தொடர் - 2
கல்லூரி விடுதி கலகலத்தது “ஏய் பிரியா! என் பிரெளன் சேரி உனக்கு நல்லாயிருக்கும். அத “கட்டிட்டுப் போடி....!” என் ஜேக்கட் உனக்கு சரியாகத்தான் இருக்கும்” என்று வினோ உரிமையோடு ஆணையிட்டாள். அவளுடைய டாலர் செயினையும் கழட்டி, பிரியா கழுத்தில் போட்டாள். பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள பிரியா, லஷ்மியோடும், ஆசிரியர் ஒருவருடனும் புறப்பட்டு ஆண்கள் கல்லூரிக்குச் சென்றாள். “செஞ்சிலுவைச் சங்கம்” பற்றிய பேச்சுப் போட்டி அது. கல்லூரியில் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், நாடகம் என எதிலும் சிறப்பாகத்திகழும் அவள் முதல் பரிசோடு வருவாள். கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பாள் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் இல்லை. அவள் உள் மனதிற்குத் தெரியும், 'தான் முதல் பரிசு பெறுவதற்காக இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போகவில்லை” என்று
சாதிப்பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வரதட்சணைக் கொடுமை இவற்றைக் கண்டு மனங்கொதித்த அவள் புதியதோர் சமுதாயம் மலர தானும் தன் பங்கை ஆற்றிட வேண்டுமென துடித்த நாட்கள். எனவே, இந்தப் பேச்சுப்போட்டியில் சமுதாயப் பணியில்தான் அடியெடுத்து வைத்துவிட திட்டமிட்டாள்.
அவள் நினைத்தாள் அனைத்து கல்லூரிகளும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெறும். கல்லூரிக் காளைகளும், கன்னியரும் இருப்பார்கள், அவர்கள் உள்ளத்தே சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தி விட வேண்டும் என கனவு கண்டாள்.
செஞ்சிலுவைச்சங்கம் ஏற்படுத்தப்பட்ட நோக்கம், சங்கம் ஆற்றிய பணிகள் இவற்றை இலோகத் தொட்டுவிட்டு, போரில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டு, போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்ககப்பட்ட மக்களுக்கு உதவி புரிய ஏற்படுத்தப்பட்ட சங்கம்தானே செஞ்சிலுவைச்சங்கம், இன்றைய சமுதாய பாதிப்புகள் எவை என சிந்தித்தீர்களா? என்ற வினாவைத்தொடுத்து, சீர் கேடுகளை முன் வைத்து, சீர்திருத்தம் மலர இளம் சமுதாயம் என்ன செய்ய வேண்டும்? என்பதை விவரித்து, “சமுதாயம் சீர்பெற எங்கள் வாழ்வை முன் உதாரணம் ஆக்குவோம்'” என்ற இலட்சியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் அதுவே எனக்கு கிடைத்த முதல் பரிசு என நான் கருதுவேன்” என்று பேசிட கற்பனைக் கோட்டையை அழகாகக் கட்டி வைத்திருந்தாள். தன்னால் முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவளிடம் இருந்தது. ஆணவம் தலைதூக்கியதா? ஆண்டவன் குறுக்கிட்டார்.
பேச்சுப்போட்டி கல்லூரிக்குள் ஒரு அறையில் நடைபெற்றது. நடுவர்களுடன் போட்டியில் கலந்து கொள்ள வந்த சிலருடன், ஓரிருவரே அங்கிருந்தனர். கல்லூரிக் காளையர் வேறொரு கூட்டத்திற்கு அணிவகுத்து சென்றுவிட்டனர். சத்யபிரியாவின் கற்பனைக்கோட்டை தகர்ந்து தரைமட்டமாகியது.
செஞ்சிலுவைச்சங்கப்பணிகள் பற்றி அவள் அதிகம் ஆயத்தம் செய்யவில்லை. அவள் நன்கு பேசுவாள் என்பதாலும், முதல்வரின் அன்பிற்கு பாத்திரமானவளாக இருந்த காரணத்தினாலும், கல்லூரியில் அவளுக்கு பயிற்சி கொடுக்கவோ, “பேசிக்காட்டு எனக் கூறி அவள் எப்படி ஆயத்தம் பண்ணியிருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளவோ, யாரும் அக்கறை எடுக்கவில்லை விளைவு!
பேச்சுபோட்டி நடந்தது. பிரியாவோ கலங்கினாள். வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை. ஜெபிக்கவும் மனமில்லை. தன்முறை வந்த போது ஏதோ பேசினாள். தன் மனதில் ஆயத்தம் பண்ணினவைகளை தான் திட்டமிட்டவற்றை ஆளில்லா அந்த அறையில் பேசினால் பைத்தியம் என்றல்லவா கூறிவிடுவார்கள். அது மாத்திரமல்ல இந்த பேச்சுப் போட்டியினை நடத்தியவர் உள்ளங்கவர்ந்த ஒரு கல்லூரிக்கு பாரபட்சமாக முதல் பரிசு சென்றது. இவர்கள் கல்லூரி லஷ்மி இரண்டாம் பரிசினைப் பெற்றாள். சத்யபிரியாவின் பேச்சுத் திறமைக்காக ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
கல்லூரி வளாகத்திற்குள் நுழைய மனமற்றவளாக அடியெடுத்து வைத்தாள். அவளைக் கைகுலுக்கி பாராட்ட வந்த கும்பலை நோக்கி தன் கரங்களால் தன் முகத்தை மூடிய படி “எனக்கு பரிசு இல்லை” “எனக்கு பரிசு இல்லை” என்று கூறிக்கொண்டே தன் அறைக்கு வேகமாக ஓடிப் போய்விட்டாள். அவள் அகம்பாவத்திற்குக் கிடைத்த அடியை அவளாள் தாங்க இயலாமல் தடுமாறினாள். அவள் கல்லூரிப் பேராசிரியர்
ஒருவரும் “எல்லாம் இங்கதானா?” என்று ஏளனமாக கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. அவள் ஏன் தவறினாள்? அவள், அவளுடைய இலட்சியத்தை யாரிடம் கூற முடியும்? யார் அதை ஏற்றுக் கொள்வார்கள்? உள்ளம் குமைந்தாள். ஊமையானாள். எந்தப்போட்டியிலும் கலந்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தாள். தன் கூட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்ட நத்தையைப் போல் சுருண்டு கிடந்தாள். அவள் நிலைமையை மாற்ற யாரால் முடியும்? கடவுளால் தான் முடியும். கடவுள் செயல்பட ஆரம்பித்தார்.
கல்லூரி ஆண்டுவிழா களை கட்ட ஆரம்பித்தது. தமிழ் பாட வேளை. வகுப்பறைக்குள் நுழைந்த தமிழ்பேராசியை திருமதி.தங்கலஷ்மி, “பாரதியாரிடம் அதிகம் காணபட்டது தமிழ்பற்றா? நாட்டுப்பற்றா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்போகிறீர்கள். யார், யார் பெயர் கொடுக்கிறீர்கள்? கணீரென்ற குரலில் கேட்டார்.
வகுப்பறையில் நிசப்தம் நிலவியது. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அமர்ந்திருந்தாள் சத்யபிரியா.
“என்ன எல்லோரும் மெளனம் சாதிக்கிறீர்கள்? பதிவு எண்கள் 1 முதல் 10 வரை உள்ளவர்கள் எழுந்திருக்கலாம்.” ஆணையிட்டார். சத்யபிரியா எண் 7 அவருக்கு என்ன தெரியாமலா இருக்கும்?
“உ...ம். தமிழ்பற்று எனப் பேசுபவர்கள் பெயர் சொல்லுங்கள்.”
1,2,3 எனப் பெயர் கொடுத்தனர். “அடுத்து நாட்டுப்பற்று” தமிழம்மா கூற, சத்யபிரியா அமைதிகாத்தாள். தமிழம்மா எளிதில் விட்டு விடுவார்களா என்ன? 1,2 பெயர் கொடுத்தாகி விட்டது. அவள் நேசிக்கும், அவளை நேசிக்கும் தமிழம்மா வென்றார்கள். நாட்டுப்பற்றில் பேச பெயர் கொடுத்தாள் சத்யா.
மாலை நேரம்! “சத்யா! எனக்கு நீதான் எழுதிக் கொடுக்க வேண்டும்'” லஷ்மியின் வார்த்தைகள் கெஞ்சின.
“நானா?” திடுக்கிட்டுக் கேட்டாள் சத்யா.
“ஆமா, நீயேதான்” லஷ்மி உறுதியாய் கூறினாள்.
“உனக்குப் பின் நான்தான் பேசப்போகிறேன். நான் எழுதிக்கொடுத்தால், அதையெல்லாம் நானே அடித்துப் பேசுவேனே! ”ஆச்சரியமாகக் கூறினாள் சத்யா.
“அதைப் பற்றி எனக்கென்ன கவலை? எனக்கு நன்றாக நீ எழுதிக் கொடுத்தால் போதும் லஷ்மி பிடிவாதமாக நின்றாள்.
“சரி! எழுதித் தாரேன். அடித்துப்பேசும் போது வருத்தப்படக்கூடாது; என சத்யபிரியா கூற லஷ்மி,”ஊ..கூம். நான் வருத்தப்படவே மாட்டேன்.” நிம்மதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் லஷ்மி.
லஷ்மிக்கு தெரியும் கடனே என்று சத்யா செய்யமாட்டாள் என்பது.
“பாரதியார் கவிதைகளில் சத்யப்பிரியாவின் கைகளில் நடனம் புரிந்தது. கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தாள். கூட்டுக்குள் இருந்து, நத்தை வெளியே வந்து மெல்ல ஊர்ந்தது. கவிதைகளில் தன்னை இழந்தாள்.
கல்லூரி ஆண்டுவிழா மேடையிலே கல்லூரி மாணவிகள் முழங்கினார்கள். சத்யபிரியா முறை வந்தது. ஆர்த்துவிழும் அருவியென,ஆற்றுப் பெருக்கென, குமுறி எழும் கடல் அலையென சொல்பிரவாகம் வெளிவந்தது.
ஆம்! தன்னைத்தானே கூட்டுக்குள் அடக்கியிருந்த அந்த கூட்டுப்புழு, முழு வளர்ச்சியடைந்த வண்ணத்துப்பூச்சியாக கூட்டைக்கிழித்து வெளியே வந்து, வண்ண மலர்த் தோட்டத்தில் மலருக்கு மலர் பறந்து மகிழ்ந்தது போல், அவள் சொல்மாரி பொழிந்தாள். பள்ளிக் கல்வி இயக்குநர் தமிழம்மாவிடம் ஏதோ பேசுவதையும், தமிழ்ப்பேராசிரியரின் முகம் தங்கத்தாமரையாய் மலர்ந்து ஜொலிப்பதையும் அவள் விழிகள் கவனிக்கத் தவறவில்லை.
தீர்ப்பு வழங்கிட எழுந்த பள்ளிக் கல்வி இயக்குநர் “கடைசியில் பேசிய மாணவி உணர்ச்சி வசமாகப் பேசினார்” என சத்யபிரியாவை பாராட்டி, ஒரு நாணயத்தின் இருபக்கம் போல பாரதியாடம் தமிழ் பற்றும், நாட்டுப்பற்றும் காணப்பட்டது எனத் தீர்ப்பு வழங்கினார். கல்லூரி ஆண்டுவிழா பட்டிமன்றத்தால் இந்தப் பாவையும் சகஜ நிலைக்கு வந்தாள்.
இதன் தொடர்ச்சி துருதுருத்த பாவையா? துருவ நட்சத்திரமா? என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.