மாணவர் குழாம் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சிரித்தனர். தலைமையாசிரியர் முகம் கோபத்தாலும் அவமானத்தாலும் சிவந்தது.
(வள்ளுவர் மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சியில், மிக அதிகமான பொருளுதவி நல்கியவர்கள் உதயகுமாரின் தந்தையும், துரைராஜின் தந்தையும். எனவே உதயகுமாரையும், துரைராஜையும் யாரும் கண்டிக்க முடியவில்லை. ஜெபசிங் பணியேற்றதும் அவரின் பார்வையிலும் போதனையிலும் இருவரும் பக்குவமடைய ஆரம்பித்தனர். இருவரின் அட்டகாசங்களும் குறைந்தன.)
“ராஸ்கல்ஸ்... உங்களுக்கெல்லாம் திமிரு அதிகமாய் போச்சு! உங்கள பார்க்கிற விதமா பார்த்துக்கிறேன்” பொரிந்து தள்ளிவிட்டு நகர்ந்தார் தலைமையாசிரியர்.
ஜெபசிங் துரைராஜையும், உதயகுமாரையும் கண்டிப்புடன் நோக்கினார். “ஹெட்மாஸ்டரை எதிர்த்துப் பேசுவது தப்பு, உங்களுடைய எஜமான்களுக்கு கீழ்ப்படியுங்கள்னு தான் திருமறை சொல்லியிருக்கு” (எபே.6:5).
“பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள்” (எபே. 6:1) என்று தானே சார் போட்டிருக்கு! பத்துக் கட்டளையில் ஒன்றான “தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவதிலேயே “கர்த்தருக்குள்' கீழ்ப்படிய வேண்டுமென்றால் இவர் ஹெட்மாஸ்டர் தானே! கர்த்தருக்கு விரோதமானவற்றில் எப்படி கீழ்ப்படிய முடியும்?” உதயகுமாரின் கேள்வியை அடுத்து துரைராஜ் தொடர்ந்தான்.
“சார்! இவர்களுக்கெல்லாம் இப்படி புத்தி புகட்டினாத்தான் கேப்பாங்க! : நீங்க வேலைக்கு வந்ததிலிருந்து உங்களை விரோதித்துக் கொண்டே இருக்கிறார். நீங்க என்ன சார் செய்தீங்க?ஓய்வு நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை உங்களைத்தேடி வருபவர்களுக்கு பைபிளைப் பற்றி போதிக்கிறீங்க! அது தப்பா?: உங்களாலதானே நாங்க அநேகர் நல்ல பாதைக்கு வந்திருக்கோம். இப்ப டூர் வந்த நாம் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்திட்டோம். சாப்பிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கோம்! இப்ப பேசக் கூடாதா?” துரைராஜின் வார்த்தைகள் உணர்ச்சிப் பிழம்பாய் வெளிவந்தது!
“சரி! போதும் துரை! இந்தப் பேச்சை விடு! சார் நீங்க கதையைக் தொடருங்க!” உதயகுமார் கூற சலசலப்பு அடங்கியது. மீண்டும் விட்ட இடத்தைத் தொடர்ந்தார். ஜெபசிங்! தலைமையாசிரியர் ஸ்ரீநிவாசன் பொருமிக்கொண்டிருந்தார். அவருக்குக் குல்லா போடும் குருசாமியும், காவடி தூக்கி காலடி பணியும் கந்தசாமியும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.!
“இவனையெல்லாம் உள்ளே விட்டதே தப்பு! எல்லாம் அந்த நிர்வாகியால் வந்தது!”.
“ஆமா சார்! இவன் வந்தபின் எவ்வளவு மாற்றம்” நம்ம ஸ்கூல்ல என்னைக்கு கிறிஸ்தவப் பாடல் பாடியிருக்கு? சாதிபேதம், மத பேதம் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடாதுன்னு, ஸ்டாப் மீட்டிங்கில் பேசி காலைப் பிரார்த்தனையையே மாத்திட்டானே! திங்கள், புதன் கிறிஸ்தவப்பாடல் செவ்வாய், வியாழன் ஹிந்துப் பாடல், வெள்ளி முஸ்லீம் பாடல்ன்னு மாத்திப்புட்டானே! நிர்வாகியுமில்ல இவனுக்கு எல்லாத்துக்கும் சரி போடறார்!” கந்தசாமி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார்.
“ஒண்ணு இந்த ஸ்கூல்ல அவன் வேலை பார்க்கணும் இல்ல நான் பார்க்கணும்” தலைமையாசிரியர் கொதித்தார்.
“சார்! பொறுமையா இருங்க! அவனுக்கும் நிர்வாகிக்கும் சீக்கிரம் மோதல் ஏற்படும்!” விஷமாகச் சிரித்தார் குருசாமி.
“எப்படி?” தலைமையாசிரியரின் நெற்றி சுருங்கியது.
“நிர்வாகியின் ஒரே பொண்ணு கவிதாவுக்கு ஜெபசிங் மீது.......... பாதியோடு நிறுத்தினார் குருசாமி.
“இது தானாக்கும்! இந்தப் பாவி மனுஷன் நிர்வாகி கிறிஸ்தவனா மாறி தன் பெண்ணை இந்தப் படுபாவிக்குக் கொடுத்தாலும் கொடுப்பார்” - என்ற தலைமையாசிரியரின் கூற்றை இடைமறித்தார் குருசாமி.
“அதுதான் நடக்காது, நம்ம நிர்வாகி இந்த நல்ல நிலைக்கு வர்றதுக்குக் காரணமே அவருடைய மனைவியின் அண்ணன்தான். அந்த அம்மா தன்னோட ஒரு பொண்ணை தன் அண்ணன் மகன் டாக்டர் சுரேஷ்க்குத்தான் கொடுப்பாங்க. வீட்டில் நம்ம நிர்வாகி, மனைவி சொல் தட்டாத மணாளன்! அங்கே தான் இருக்கு கலாட்டா!” குருசாமியின் வார்த்தைகளில் உண்மையிருப்பதை இருவரும் உணர்ந்தனர். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் தலைமையாசிரியர்.
இதன் தொடர்ச்சி புரியாத புதிரா? என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.