சூசன் தேவதாஸ் என்பவர் 'எவ்வளவு தான் நெருக்கப்பட்டாலும் நொறுங்கி போவதில்லை என்றும், தான் சந்தித்த சோதனைகளிலிருந்து சில வாழ்க்கைப் பாடங்களைப் பற்றியும் தனது புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பக்குவமுள்ளதாகவும், எல்லா காரியங்களிலும் தேறினதாகவும், பரிபூரணமாகவும், அவரைப் போலவும் ஆக வேண்டும் (கொலோசெயர் 1:28; மத்தேயு 5:48). பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்பது விரக்திகள், இடையூறுகள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள், தடைகள் மற்றும் ஊக்கமின்மைகளால் நிறைந்திருக்கிறது. சூசன் அவர்கள் ஆறு பாடங்களை வழங்குகிறார்;
1. கோபத்தை கட்டுக்குள் வைப்பது ஒரு பக்குவம்:
கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, வன்முறை அல்லது மனக்கசப்பு இல்லாமல் உங்கள் வேறுபாட்டைத் தீர்க்கும் திறன் ஆகும். கோபம் ஒரு நபருக்கு எதிரானது அல்ல, ஆனால் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. எனவே, தேவையற்ற மோதல்களும் ஏற்படுவதில்லை. கிறிஸ்துவுக்குள் முதிர்ச்சி அடைந்தவர்கள் கோபமாக இருக்கும்போது எதிர்வினையாற்ற மாட்டார்கள். மூடர்களின் இதயத்தில் கோபம் குடியிருக்கும் (பிரசங்கி 7:9).
2. பொறுமையாக இருப்பது ஒரு பக்குவம்:
கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது நீண்ட கால இலக்குகள், பரலோக தரிசனம் மற்றும் நித்திய கண்ணோட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். நீண்ட கால ஆதாயத்திற்காக குறுகிய கால இன்பங்களை விட்டுக்கொடுக்க அல்லது கைவிட விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. பணிவு என்பது ஒரு பக்குவம்:
நீங்கள் சொல்வது சரியென்றாலும், "இல்லை, என் பக்கம் தான் தவறு" என்று சொல்லும் அளவுக்கு பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தாழ்மையான மக்கள் அதிக நன்மைக்கான பொறுப்பை ஏற்க தயாராக உள்ளனர். தாழ்மையானவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியுடன் நேசிக்கவும், மதிக்கவும், சேவை செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
4. எதையும் முடிப்பதில் ஒரு பக்குவம்:
கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது, பகுத்தறிந்து சரியான முடிவை எடுத்து, அதைப் பின்பற்றி அதை நிறைவு செய்யும் திறன் உள்ளதாகும். முதிர்ச்சியின்மை என்பது கோட்பாடு அல்லது ஊகங்கள் அல்லது கற்பனையில் முடிவற்ற சாத்தியங்களை ஆராய்ந்து எதுவும் செய்யாமல் முடிவடைகிறது. அவர்கள் தரிசனமோ ஆர்வமோ இல்லாத பகல் கனவு காண்பவர்கள்.
5. நம்பகத்தன்மை என்பது ஒரு பக்குவம்:
முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் நம்பகமானவர்கள். அப்படிப்பட்டவர்கள் நெருக்கடி அல்லது நஷ்டத்தை சந்தித்தாலும், தங்கள் வார்த்தையைக் கடைப்பிடிப்பார்கள். விசுவாசிகள் வாக்குறுதிகளை மீறுவதில்லை (சங்கீதம் 15:4). முதிர்ச்சியடையாதவர்கள் குழப்பமடைந்து ஒழுங்கற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சொல்லுமளவுக்கு எதையும் செய்வதில்லை, அதனால் தங்கள் நம்பகத்தன்மையை இழக்கிறார்கள்.
6. ஏற்றுக் கொள்ளும் வாழ்வு ஒரு பக்குவம்:
உங்களால் மாற்ற முடியாதவற்றையும் ஏற்றுக் கொள்ளல், உங்களால் முடிந்ததை மாற்றும் தைரியம் மற்றும் வித்தியாசத்தை அறியும் ஞானம் ஒரு கிறிஸ்தவ பக்குவம் ஆகும்.
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது சோதனைகள் மத்தியிலும் உபத்திரவ காலங்களிலும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துதலிலும் தேவ வார்த்தையின் அடிப்படையிலும் பரிசுத்தப்படுவதாகும். பின்னர், அவர் தனது இரண்டாம் வருகையில் தோன்றும்போது, விசுவாசிகள் அவரைப் போலவே இருப்பார்கள். ஆம், "அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 3:2).
நான் ஒரு பக்குவமுள்ள கிறிஸ்தவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்