கிறிஸ்மஸ் சேலை

“சாந்தா! சுதா வந்தாச்சா? என உற்சாகமாக கேட்டுக்கொண்டே வந்த கணவனை ஆச்சரியத்துடன் வரவேற்றாள், சாந்தா.

“நீங்கதான். இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்க

சுதா இன்னும் வரலை”? ஏன் இவ்வளவு சீக்கிரம்? எனக் கேட்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

நீதான் தீபாவளிக்கு லோன் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டே!"

கிறிஸ்மஸ்ஸாக்கு லோன் போட்டுக்குவோம்! நிதானமாகச் சொன்னாள் சாந்தா.

கிறிஸ்மஸுக்கு லோன் போட்டு என்ன செய்ய டிரஸ் எல்லாம் இப்ப எடுத்தாத்தானே முடியும் சாந்தா தீபாவளிக்கு லோன் எடுத்தா நாம எல்லாம் இந்துவா மாறிட்டோமென்று அர்த்தமில்லை. பணம் கடன் எடுக்கிறோம். நாம் தான் கட்டப்போகிறோம், இதற்கெல்லாம் நீ மாட்டேன் என்பது குருட்டு பக்தி!"?

கிறிஸ்தவளா இருந்துகிட்டு தீபாவளி கொண்டாட கடன் கொடுக்கணும்னு லோன் வாங்க எனக்கு விருப்மில்லைன்னா விட்டிருங்களேன்!? அமைதியாகச் சொன்னாள். 

ஹை!. அப்பா சீக்கிரமே வந்துட்டாங்களே! எனக் கூறிக்கொண்டே தன் புத்தகங்களை மார்போடு அணைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் அந்தக் கல்லூரிக் கன்னி!

"வாடா சுதா! உனக்காகத்தான் காத்திருக்கேன்! நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த வைலட் கலர் காஞ்சீபுரம் புடவையை. எடுத்திட்டு வந்திடலாம், சீக்கிரம் புறப்படும்மா!” துரிதப்படுத்தினார் தந்தை.

தந்தையின் அருகில் அமர்ந்த சுதா, “எவ்வளவு ரூபாய்க்குப்பா எடுப்பீங்க?'' ஆவலே வடிவாகக் கேட்டாள், சுதா.

பி,எஃப். லோன் எடுத்திட்டு வந்திருக்கேன். உனக்குப் பிடிச்ச சேலை எவ்வளவு விலை என்றாலும் எடுத்துத் தாரேன். 2000 ரூபாய் உனக்கு ஒதுக்கிட்டேன் சந்தோஷம் தானே!” சிரித்தார் தனராஜ்.

சிறிது நேரம் மெளனம் நிலவியது. உற்சாகமாகத் துள்ளி எழுந்து கடைக்குப் புறப்படுவாள் என எதிர்பார்த்த தனராஜ் சிறிது ஏமாற்றமே அடைந்தார்.

அப்பா! அந்த ரூபாயை எனக்கேத் தருவீங்களா?! பரிதாபமாக நிமிர்ந்து பார்த்தாள் சுதா.

தனராஜாக்கு ஒன்றுமே புரியவில்லை. நீ அந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப் போறே?' அவர் நெற்றி சுருங்கியது.

நீங்க கோபிக்க மாட்டேன்னு சொன்னாத்தான். சொல்லுவேன்! பீடிகை போட்டாள் சுதா.

மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அவர் கோபிக்கும் வண்ணம் அவள் நடந்து கொண்டது கிடையாது.

சரி கோபிக்கவில்லை. நீ ரூபாவை என்ன செய்யப் போறே?

எனக்கு எதுக்கப்பா இப்பவே காஞ்சீபுர சேலை?' எனக்கு வேண்டாம்பா! ஒரு காட்டன் சில்க் எடுக்கறேன். ரூ. 1500 ஐ மிஷனரி இயக்கத்திற்கு கிறிஸ்மஸ் பரிசா அனுப்பறேம்பா” அவள் வார்த்தைகள் கெஞ்சின.

“என்ன மிஷனரி இயக்கத்கிற்கா? ரூ. 1500.ஐயா? அதிர்ச்சியால் கூவினார். அவருக்குத் தலை சுற்றியது.

அப்பா! நாம் வாழும் தமிழகத்திலேயே உண்ண, உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், நாகரீகமே அறியாமல் வாழும் மக்கள் இருக்காங்கப்பா! அவங்க மத்தியிலே போய் இயேசுவைப் பற்றிக்கூறி, அவர்களுக்கு' தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களையும் மனிதர்களாக இச்சமுதாயத்தில் வாழ வைக்க தங்களது படிப்பை, சுகவாழ்வை தியாகம் செய்து, எத்தனையே பட்டதாரிகள் மிஷனரிகளாகப்போய் ஊழியம் செய்றாங்க” நாம் ஊழியந்தான் செய்யவில்லை. நம்ம பொருளால் தாங்கக் கூடாதா? குட்டிப் பிரசங்கமே செய்தாள் சுதா

தன் மகளா இப்படிப் பேசுகிறாள்? இதற்குக் காரணம் என்ன?” அவர் மூளை வேலை செய்தது. கடந்த மாதம் ஏதோ கூட்டம் என்று தன் மனைவியும் மகளும் சென்று வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. மகளின் பரிதாப முகத்தைக் கண்ட அவரால் கோபப்பட முடியவில்லை.

என் மீது தவறு! ஞாயிற்றுக்கிழமை சர்சிக்குப் போறது தவிர வேறு எங்கும் போகக்கூடாது என கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தால் இதெல்லாம் வராது? என்று முணுமுணுத்தவர்.. மெதுவாக மகளிடம், சுதாம்மா! இதெல்லாம் பணம் பறிக்கிற வேலை. ஆள் ஆளுக்கு ஊழியம் செய்கிறோம் என்று நம்மிடம் பணம் பறிக்கிறார்கள். நீ சின்னப்பிள்ளை உனக்கு இதெல்லாம் தெரியாது. நாம்தான் சர்ச்சுக்குக் காணிக்கை கொடுக்கிறோம். நீ வேணா ஒரு பத்து ரூபா அந்த இயக்கத்துக்கு அனுப்பிவிடு.”? சமாதானம் செய்தார் தனராஜ்.

தன் கணவனின் கோபம் தன்னைச் சாடிவிடக்கூடாது என உணர்ந்தவளாக, சாந்தா சிற்றுண்டி தயாரிக்கும் சாக்கில் சமையலறையில் தஞ்சம் புகுந்தாள்.

சுதா தன் தந்தையிடம், **அப்பா! மூட நம்பிக்கையிலே மூழ்கிப் போயிருந்த இந்த இந்தியாவை வாழவைக்க எத்தனையோ வெளிநாட்டு மிஷனரிகள் பணம், பதவி, சுகம் எல்லாவற்றையும் தியாகம் பண்ணி இங்கு வந்து ஊழியம் செய்ததால்தான் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோமாம். இயேசுவை அறிந்த நாம் அறிவிக்க வேண்டுமப்பா! நிறைய இயக்கங்கள் இருக்குன்னு சொல்றீங்க தேவை அதிகமா இருக்கே. நிறைய இயக்கங்களும், நிறைய ஊழியக்காரங்களும் வேண்டும்ப்பா! அவங்க... ஊரிலிருக்கிறவர்கள் பணத்தை வாங்கி உல்லாசவாழ்க்கை நடத்தலையேப்பா!' 

சுதா! நான்தான் உன்னைப் பத்து ரூபா அனுப்பச் சொல்றேனே! மிஷனரி ஊழியத்திற்காக நல்லா ஜெபி!

ஜெபிப்பது அதிக முக்கியமானதுதாம்ப்பா! இல்லையன்று சொல்லவில்லை. ஆனால் நம்மால் முடிந்த உதவிகளைக்கூட செய்யாமல் வெறும் ஜெபம் செய்வதில் பயனில்லைப்பா! ஆண்டவர் நமக்கு ஆசீர்வாத வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு ஆசீர்வாதம் கொடுக்கலைன்னா...? சுதாவோ தன் வேண்டுதலில் பிடிவாதமாக இருந்தாள்.

“சுதா! அப்பா சொல்றதை கேட்கமாட்டேங்ற! 100 ரூபாய் வேணா அனுப்பு, ரூ. 1500 தூக்கிக் கொடுக்க நான் தயாராக இல்லை.

“அப்பா! நீங்களும் சம்பாதிக்கிறீங்க. அம்மாவும் சம்பாதிக்கிறாங்க, இருவர் சம்பளத்திலும் பத்தில் ஒரு பங்கு நீங்க கொடுக்கணும். அப்படிப்பார்த்தா, இந்த ரூ. 1500 - உங்களுடைய இரு மாத தசமபாகக் காணிக்கைகூட இல்லையேப்பா! அப்பா! இயேசு சாமி சொன்ன. ஐசுவரியவான், லாசரு உவமையில் ஐசுவரியவான், லாசருக்கு உதவாத ஒரு தவற்றைத் தவிர எந்தப் பாவமும் செய்ததாக தெரியவில்லையேப்பா! நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாதிருப்பது பாவம் என திருமறை... கூறுகிறதே!” அவள் தன் கோரிக்கைகளுக்காக வழக்கறிஞரைப்போல வாதாடினாள். 

தனராஜின் சிந்தையில் லாசரு - ஐசுவரியவான் நிகழ்ச்சி இடம் பெற்றது. பின், குறைந்த வருவாயிலும் தசம பாகம் எடுத்து வைத்ததையும், 1 பிடி அரிசி காணிக்கை செலுத்தி வாழ்ந்த தன் அருமைத் தாயையும் தகப்பனை கொஞ்சம் நினைவு கூர்ந்தது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியரான தன் தந்தை மக்கள் நால்வரையும் நன்கு படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தது தேவனுடைய சுத்தக் கிருபையே என்பதையுணர்ந்தார். ஆடம்பர வாழ்வில் மோகம் கொண்ட தான் வழி விலகியதையுணர்ந்தார். தன்னையும், தன்

உடைமைகளையும் தேவனுக்கு அர்ப்பணிக்க முடிவெடுத்தார். தானும் தன் மனைவியும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தன் வீட்டில் ஆசிர்வாதக் குறைவு இருப்பதன் காரணத்தை உணர்ந்து கொண்டார்.

சுதா! நீ விரும்பியபடி ரூ. 1500ஐ மிஷனரி இயக்கத்துக்கு அனுப்பி விடு, மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து அனுப்பு. அது அவர்களது நல்ல திட்டங்களுக்குப் பயன்படட்டும்!

எதிர்பார்த்ததற்கும் மேலாக வெகு விரைவில் தனக்கு வெகு விரைவில் அனுமதி கிடைத்ததை உணர்ந்த சுதா “எங்கப்பா... நல்ல அப்பா “ என்று சிறுபிள்ளையைப் போலக் கூவினாள்.

சிற்றுண்டியுடன் ஹாலுக்குள் நுழைந்த சாந்தாவின் இதழ்கள் **ஸ்தோத்திரம் தேவா”? என இசைத்தன.

இந்தக் கதை  உதய கீதம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Udhaya Geetham - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download