கிறிஸ்தவ சாட்சி
கடவுளை தனக்குள் அனுபவமாக்கினதுக்கு தூய ஆவியானவரே சாட்சி கொடுக்கிறார். எனது உள்ளத்திலே நீ தேவனுடைய பிள்ளை என பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். அந்த சாட்சியை பெற்ற நான் மற்றவர் முன்னிலையில் மக்கள் மத்தியில் இந்த அனுபவத்தை அடையாளப்படுத்துவதே சாட்சி, நாவினால் அறிக்கையிடுவதும் எனது வாழ்க்கையின் மாற்றத்தை பிறர் அறிந்து கொள்வதும் இச்சாட்சிக்கு ஆதாரங்கள், வாழ்வில் சந்திப்பவர்களுக்கு வெட்கப்படாமல் எனக்குள் வாழும் கிறிஸ்துவை அறிவிப்பதே சாட்சி. ஒருவரை ஒருவர் சார்ந்து அன்பு செலுத்தி ஆவியின் கனியின் மூலம் நற்செயல்களை பிறருக்காக செய்வதே சாட்சியின் வாழ்வு. கிறிஸ்தவ கற்பனைகளை வழுவாது காத்து பின் பற்றி பிறருக்கு நல் மாதிரியாக வாழ்வதே நற்சாட்சி. சுத்திகரிக்கப்பட்டு நல் மனசாட்சியோடு வாழ்வதே சாட்சி, முடிவு பரியந்தம் நிலைத்து நிற்கும் முயற்சியே கிறிஸ்தவ சாட்சி. இனி நானல்ல கிறிஸ்துவே என அறிக்கையிடுவதே கிறிஸ்தவ சாட்சி.
சாட்சியின் அடிப்படை
இதைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்கு சாட்சிசொல்லுகிறார். எபிரேயர் 10 : 15
வேதவசனங்களின் அடிப்படையில் கிறிஸ்து இயேசுவினின்று எடுத்து கூறுகிய பரிசுத்த ஆவியானவரே நமக்குள் சாட்சியானார். அந்த சாட்சியை நாம் பெற்றதனால் நாம் சாட்சி சொல்ல சாட்சியார் வாழ உடன்படிக்கையை அருளினார். இது என்றும் அழியாத புதிய உடன்படிக்கை. எழுத்து கொல்லும் ஆவியோ உயிர்ப்பிக்கும் என்ற வசனத்தின்படி பழைய பிரமாண எழுத்துக்கள் என்னில் செய்ய முடியாததை ஆவியின் பிரமாணத்தின் புது உடன்படிக்கை என்னுள் செய்தது. இந்த ஆவியானவர் இந்த புது உடன்படிக்கையை எனது இதயத்துக்குள் பதித்து விட்டார். எனது மனதில் எழுதியும் வைத்துவிட்டார். இதோடு நின்றுவிடவில்லை. நான் செய்த ஒழுங்கினமும், தீய செயல்களையும், பாவங்களையும் நினையாதிருப்பேனென்றார். மன்னித்தும் மறந்தும் போனார். இதுவே புதிய ஜீவனுக்குள் அடியெடுத்து வைக்க எனக்கு உதவிய ஊன்றுகோல். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஒரே தரம் சிந்தப்பட்டு எனக்கு எதிராக இருந்த கையெழுத்தை குலைத்து போட்டார். இனி ஒரு பிராயசித்தமோ, பரிகாரமோ, எனக்கு தேவைப்படவில்லை. என் மனதையும் இதயத்தையும் தொட்ட இந்த புதிய ஆவியின் பிரமாணம் பாவ அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுதலையாக்கி எனது சித்தத்தை அவருக்குள் கொண்டு வந்து விட்டது. உடல், பொருள், ஆவி,ஆன்மா அனைத்தும் அவருக்கே சொந்தம் என்ற அர்ப்பணிப்பின் அச்சாரமே எனது கிறிஸ்தவ சாட்சிக்கு அடிப்படையானது. இது என்னுள் நடந்த ஒரு அனுபவம். அனுபவ சாட்சிக்கு இதுதான் ஆதாரம். நீங்களே எனக்கு சாட்சிகளென கூறியவரே எங்களை அவரது சாட்சியாக்கியிருக்கிறார். அவரே எமது சாட்சியின் அஸ்திபாரம் ஆமென்.
வாழும் வழி, தரம் சாட்சி
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரேயர் 10: 22
பெயரைச் சொன்னாலே தரம் தெரியும். கிறிஸ்தவனென்றாலே வாழும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஒரு புது வழி - தனி வழி அல்ல, என் வழி அல்ல அவர் வழி அவர் வழி காட்டியல்ல, அவரே வழியானார், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என கூறியவர் நம் வாழ்வின் வழியானார். இந்த புதிய வழியை அவரது மரணத்தில் உயிர்த்தெழுதலில் பரமேறுதலில் பரிசுத்தஆவியானவராய் பொழியப்பட்டதால் திறந்து வைத்தார். இது ஜீவ வழி செத்து, செத்து பிழைக்கும் வாழ்வல்ல. ஒரே தரம் மரித்து உயிர்த்த கிறிஸ்து இயேசு தந்த உயிருள்ள வழி வல்லமையானது, தரமானது மற்றவரை தன் பால் ஈர்க்கக் கூடிய சாட்சியின் வழி, இந்த வழி நடப்பவர் சுத்திகரிப்பு பெற்றவர்கள், மனச்சாட்சி ஒதுக்கி வைத்து விட்டு வாழ்பவர்கள் அல்ல மனச்சாட்சியே இதை தவறு என்று சொல்லுமேயென்றால் அதிலிருந்து மீண்டு நாள்தோறும் நல்மனச்சாட்சிக்கு ஒப்பாக தரமான சாட்சி வாழ்வு நடத்துவார்கள். இதய சுத்தம் பெற்றவர்கள். விசுவாசத்தினாலே தேவனுடைய வீட்டாரோடு பிரதான ஆசாரியரின் சுத்திகரிப்பையும் மறு உருவாக்கத்தையும் நாள்தோறும் பரிசுத்த ஆவியானவரால் பெறுகிற மறுரூப சிந்தை பெற்றவர்கள் தைரியமாகக் கிருபாசனத்தண்டையிலே அனுதினமும் நெருங்கி சேரும் சிலாக்கியம் பெற்று சாட்சியின்
வசனத்தினால் பிசாசானவனை ஜெயித்து ஜீவ வசனத்துக்கு ஜெயம் சேர்ப்பவர்கள் தரம் வாய்ந்த புது வழியில் தினசரி ஜெயம் எடுப்பவர்கள் கழுவப்பட்டவர்கள் பரிசுத்தஜீவியம் செய்யும் சுத்தவான்கள் வழியெல்லாம் பரிசுத்தம், பார்ப்பவரால் இவர்கள் கிறிஸ்தவர்களென சாட்சி பெற்றவர்கள் ஆமென்
வாழ்வில் நற்கிரியை சாட்சி
மேலும், அன்புக்கும். நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரை ஒருவர் கவனித்து - எபிரெயர் 10 :23-25
நம்பிக்கையை வாழ்வில் செயலாக்குதல் அவசியம். நமது நம்பிக்கையை பிறர் விசாரிக்கும்போது,அணுகும் போது, அது நமது வாழ்வில் செயலாயிருத்தல் அவசியம். நம்பிக்கை ஒன்று செயல் ஒன்று என்றல்ல, எதை நம்புகிறோமோ அதன்படி நடக்கவேண்டும். நாம் நம்புவது ஒரு தத்துவமல்ல, நமது நம்பிக்கை இயேசுகிறிஸ்துவே. ஆகவேஅவர் நற்கிரியையை செய்தது போல நாமும் நற்கிரியையில் பெருகுகிறவர்களாக இருக்க வேண்டும். அவர் வாக்குத்தத்தம் செய்ததை நம்மில் நிறைவேற்றுவார். நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போமென்றால் ஏற்ற காலத்திலே அறுவடை செய்வோம். கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகி நன்மையை செய்வதையே அவர் நம்மில் எதிர் பார்க்கிறார். ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்போம். ஒருவருக்கொருவர் உதவி செய்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவ சாட்சி நற்கிரியையில் சாட்சி வெளிப்படவேண்டும். கூடி வருதலை விரும்புவோம். கூடி வாழ்ந்து ஒருவர் குறை ஒருவர் அறிந்து உதவி செய்து சாட்சியாக வாழ்வோம் நம்மை சுற்றி ஏராளமான தேவைகள் உண்டு. அறிந்துகொண்டு பகிர்ந்து கொண்டு உதவி செய்து வாழ்வோம். ஒருவரை ஒருவர் சார்ந்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி வாழ்வோம். இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்கள் உதவுங்கள். ஒருவர் உங்களிடத்தில் உதவி கேட்டு வரும்போது உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இந்த சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கே செய்கிறீர்களென ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.அவர் நாமம் மகிமைக்கென்று நற்கிரியையில் பெருகுவோம். அவர் வரும் நாழிகை சமீபமாயிற்றென அறிந்து ஒருவரை ஒருவர் சந்தித்து தேவைகளை சந்தித்து கடவுளுக்கு அந்நாளிலே கணக்கொப்புவிக்கிறவர்களென்ற உக்கிராணசிந்தையோடு வாழ்வோம். நற்கிரியையில் பெருகுங்கள்.
பின் வாங்காத வாழ்வே சாட்சி
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்கவேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடு எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபிரேயர் 10; 26-31
சாட்சி பகரும் ஒவ்வொருவருடைய வாழ்வும் என்றும் விசுவாசத்தினாலே கிருபையினாலே நிலை வாழ்வுக்குள்ளாக இருக்கும். இதை மீறி கிருபையை அசட்டை பண்ணி துணிச்சலோடு தேவ நாமத்துக்கு மகிமை குறைச்சலாக நடந்து கொள்வது தான் பின் வாங்கிப் போன சாட்சி, மங்கிய வாழ்வு எனப்படும். நாயானது தான் கக்கினதை திரும்ப தின்பது போல ஆகும். விட்டு வந்த பாவ வழியை கடவுளற்ற வழியை வேண்டுமென்று திரும்ப தொடர்வது ஆபத்தானது. இப்படி சாட்சியை கெடுத்துக் கொண்டவர்களுக்கு இன்னொரு பரிகாரம் இவ்வுலகில் இல்லை.ஏனெனில் இயேசுகிறிஸ்து எனக்காக பலியானார். பரிகாரியாயிருக்கிறாரென்ற உடன்பாட்டை கற்று அதை உதாசினம் பண்ணினவர்களுக்கு வேறு பரிகாரம் தெரியாது. பரிகாரத்தில் விருப்பம் இருக்காது. சத்தியத்தை அறிந்து சத்தியத்திலிருந்து அகன்று போகிறவர்களுக்கு பிராயசித்தம் கண்களுக்கு தெரியாது. வரப்போகிற நியாயத்தீர்ப்பு நாளிலேகடவுளை மறுதலித்த இவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற அழிவின் நெருப்பு தண்டனையே இவர்களது மனசாட்சியை வாதிக்கும். இவர்கள் பெற்ற சுதந்திரத்தை இழந்து போனவர்கள் . நித்திய ஜீவன் என்பது கடவுளோடு வாழும் வாழ்வு. இந்த பூமியிலே இந்த வாழ்வை ஏற்றவர்கள் பின்பு மறுதலித்து செல்வார்களென்றால் இப்பூமியிலே ஆவிக்குரிய வாழ்வை இழந்தவர்கள் ஆவர். மாம்சசிந்தை மரணம் ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். பின் வாங்கிப் போனவர்கள் ஜீவனை இழந்தவர்கள் . சாமாதானத்தை இழந்துவிட்டவர்களாவர் பழைய ஏற்பாட்டு பிரமாணத்தை மீறியவர்களுக்கே இரண்டு மூன்று சாட்சி கொண்டு தீர்ப்பு உண்டல்லவா விலையேறப் பெற்ற இந்த இரட்சிப்பின் பிரமாணத்தை அலட்சியம் பண்ணினார்களென்றால் தண்டனைக்கு, தீர்ப்புக்கு எப்படி தப்பமுடியும்? முன்னிலும் மோசமான நிலைக்குள் சென்றவர்களுக்கு முன்னிலும் மோசமான தீர்ப்பு உண்டே. இதை உணர்ந்து கிருபாசனத்துமுன் வந்த தாவீதைப் போல மன்னிப்புக் கேட்டு மனவருந்தி அழுதால் இரக்கத்தின் ஆசனத்திலே மன்னிப்பு உண்டு. இயேசுவின் இரக்கத்தை சார்ந்து நின்றால், பரிசுத்த ஆவியானவரை என்னிடத்தில் எடுத்துக்கொள்ளாதேயும் என்று கேட்போமானால் தேவனிடத்தில் அன்பு பெறலாம். இரக்கம் செய்ய மாறாத இலட்சணமுடைய ஆண்டவர் மனதிரங்குவார். ஆனால் நம்முடன் வாழ்கின்ற மனிதர்கள் நினைவில் வைத்து சொல்லி காட்டிக்கொண்டே இருப்பர். இதுவும் ஒரு தண்டனையாக இருக்கலாம். இறுதி தீர்ப்பு அவர் கையில். அவரே தீர்ப்பு செய்கிறவர் எப்படியாயினும் ஒரு முறை அந்த பரம இரட்சிப்பை ருசிபார்த்த நாம் விலகி செல்லாமல் சாட்சியை காத்து கொள்ளவேண்டும். எந்த நிலையில் விழுந்தாயென பார்த்து எழுந்து வர வேண்டும். சாட்சி சொல்லுவதற்கல்ல! வாழ்ந்து காட்டுவதற்கு வந்த பாதையில் திரும்பாமல் முன்னோக்கி செல்வோம். உயிர்ப்பியும் ஆண்டவரே என கேட்கலாம், மோட்ச பயணத்தில் திட்டி வாசல் வரை அம்புகள் வரும். ஆக்கினைக்குத்தப்புவித்துக்கொள்வோம். புது வாழ்வில் நிலைத்திருப்போம். ஆமென்.
தேவ சித்தம் செய்வதே சாட்சி
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிரேயர் 10 : 36,37
இனி நானல்ல கிறிஸ்து இயேசுவே என்பதின் விளைவில் எனது முழுமையும் அவருக்கு ஒப்புக்கொடுத்தல் சாட்சிக்கேற்ற அர்ப்பணம். அதனுடைய முயற்சி அவர் சித்தம் செய்வதே என் பாக்கியம் என ஏற்றுக் கொள்ள வேண்டும்.நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என பவுலடியார் கேட்டது போல அவர் நோக்கம் கேட்க வேண்டும் என் சித்தம் அல்ல, உம் சித்தமே என பிதாவினிடத்தில் மன்றாடி ஒப்புக்கொடுத்த நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து போல முழுமையாக அவர் விரும்பும் பாதையில் வாழ்வை சமர்ப்பிக்க வேண்டும். சிலுவைதான் வழி என தெரிந்தால் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். கடைசி பரியந்தம், மரண பரியந்தம் கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும். கடவுள் நோக்கத்தை, சிந்தையை, எதிர்பார்ப்பை எனக்குள் ஆளுகையாக அனுமதிக்க வேண்டும். அவரது வார்த்தையின் மூலம் அதை தெரிந்து கொள்ள வேண்டும். அவரோடு ஜெபத்தில் தொடர்பு கொள்ளுவதன் மூலம் அதை அறிந்து கொள்ளலாம். சாட்சியாக வாழ்வதில் உள்ள் கஷ்ட நஷ்டங்களில் பட்ட பாடுகள் மூலமாக நீடிய பொறுமை கற்று கொண்டு, அதன் மூலம் அவரது சித்தத்தை செயலாக்க முடியும். அவர் தாம் பாடு பட்டு தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி தன்னை மரணத்திலூற்றி வெற்றி சிறந்ததினால் பிதா அவரை மகிமைப் படுத்தினாரே. கிறிஸ்தவ சாட்சிக்கு மாதிரியாக
இயேசுகிறிஸ்து பிதாவின் சித்தத்தை செய்து மாதிரியானார். நம்மை அவரைப் போல் மாற்றுவதே அவரது நோக்கமாயிருக்குமாயின் அவரது பாடுகளுக்கு பங்காளிகளாக வாழ்வதே அவர் நம்மேல் வைத்த சித்தமாயிருக்கிறது. எல்லா உபாதைகளின் நடுவில், பொறுமையோடு அவரது வாக்குத்தத்தங்களை பெலனாக கொண்டு இக்காலத்துப் பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பானவைகளல்ல என செயலாக்கத்தோடு அறிக்கை பண்ணுவதே அவரது சித்தம் செய்யும் பாக்கியம், வருகிறவர் தாமதம் பண்ணாரென முழு நம்பிக்கையோடு அவரது வருகைக்கு காத்திருப்பதே தேவசித்தம். அவர் சித்தம் செய்வோம்! அவர் வருவார்! நம்மை அவரிடத்தில் சேர்த்துக்கொள்வார் ஆமென்.
சாட்சியின் வரிசையில் சேர்வதே - சாட்சி
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். எபிரேயர் 11
கண்டதே கோலம் கொண்டதே வாழ்வு என கண்டதையே சுற்றி நில்லாமல் காணாததை கொண்டாடுவதே விசுவாச வாழ்வு. நம்பிக்கையற்றவர்களாய் காலம் கழிக்காமல் நம்பிக்கையோடு எதிர்காலத்தை சந்திப்பதே விசுவாச வாழ்வு. இப்படிப்பட்ட விசுவாச வாழ்வைகொண்டு கடவுளுடைய சம்மதத்தை ஆமோதிப்பைப் பெற்று நம் முன்னோர்கள் சாட்சியுள்ள வாழ்க்கையை நாம் கடைபிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம். அழகாய் நிற்கும் அவர்களது வரிசையில் நாமும் சேர வாஞ்சிப்பதே உன்னத சாட்சி. காணப்படுகிறவைகளைல்லாம் சிருஷ்டிக்கப்பட்டன. அவை தேவனால் உண்டாக்கப்பட்டன என ஏற்றுக் கொண்டுஇன்னும் காணக் கூடாததாக நமக்கும் அவரே ஆண்டவரென அறிக்கையின் வெளிப்பாடே விசுவாச சாட்சி. விசுவாசிகளின் வரிசையில்
நம்மை சேர்க்கும் சாட்சி. மரித்தும் இன்னும் பேசுகிறவர்களுடைய சாட்சியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்வில் விட்டுப்போன பதிவுகளை நம்முன் எப்போதும் நினைவு கூற வேண்டும் . கடவுளோடு அவர்கள் நடந்தார்கள் கடவுளின் சத்தத்துக்கு கீழ்படிந்து கடவுளின் எச்சரிப்பை பெற்று கடவுளின் நீதியில் வாழ்ந்தார்கள். அழைப்பை பெற்று போகுமிடம் இன்னதென்று அறியாமல் கடவுளை பின் பற்றி சென்றார்கள். தங்களை அந்நியரென்றும், பரதேசிகளென்றும் அறிக்கையிட்டார்கள். கடவுள் நியமித்திருக்கிற பட்டணங்களையே அவர்கள் கண்கள்நோக்கியிருந்தன. அவர்கள் அதை அடையாமற் போனாலும் தூரத்தில் பார்த்து விசுவாசித்து தங்கள் வாழ்க்கை பயணத்தை முடித்தார்கள். ஆகவே ஆண்டவர் அவர்களது ஆண்டவரென சொல்லப்பட வெட்கப்படவில்லை. அநித்தியத்தின் சந்தோஷத்தை அனுபவத்தைப் பார்க்கிலும் நித்தியத்தின் சந்தோஷத்தை ஏற்றுக் கொண்டார்கள். வாளால் அறுப்புண்டு போனார்கள். கல்லால் எறியுண்டார்கள். உலகம் அவர்களுக்கு முக்கியமாக தெரியவில்லை “இப்படி வரப் போகும் உலகை வாஞ்சித்து தங்கள் ஜீவனை விட்டார்கள். இவர்களே சாட்சிகள் - சாட்சியின் முன்னோடிகள். இவர்கள் விட்டுப்போன பதிவுகளையே பின்பற்றுவோம். நாமும் அப்படி விசுவாச சாட்சி பெற்று அவர்கள் வரிசையிலே நின்று தேவ நோக்கத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். முடிவில் என்றும் கர்த்தாவுடன் என பாட அழைக்கப் பட்டுள்ளோம். அந்த முன்னோர் வரிசையில் நின்று களிப்புடன் என்றும் கர்த்தாவுடன் என கூறும் வாய்ப்பைப் பெறுவோம் ஆமென்.
Author Bro. C. Jebaraj