நமது அருமை மீட்பரும், ஆலோசனைக் கர்த்தரும், வல்லமையுள்ள தேவனும், நித்திய பிதாவுமாகிய இயேசு பெருமான் இவ்வகில லோக மக்களைப் பாவச் சேற்றினின்று மீட்க மனுக்குலத்தோன்றலாக அவதரித்த பொன்னாள் டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் வருகிறது. அவர் பிறந்த தினத்தை நாம் எங்ஙனம் கொண்டாடுகிறோம் எனக் காண்போம்.
இன்றைய கிறிஸ்தவ இல்லங்களைப் பார்வையிடுவோம் வாருங்கள். ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதே, உள்ளே சென்று பார்ப்போம். அதோ நாற்காலியில் உட்கார்ந்து தினசரிப் பத்திரிக்கை படித்துக் கொண்டிருக்கிறாரே அவர் தான் வீட்டுத்தலைவராக இருக்க வேண்டும், அருகில் நிற்கும் பெண் அவர் மகள் போலும்.
மகள் “அப்பா! இந்தக் கிறிஸ்துமஸ்க்கு, எனக்கு கோகோ கலர் காஞ்சீபுரம் புடவை எடுத்துத் தரணும்பா! நானும் கடைக்கு வர்ரேன். உங்களுக்குப் புடவைக்கு ஒப்பாகச் சட்டை எடுக்கத் தெரியாது” குற்றச்சாட்டுடன் கலந்த வேண்டுகோள்.
அதற்குள் “அப்பா” மற்றொரு குரல். திரும்பிப் பார்க்கிறோம். ஒரு இளைஞன் கிராப்பைச் சரி செய்தவாறே வருகிறான். “இந்தக் கிறிஸ்துமஸ்க்கு நான் சொன்ன அதே டொலின்சர்ட், “ஜீன்ஸ் பேண்ட் எடுக்கணும். காலா, பட்டன் எல்லாம் நானே போய் வாங்கிக்கிறேன். டெய்லர்கிட்ட நானே போய் குடுக்கிறேன்பா, மறந்திடாதிங்க” என்றுரைத்ததைக் கேட்ட குடும்பத்தலைவர், சரி சரி! நீங்களும் கடைக்கு வாங்க. டெய்லர் கிட்டப் போய் ஸ்டைலா, டைட்டா, என்ன கண்ணறாவியோ தைச்சுக்கங்க... போதுமா” என்றவர் மனைவியை அழைக்கிறார்.
“மேரி, இந்த தடவை எங்க கம்பெனி மேனேஜரை கிறிஸ்துமஸ்க்குக் கூப்பிடப்போறேன். ஸ்வீட்டெல்லாம் பிரமாதமா இருக்கணும். அவரை விருந்திலே திணர அடிச்சரணும். மனுஷன் ரொம்ப சந்தோஷப்படுவார். ஏதோ......பிரமோஷன் சமயம் என்னை கவனிச்சுக்குவார் பாரு”.
மனைவி : அது செய்யணும்! இது செய்யணும் அப்படின்னு சொல்லிட்டா போதுமா? முக்கியமா சீனி, நெய் எல்லாம் முதல்ல வாங்கி வையுங்க!
இந்த இல்லத்தில் கிறிஸ்துமஸை எப்படி வரவேற்கிறார்கள் எனப்பார்த்தீர்களா? வாருங்கள் மற்றொரு இல்லம் போவோம். என்ன ஒரே அமைதி! கன்னத்தில் கை வைத்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ஒருவர். பக்கத்தில் ஒரு சிறு பையன்.
சிறுவன், “அப்பா! இந்தக் கிறிஸ்துமஸ்க்கு சந்திரன் அப்பா ப்ளு டொலின் சர்ட் அவனுக்கு எடுத்துத்தாறேன்னு சொல்லியிருக்காருப்பா! நீ எனக்கு என்னப்பா வாங்கித் தரப்போற” ஏக்கத்துடன் தந்தையைப் பார்க்கிறான்.
தந்தை, “பாபு உனக்கும் அதே சர்ட் வாங்கித்தாறேன். நீ போய் விளையாடுப்பா மகனை வெளியே அனுப்புகிறார். அந்த 2 அறைக்குள் ஒரு மாது நுழைகிறார். அவர் மனைவி போலும். “என்னங்க! அவனுக்கு மட்டுமாவது. சட்டை எடுக்கப்பாருங்க. கிறிஸ்டி வேறே வருவா. என்ன பலகாரம் செய்யறதுண்ணு தெரியல்ல. நீங்களோ அட்வான்ஸ் தரமாட்டாங்கண்ணு வேற சொல்றீங்க. இந்த கிறிஸ்துமஸ் ஒண்ணு...... மாதக் கடைசியில் தான் வரும். கடவுள் நம்ம வீட்டுக்கு இப்படிச் சோதனை தரக்கூடாது! ஒரு வருஷமாவது இந்தக் கிறிஸ்மஸை நல்லா கொண்டாடியிருப்போமா?” - ஓரே அங்கலாய்ப்பு.
என்ன, பார்த்தீங்களா?
நாம் கிறிஸ்மஸை வரவேற்கும் முறையை! ஒரு இல்லத்தில் கிறிஸ்மஸை எப்படியெல்லாம் கொண்டாடலாமெனக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு இல்லத்தில் எப்படித்தான் கொண்டாடப்போகிறோமோ எனக் கவலை கொண்டிருக்கிறார்கள். இவ்விரு குடும்பத்தின் கவலையும், களிப்பும், பட்டாடை, பலகார பட்சணம், விருந்தின் வருகை இவற்றைப் பற்றிதான் இருக்கிறதே ஒழிய, நமக்காக நமது தேவன் , குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பிய பொன்னான நன்னாள்: நம் மீட்பர் உதித்த தினம் என்ற மகிழ்வோ, உவகையோ, உள்ளத்தில் தோன்றக் காணோம்.
அன்று நமது இயேசு நாதர் மார்த்தாளிடம் “மார்த்தாளே! மார்த்தாளே! நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகின்றாய். தேவையானது ஒன்றே. மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்” என்றார் (லூக்கா 11:41:42) நாம் மார்த்தாளைப் போல் அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறோமா? அன்றி மரியாளைப் போல் நல்ல பங்கைத் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறோமா? சற்று சிந்திப்போம்.
கிறிஸ்து பிறந்த அன்றைய நாளைக் காண்போம். கிறிஸ்து எங்கு பிறந்தார்? செல்வம் மிகு இடத்திலா? பெத்லகேமில் தச்சனது குடிலில், மாட்டுத்தொழுவத்தில், மாடுகள் சூழ்ந்திருக்க, புல்லையே பஞ்சணையாக்கிப் புன்னகையுடன் படுத்திருந்தார். அவர் பிறந்த செய்தி தேவ தூதன் வாயிலாக ஆட்டிடையர்களுக்கே முதலில் அறிவிக்கப்பட்டது.
உலக மக்களைப் பாவத்தினின்று மீட்கும் உன்னத தேவன் ஏன் மாட்டுத்தொழுவத்தில் உதிக்க வேண்டும்? அவர் அங்ஙனம் தாழ்மையின் ரூபமெடுத்தது நாம் அவா் வழி நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே? அந்தத்தாழ்மை நம்மிடம் இருக்கிறதா? சற்று சிந்திப்போம்.
ஆண்டவர் பிறந்த மகிழ்ச்சியில் கலக்க ஆட்டிடையர் அன்று அழைக்கபட்டனர். இன்று நாம் யாரை நம் இல்லங்களுக்கு அழைக்கிறோம்? நம்மைவிட உயர்ந்தவர்களை அவர்கள் மனதைத் திருப்திப்படுத்தவே அழைக்கிறோம். துன்புறுவோரை அன்புடன் ஆதரிக்க அழைப்போம். அப்போது அவர்களது அகமும் முகமும் மலரக் காண்போம்: அவர்களை மகிழ்விப்பதில் கிறிஸ்து பெருமானையும் மகிழ்விக்கிறோம். நமது கிறிஸ்துமஸ் மகிழ்ந்து, மகிழ்வு பகிரும் விழாவாயிருக்கட்டுமே!
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.