உலகில் ஏற்படும் துன்பங்களுக்கு சில தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தான் காரணம் என பலர் குற்றம் சுமத்துவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. எழுபத்தொரு சதவீத மக்கள் இது பெரும்பாலும் மக்களின் சொந்த செயல்களின் விளைவு என்று கூறுகின்றனர், அறுபத்தொன்பது பேர் இது பெரும்பாலும் சமூகம் கட்டமைக்கப்பட்ட விதத்தின் விளைவாகும் என்பதாகவும் கருத்து தெரிவித்தனர் (Religion News Service 23 November 2021). "அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்" (யோபு 5:7). ஆனாலும் ஒரு கிறிஸ்தவன் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை தெய்வீக, நித்திய மற்றும் நம்பிக்கையின் கண்ணோட்டத்திலே அணுக வேண்டும்.
1) தாங்குதல்:
தேவன் தனது பிள்ளைகளை துன்பங்கள் மற்றும் மரணத்தின் பள்ளத்தாக்குகளுக்கு அனுமதிக்கிறார். இருப்பினும், தாங்கக்கூடிய வரம்பிற்குள் ஒரு நபருக்கு நேரிடும் சோதனை உள்ளது. ஆம், திராணிக்கு மேலாக சோதிப்பதற்கு தேவன் இடம் கொடுப்பதில்லை (1 கொரிந்தியர் 10:13).
2) நோக்கம்:
ஒரு விசுவாசி உபத்திரவம், இன்னல்கள் மற்றும் துன்பங்களை மகிழ்ச்சியாக எண்ணுகிறார். ஏனெனில் அது விசுவாசம், உறுதிப்பாடு, சகிப்புத்தன்மை, நற்குணம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குகிறது, இதன் விளைவாக விசுவாசிகள் பரிபூரணமானவர்களாகவும் நேர்த்தியானவர்களாகவும் உருவாகிறார்கள் (யாக்கோபு 1:2-4; ரோமர் 5:3-4).
3) கற்றல்:
வாழ்க்கையின் கடினமான பருவங்கள் விசுவாசிகளுக்கு தேவனின் பிரமாணங்களையும், உணர்வுகளையும் மற்றும் கற்பனைகளையும் கற்றுக்கொள்ள உதவுகின்றன (சங்கீதம் 119:71). "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4). துன்பங்களின் போது விசுவாசிகளுக்கு தேவனோடு நல் உறவு ஏற்படுகிறது.
4) காலக்கெடு:
"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" (1 பேதுரு 5:10). ஆம், பாடுகள் நிரந்தரமானது அல்ல, கொஞ்சக்காலம் தான்.
5) நம்பிக்கை:
"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28). ஆம், யோசேப்பின் சகோதர்கள் அவனை நாடு விட்டு நாடு கடத்தினர்; ஆனால் எகிப்தில் பார்வோனின் அரமனையில் நல் வளர்ச்சி உண்டாக்கவும் செழிப்பை நோக்கி தேசத்தை வழிநடத்தவும் அவனை உந்தித் தள்ளியது.
6) துன்பம்:
(பிலிப்பியர் 3:10) வலி காயப்படுத்துகிறது, ஆனால் துன்பப்படுபவர்களிடம் ஒரு பச்சாதாபத்தை உருவாக்குகிறது, மேலும் துன்பப்படும் உலகத்துடன் ஐக்கியத்தை அளிக்கிறது. கர்த்தர் மகிமையாய் வரும் வரை கிறிஸ்துவின் சரீரம் (சபை) துன்புறுத்தலைத் தாங்குகிறது. எனவே, விசுவாசிகளுக்கு கர்த்தருடனும் மற்ற விசுவாசிகளுடனும் துன்பத்தில் ஐக்கியம் இருக்கிறது (கொலோசெயர் 1:24).
7) மகிமை:
"இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18). ஆக தேவன் தம்முடைய மக்களுக்கு நியமித்திருக்கும் மகிமை எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. வலி, துன்பம் மற்றும் பாடுகள் ஆகியவை நித்தியமான மற்றும் மிகையான மகிமையுடன் ஒப்பிடும்போது தற்காலிகமானது மற்றும் அற்பமானது.
எனது துன்பங்களில் நான் தேவனோடு சஞ்சரிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்