கிறிஸ்மஸ் உடுப்பு

நீல வண்ண வானத்தில் நீந்தி வந்த வெண்ணிலவு கருமுகிலில் தன்முகம் மறைக்க வானம் கறுத்தது! இருள் சூழ்ந்தது! குடிசைக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த ஞானமுத்துத் தாத்தாவின் மனதிலும் இருள் மண்டிக்கிடந்தது. ரயில் விபத்தில் மாண்டு போன மகனும் மருமகளும் விட்டுப்போன ஒரே சொத்து பேத்தி கவிதா! கவிதா......ஏழே வயது நிரம்பிய சிறுமி! அறிவும், பண்பும், அழகும் அவளிடம் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்திருந்தன. அவளுக்கும் அவருக்குமிடையே நடந்த “உரையாடல் அவர் உள்ளத்தில் எழுந்தது!

“தாத்தா ! இயேசு சுவாமி எது கேட்டாலும் கொடுப்பாரா? ஆவலாகக் கேட்டாள் கவிதா.

“நிச்சயம் கொடுப்பாரம்மா” தாத்தா உற்சாகமாகக் கூறினார்.

“தாத்தா ! நான் ஸ்கூலுக்கு போற வழியிலே இருக்கிற “ரங்கா ரெடிமேட் கடை”? யிலிருக்கிற பொம்மை போட்டிருக்கிற ஒயிட் கவுன், ஒயிட் பாசி வைத்துத் தைத்து ரொம்ப அழகா இருக்கு தாத்தா! அதைக் கேட்டா கிறிஸ்மஸ் உடுப்பா சாமி தருவாரா?

ஞானமுத்துத் தாத்தா திகைத்துப் போய்விட்டார். தனக்கு வேண்டும் என்று இதுவரை கவிதா எதையுமே கேட்டதில்லை! அந்த பிஞ்சு மனதில் ஆசை இருப்பதை உணர்ந்தார். தாத்தாவின். மெளனத்தைக் கண்ட கவிதா 

ஏன் தாத்தா கொடுக்கமாட்டாராக ஏக்கத்தோடு பார்த்தாள்.

கொடுப்பாரம்மா? எந்திரம் போல் பதில் சொன்னார். உடனே கவிதா குடிசையின் ஒரு மூலைக்கு ஓடினாள். அங்கு ஒரு முக்காலியின்மேல் அவளுடைய புதிய ஏற்பாடு இருக்கும். அங்குதான் மண்டியிட்டு ஜெபிப்பாள் அந்த மூலைதான் அவளுடைய ஜெப அறை! அங்குபோய் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

அதைக்கண்ட ஞானமுத்துத் தாத்தா எப்படியாவது அந்த ஒயிட்கவுனை வாங்கிவிட வேண்டும் என்று அவள் கூறிய கடைக்கு சென்று விசாரித்தார். அந்த அழகிய கவுனின் விலை ரூ.170 திகைத்துப் போய்விட்டார். சாதாரண தோட்டக்காரனான அவருடைய மாத வருமானமே ரூ.120.தான் என்ன செய்வார்.

இருளுள்ள ஸ்தலங்களில் பிரகாசிக்கிர விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும், பேதுரு அப்போஸ்தலன் கூறுவது போல துன்பம் இருள் சூழ்ந்த போது இறைவனின் வாக்குத்தத்தங்கள்  நட்சத்திரங்களாக மின்னுகின்றன. "கேளுங்கள்! அப்பொழுது உங்கள் சந்தோசம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்.” கேளுங்கள் கொடுக்கப்படும் ... என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாளும் அதை நான் செய்வேன். என்ற வாக்குத்தத்தம் அவர் உள்ளத்தில் எழும்ப இறைவனை நோக்கி மண்டியிட்டார். தேவா என் பேத்தியின் ஆசையை நிறைவு செய்யப்பா! அவர் விழிகள் கண்ணீரைச் சிந்தின.

கவிதா படிக்கும் பள்ளியின் வளாகம் அன்று மக்கள் திரளால் நிறைந்தது. அந்தக் கூட்டத்தில் ஞானமுத்துத் தாத்தாவும், பாட்டியும் இருந்தனர். மின் விளக்குகளாலும், வண்ணக்காகித மலர்களாலும் நாடக மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று கிறிஸ்மஸ் மரவிழா ! மணி 7! கிறிஸ்து பிறப்பு நாடகம் நடைபெற ஆரம்பித்தது. தேவ தூதனாகத் தோன்றிய கவிதா பேசிய வசனமும், நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் வியப்பேதுமில்லை. இறுதியில் பரிசு வழங்கும் வைபவம் நடைபெற்றது. ஞான முத்துத் தாத்தாவின் உள்ளம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. தனக்குரிய பரிசைப்பெற கவிதா மேடைமேல் ஏறினாள்! அட்டைப்பெட்டி ஒன்றை வாங்கினாள். அனைவரும் அவரவர் வீடு நோக்கித் திரும்பினர், தங்கள் குடிசையை அடைந்ததும் அவசரமாக அட்டைப் பெட்டியைப் பிரித்தார் தாத்தா! அதில் அவர் எதிர் பார்த்தபடி வெண்ணிற கவுனோ, ரூபாயோ இல்லை. கிறிஸ்து பாலகனாக புல்லணையில், மேய்ப்பர்கள் சூழ படுத்திருக்கும் ஒரு பெரிய படமும், வெண்ணிற பாசி மாலை ஒன்றும் இருந்தது. அவரது முகம் கதிரவனைக் கண்ட குவளை போல் கூம்பியது. கடந்த மூன்று தினங்களாகத்தான் வேலை பார்க்கும் வீட்டு எஜமானர், மற்றும் சிலரிடம் கடன் கேட்டு அலைந்தார்! தன் சம்பளத்தில் சிறிது சிறிதாகக் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில்! ஆனால் எங்கிருந்தும் பணம் பெயரவில்லை. கவிதாவிற்கு கிடைக்கும் பரிசாவது வெண்ணிற கவுனாக வராதா? என்று ஏக்கத்தோடு துடித்துக் கொண்டிருந்தார், அதுவும் நடக்கவில்லை. மனம் சோர்ந்தார் தன் ஜெபத்தை இறைவன் கேட்கவில்லையே என்று மனம் கலங்கினார்.

தாத்தா!'” கவிதாவின் உற்சாகமான குரல் ஞானமுத்துத் தாத்தாவை இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது,

தாத்தா இயேசு பாலகன் எவ்வளவு அழகாக இருக்கார் பார்த்தீங்களா! -- என்று கூறியவள் குழந்தை இயேசுவுக்கு முத்தமிட்டாள். பின் “தாத்தா ! . எனக்கு இயேசு சுவாமி வாங்கித் தரப்போற. ஒயிட் கவுனுக்கு மேட்சா பாசி கிடைச்சிருக்கு பார்த்தீங்களா? நான் போய் சாமிக்கு தாங்ஸ் சொல்லப்போறேன்”? அவளுடைய ஜெப அறை, அதுதான்... மூலைக்கு ஓடினாள்! முழங்காலில் நின்றாள். தாத்தாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன! கவிதாவின் முகத்தில் ஏக்கமோ கவலையோ இல்லை! அவள் திடமாக நம்பிக் கொண்டிருந்தாள்...சாமி தனக்குத் தருவார் என்று! இன்னும் இருதினங்கள் இருந்தன. கிறிஸ்மஸ்க்கு. அப்பொழுது... ...

ஐயா”-குரல் கேட்டு வெளியே வந்தார் ஞானமுத்துத் தாத்தா! ஒரு ஆள் கையில் அட்டைப் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தான்.

“ரங்கா ரெடிமேட் கடை'' முதலாளி இதை உங்களிடம் கொடுத்து விட்டு வரச் சொன்னார்' '- பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டான். பெட்டியினுள் ஒரு கடிதமும், பிளாஸ்டிக் பையும் இருந்தது. கடிதத்தைப் படித்தார் தாத்தாவின் முகம் மலர்ந்தது! “தான் எதிர்பாராத விதமாக கவிதா நடித்த கிறிஸ்து பிறப்பு நாடகத்தைப் பார்க்க நேர்ந்ததாகவும், அதன் மூலம் உலகரட்சகர் இயேசுவை அறிந்து, அவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக். கொண்டதாகவும் அந்நாடகத்தில் கவிதாவின் நடிப்பு உண்மை தேவதூதரைப் போன்றே இருந்ததால் அவளுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க தான் விரும்பியதாகவும், கடந்த சில நாட்களாக யோசித்த பின் தேவதாதனாக நடித்த அவளுக்கு இத்த ஒயிட் கவுன் அழகாக இருக்கும் என்று அதை பரிசாக அனுப்பியதாகவும் எழுதப்பட்டிருந்தது!

கவிதா ஆவலாக அந்தக் கவுனை எடுத்தாள். “தாத்தா! பார்த்தீங்களா... இயேசு சாமி எனக்கு நான் விரும்பிய கவுனை கிறிஸ்மஸ் உடுப்பாக கொடுத்துவிட்டார்: ஆவலாகக் கூறியவள், அந்த கவுனை எடுத்துக் கொண்டு தன் தேவனுக்கு நன்றி செலுத்த முழங்காலில் நின்று கொண்டிருந்தாள்!

ஞானமுத்துத் தாத்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது இந்த 7 வயது சிறு பிள்ளைக்கு இருக்கும் விசுவாசம் 60 வயது கிழவனான தனக்கு இல்லையே என்று உணர்ந்தார். தான் தேவனிடம் தன் வேண்டுகோளை சமர்ப்பித்த பின்னும் தன் முயற்சியால் அதை எப்படி சமாளிக்கலாம் என்று தன் வேண்டுகோளைத் தானே தூக்கிக் கொண்டு அலைந்து திரிந்து கலங்கிய பேதமையை எண்ணி வெட்க மடைந்தார். ஆனால் கவிதாவோ இறைவனிடம் கேட்டதும் நீங்கள் ஜெபத்தில் எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்!” என்ற வேதவாக்கின் படி நம்பினாள். கிடைக்கப்பெற்றாள். இதனால் தான் இயேசு பெருமானும் *எவனாகிலும் சிறு பிள்ளையைப் போல் தேவனுடைய இராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்”? (மாற் 10: 15) என்றும், **என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” 'என்றும் திருவாய் மலர்ந்தருளினார் போலும்.

தன் பேத்தியின் விசுவாசத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீரும், தன் அவிசுவாசத்திற்காக மனஸ்தாபக் கண்ணீரும் ஞானமுத்துத் தாத்தாவின் இருவிழிகளினின்றும் விழுந்தன.

இந்தக் கதை  மாயாபுரிச் சந்தையிலே (பாகம் - 2) என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Maayaapuri Santhaiyilee - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download