திருச்சபையோ திருச்சபை

மல்லிகையுடன் மருக்கொழுந்தும் இணைத்துக் கட்டிய பூச்சரத்தைக் கை நிறைய வாங்கிய சுதா, “சுதா” என்ற அழைப்பைக் கேட்டு நிமிர்ந்தாள். தன்னை நோக்கி வரும் தன் கல்லூரித் தோழி கிறிஸ்டியைக் கண்டாள்.

“வாடி “கிறிஸ்டி! இப்பத்தான் உனக்குக் கண் தெரிந்ததா?” உரிமையுடன் கோபித்துக் கொண்டே வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

“என்னடி செய்றது? வீட்டு வேலை, பள்ளி வேலை, ஊழியம் என நேரம் ஓடுகிறது

போ! இன்று எப்படியும் உன்னைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து வந்தேன்” என்றவள் எங்கே உன் வாண்டு, பிரபு? என்றாள்.

“டியூஷனுக்குப் போயிருக்கான்” என்று கூறியபடி பூச்சரத்தை மடித்து இரண்டாகப் பிரிக்கப் போனவள் சுதாரித்தபடி.

“நீ பூ வைக்க மாட்டாய் இல்லையா? என்றாள். தலையை ஆட்டினாள் கிறிஸ்டி.

“நீ எப்படி பூவை வெறுத்தாய்? படிக்கும் போது பூ பைத்தியமாய் இருப்பாயே?”

"கடவுளுக்கு முதலிடம் கொடுக்கும் போது, இதன் மீதுள்ள ஆசையெல்லாம் நம்மைவிட்டு போய்விடும்.

“கடவுள் பக்திக்கும், பூ வைப்பது, நகை போடுவது இதற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைக்கிறேன்” அமைதியாகச் சொன்ன சுதா பூச்சரத்தை தன் கூந்தலில் சூடிக் கொண்டாள்.

“சுதா! இதற்கெல்லாம் வேதத்தை நன்கு படித்திருக்க வேண்டுமடி. உங்கள் சபையில் எங்கே இதையெல்லாம் போதிக்கிறார்கள்? உயர்நிலை, மேல்நிலை, கல்லூரிக் கல்வி எல்லாம் வேண்டாமா? அதேபோல் தான் எங்கள் சபை பூரணமான வாழ்வு பரிசுத்த வாழ்வுக்கு வழிவகுக்கும். பிரித்தெடுக்கப்பட்ட சபை!” பெருமை பொங்கச் சொன்னவளைப் பார்த்த சுதா, கலகலவெனச் சிரித்தாள்.

“போதுமடி! நிறுத்திக் கொள்! எங்கள் வீட்டிற்கு இருவர், ஏதோ சபையைச் சேர்ந்தவர்களாம்... வந்தார்கள் கிறிஸ்தவர்கள் தானே ஜெபிக்கட்டும் என்றிருந்தேன் காணிக்கை, சபை என்று பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் அவர்கள் சபைக்கு வரமாட்டோம், தசம பாகத்தையெல்லாம் அவர்களுக்குத் தர மாட்டோம் என்று தெரியவும், எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள் தெரியுமா? எல்லாம் காணிக்கையிலதான் விஷயம் இருக்கிறது. தெருவுக்கொரு சபை!” பதிலடி கொடுத்தாள் சுதா! 

“தெருவிற்கொரு சபையாக இருந்தாலும் பரவாயில்லை தெரு சிரிக்கும் சபையாக இருக்கக்கூடாது தெரிந்து கொள். ஞாயிறு அன்று பக்திப் பரவசமாகக் காணப்படும் பரிசுத்தவான் 11மணிக்கு மேல் குடியிலும், வெறியிலும், சினிமா தியேட்டரிலும் காலம் கடத்துவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. வாரத்தின் ஆறுநாட்களும் ஆடுகிற ஆட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை பாவ அறிக்கை செய்து விடுவது போலும், எலெக்ஷன் வந்து விட்டால் சொல்ல வேண்டியதே இல்லை. பொதுத்தேர்தல்கள் ஆலயத் தேர்தலிடம் பிச்சை வாங்க வேண்டும். சுதா! உங்கள் சபையில் ஒருவர் எலெக்ஷனில், தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் சந்தாக் கட்ட தவறியவர்களுக்கெல்லாம் தானே கட்டினார். பின் அந்த மக்களிடம் உங்களுக்காக நான் பணம் கட்டியுள்ளேன். எனக்குத் தான் ஓட்டுப்போடவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். வெற்றியும் பெற்று விட்டார். அதன் பின் ஏழை எளிய மக்களும் தன்னை எதிர்த்துப் பேசாதவர்களுமாகியவர்களிடம் “உனக்காக நான் இவ்வளவு பணம் கட்டியுள்ளேன். எனக்கு அதைக் கொடுத்துவிடு” என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இது சுய நலத்திலும் கேடு கெட்ட சுயநலம்!” வார்த்தைகள் சாட்டையாயின!

“கிறிஸ்டி! உங்கள் சபையில் குறையே இல்லை என்று எண்ணுகிறாயோ? நீ கூறும் பிரித்தெடுக்கப்பட்ட சபையிலே கணவனும். மனைவியும் பிரிந்திருந்தாலும் பரவாயில்லை காணிக்கை வந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள் தெரியுமா? நான் ஒரு முறை அவர்கள் சபைக்குச் சென்றிருந்தேன். அந்த சமயம் மதிய சமையலைக் குறித்த சர்ச்சை எழுந்தது. வாழ்வின் எல்லாப் பந்த பாசங்களையும் திருமண வாழ்வையும் தியாகம் பண்ணிவிட்டு வந்த அந்த ஊழியப் பெண்களிடையே எழுந்த சர்ச்சை என்ன தெரியுமா? ஒருவர் கருவாட்டுக் குழம்பு இன்று வைக்க வேண்டும்” என்று கூற; மற்றொருவர் கருவாடு பொரிக்க வேண்டும்” என்று வாதாட, கடைசியில் கருவாடு குழம்பும் வைக்கப்பட்டு, கருவாடு பொரிக்கவும் வேண்டும். என்ற முடிவிற்கு வந்தனர். கேவலம்! ஒரு வேளை உணவிற்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில்லையே! அது மட்டுமல்ல மற்றொருமுறை நான் வாங்கிச் சென்ற பலகாரங்களை, நான் யாரைப் பார்க்கச் சென்றேனோ அந்த ஊழியக்காரப் பெண்மணி யாருக்கும் தெரியாதபடி என்னிடமிருந்து வாங்கித் தன் பெட்டியில் வைத்துக் கொண்டார்கள். என் மனம் வேதனைப்பபட்டது. அங்குள்ளவர்கள் மூவரோ, நால்வரோ தான் அவர்கள் அனைவரும் அதை பகிர்ந்துண்ணக் கூடாதா? ஏதோ கதை சொல்லுகிறேன் என்று எண்ணாதே! அனுபவித்ததைத்தான் சொல்லுகிறேன். இதுதான் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வா? அல்லது தியாக வாழ்வா?” சொல்லம்புகள் வேகமாகப் பாய்ந்தன.

“சுதாம்மா!” என அழைத்துக் கொண்டே ஒரு நடுத்தர வயதுடைய பிராமணப் பெண்மணி உள்ளே வந்தார்.

“வாங்கோ மாமி வாங்கோ! என வரவேற்றவள், “நல்ல நேரம் பார்த்துதான் வந்திருக்கேள்! எங்க விவாதத்திற்கு நீங்களே தீர்ப்பு சொல்லிடுங்க. உங்களுக்குத்தான் நன்னாத் தெரியும்!” மாமியிடம் மாமி மாதிரியே பேசுவதில் சுதாவிற்கு அலாதி பிரியம்.

“மாமியைப் போய் தீர்ப்பு வழங்கச் சொல்லறையே!” சிரித்தாள் கிறிஸ்டி

“கிறிஸ்டி! மாமியை இலேசாக எடை போட்டுவிடாதே. கிறிஸ்டியன் என்றால் ட்ரூ கிறிஸ்டியன். வெறும் மதம் மாறியவர்கள் அல்ல. மனம் மாறியவர்கள். அதிகாலை ஜெபமும், வேதவாசிப்பு, தியானம், ஊழியம் இதில் சிறந்தவர்கள். அவர்கள் வேத ஞானம் உனக்கு இருக்காது எனக்கும் இருக்காது!

“உங்களுக்குள் என்ன பிரச்சனை? சொல்லுங்கோ?”

“மாமி! சபைச் சண்டைதான்!” என்றாள் கிறிஸ்டி

“சபை என்றால் எதைச் சொல்றேள்? கல்லாலும், சிமெண்டாலும் கட்டப்பட்ட கட்டடத்தையா? இரத்தமும் சதையுமுள்ள சரீரமாகிய சபையையா?

மாமியின் வினா இருவரையுமே சுண்டி இழுத்தது. 1கொரிந்தியர் 3:16ல் கூறியபடி “ஆலயமாகிய நம் சரீரத்தை கறையில்லாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்று திருமறை கூறியபடி திருச்சபையோடு நாம் இணைந்திருக்க வேண்டும். ஆலோசனை கூற ஆறுதல் வழங்க உற்சாகப்படுத்த சபை கூடி வருதல் அவசியம்!”

“மாமி! எந்த சபை சிறந்தது? அதைச் சொல்லுங்கள்!” கிறிஸ்டி வேகமாகக் கேட்டாள். “கிறிஸ்டி! உன் அவசரம் நேக்குப் புரியறது. சுதா பங்குபெறும் திருச்சபை நீ நினைக்கிறமாதிரி தரம் குறைந்தது அல்ல! வெறும் சடங்காச்சாரம் தேவனை ஆராதிப்பது ஆகாது. தூய அன்பு, ஒழுக்கமான வாழ்வு, சேவை மனம் இதுதான் பக்தி வாழ்வு என்பதை நிலைநாட்டத் துணிந்து முன் வந்த தீரன் மார்டின் லூதர் மற்றுமுள்ள பரிசுத்தவான்௧ளால் ஸ்தாபனம் செய்யப்பட்டது தானே இந்தத் திருச்சபை!”

“அப்படிச் சொல்லுங்கோ மாமி! முகமெல்லாம் மலரக் கை தட்டினாள் சுதா ”

“போதுமடி உன் சந்தோஷம்! பழம் பெருமை பேசிக் கொண்டே படுத்துத் தூங்குவோம் கிறிஸ்டி ஏன் இந்தச் சபையைக் குறை சொன்னாள். நாம் பக்திக்குரிய காரியங்களில் அக்கறை காட்டாமல் இருப்பதினால் தானே! ஜெபம், தியானம், வேதவாசிப்பு, ஊழியம் என்று நாம் நேரத்தை செலவு செய்யவேண்டும்! என்று கூறியவர் கிறிஸ்டியின் பக்கம் திரும்பி “கிறிஸ்டி! ஆவியின் வரங்கள் அவசியம் தான். ஆனால் அதைவிட ஆவியின் கனி நிரம்பிய வாழ்வுதான் முக்கியம். வரமில்லாவிடினும் பரலோகம் செல்ல முடியும். கனியின்றேல் நாம் போக முடியாது. கர்த்தாவே கர்த்தாவே! என்று கதறுவது மட்டும் பக்தி வாழ்வாகாது. கடவுள் சொன்னபடி வாழ்ந்து காட்டணும் என்று திருமறை சொல்லுகிறதல்லவா? பிரித்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கிறிஸ்தவர்களையே வலை போட்டுப் பிடித்துத் தன் கூட்டத்தில் அடைப்பதைவிட கிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களிடம் அவரை அறிவித்து அவர் மந்தையில் சேர்க்கப் பாடுவதே சிறந்தது! “ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து விட்டார் மாமி!

சிறிது நேரம் அங்கு மெனளம் நிலவியது. மாமியே தொடர்ந்தார். “நாம் பங்குபெறும் சபை நமக்கு மோட்சத்திற்கு டோக்கன் ஆகாது. சபை வழி காட்டும். வழி செல்ல வேண்டியவர்கள் நாம். நமக்கும் பகவானுக்குமுள்ள தொடர்புதான் நம்மை மோட்சத்திற்கு அனுப்பும். என் சபை... உன் சபை என்ற உங்கள் சபைச் சண்டைகளே எங்களைப் போன்றவர்களை கிறிஸ்துவை விட்டுப் பிரிக்கிறது” என்று மாமி கூற, சுதாவும், கிறிஸ்டியும் தம் தம் குறைகளை ஆராய்ந்து நிறைவாக்க முற்பட்டனர்.

இந்தக் கதை  நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download