கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எருசலேமுக்குச் சென்று நிராகரிக்கப்படவும், மரிக்கவும், அடக்கம் செய்யப்படவும், மீண்டும் பரலோகத்திற்குச் செல்லவும் என தனது பணியில் உறுதியுடனும், கவனம் செலுத்தியும், பின்வாங்காமலும் இருந்தார் (லூக்கா 9:51). இயேசுவைப் பின்தொடர்வது என்பது தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுவதாகும், அதில் பாதியிலே விலகிச் செல்வதோ அல்லது பின்வாங்குவதோ என சாத்தியமே இல்லை.
அவரது பயணம்:
கர்த்தராகிய இயேசுவின் மரணம் என்பது யூதாஸின் துரோகம் அல்லது ஆலோசனை சங்கத்தாரின் பொறாமை அல்லது பொந்தியு பிலாத்தின் பொறுப்பற்ற தன்மை அல்லது போர்ச்சேவகரின் ஈட்டி என எதுவுமே காரணமல்ல. பிதா தனது குமாரனை ஜீவனை கொடுக்கும்படி அனுப்பினார், கர்த்தராகிய இயேசு தானாக முன்வந்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனது ஜீவனைக் கொடுத்தார் (யோவான் 10:18). கர்த்தருடைய துன்பம் அவருக்கு மிகப்பெரிய சரீர வலி, உணர்வுபூர்வமான வலி மற்றும் சோர்வு, மன வேதனை மற்றும் ஆவிக்குரிய விரக்தியை ஏற்படுத்தும். ஆனாலும், இதன் முடிவோ பெரும் மகிழ்ச்சியைத் தரும் என அறிந்து அவர் உண்மையில் அதைச் செய்தார். ஆம், அவர் அவமானத்தையோ அல்லது விபரீதத்தையோ சிந்திக்கவில்லை; அதன் முடிவில் ஏற்படும் சந்தோஷத்தை மாத்திரம் மனதில் வைத்திருந்தார் (எபிரெயர் 12:2).
நமது பயணம்:
சீஷர்களாகிய நம் பயணம் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவதாகும். அதாவது நிராகரிப்பை மகிழ்ச்சியுடன் தழுவி, அன்பினால் துன்பத்தையும், நம்பிக்கையுடன் மரணத்தையும் தழுவி, இவ்வுலகில் தேவனின் வல்லமையை வெளிப்படுத்த வேண்டும். சிலுவையை எடுக்கும் தீவிர போக்கை எடுக்க விரும்பாத சீஷர்கள் நிராகரிக்கப்படுவார்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆம், "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல" (லூக்கா 9:62).
தேவ ஆட்டுக்குட்டி:
யூத மக்கள் பெரும்பாலும் ஒரு ராஜா மேசியாவை எதிர்பார்த்தனர், சிலர் ஆசாரிய மேசியாவை எதிர்பார்த்தனர். இடிமுழக்கமக்களான யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவானும், சமாரியர்களைக் கொல்வதன் மூலம் (எலியா காலம் போல் அக்கினி இறங்கி) ராஜா மேசியா தனது வெற்றிகரமான வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்று விரும்பினார்கள் (லூக்கா 9:51-56). ஆனால் கர்த்தராகிய இயேசு, உலகத்தின் பாவத்தைப் போக்க, மரிப்பதற்காக, தேவ ஆட்டுக்குட்டியாக வந்தார் (யோவான் 1:29).
வரும் வழியில் அருட்பணி:
கர்த்தராகிய ஆண்டவரின் பயணம் அமைதியற்ற, நம்பிக்கையற்ற, மகிழ்ச்சியற்ற அல்லது மனச்சோர்வடைந்த பயணம் அல்ல. வழக்கம் போல் சீஷர்களுக்குக் கற்பித்தல், நோயுற்றவர்களைக் குணமாக்குதல், பேய்களை விரட்டுதல், எதிர்ப்பை நம்பிக்கையுடன் எதிர்கொள்தல் போன்ற அருட்பணிகளை மேற்கொண்ட பயணம் அது. அவரின் கவனம் அவரைச் சுற்றியுள்ளவர்களின் தற்போதைய தேவைகளைப் புறக்கணிக்கும் ஒரு நடத்தை அல்ல. நித்தியத்தில் கவனம் செலுத்தினாலும், அவருடைய சித்தத்தை எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்பதே ஒரு சீஷரின் அழைப்பு என்பதை மனதில் கொள்வோம்.
இலக்கு மற்றும் உறுதி:
சீஷருக்கு தான் செல்லுமிடம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ஆபிரகாம் செய்தது போல் விசுவாசத்துடனும், கீழ்ப்படிதலுடனும், உறுதியுடனும் பயணத்தைத் தொடர வேண்டும்.
கர்த்தராகிய இயேசுவின் உன்னதமான அழைப்பில் நான் கவனம் செலுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்