இன்றைய காலங்களில் உலகம் நிலையற்றதாகவும், நிச்சயமற்றதாகவும், சிக்கலானதாகவும் மற்றும் தெளிவற்றதாகவும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீஷர்கள் எவ்வாறு ஒளியாகவும் உப்பாகவும் வாழ முடியும்?
ஜெயம்:
மக்கள், சமூகம், நாடுகள் மற்றும் உலகம் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறது. மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் உடையக்கூடியவை மற்றும் நிலையற்றவை; அது சுற்றுச்சூழல் பேரழிவுகள், போர்கள், பொருளாதார சீர்குலைவுகள், கலவரங்கள், வன்முறை என போன்றவை இருக்கலாம். இருப்பினும், கிறிஸ்துவிற்குள் இருப்பவர்கள் முற்றிலும் ஜெயம் கொள்பவர்கள் அல்லது வெற்றியாளர்கள் (ரோமர் 8:37). எல்லாம் விதி அல்லது ஐயோ சூழ்நிலை இப்படியாயிற்று என்பது கிறிஸ்தவர்களுக்கு அல்ல. உலகில் நடக்கும் சம்பவங்களைக் கண்டு தேவன் ஆச்சரியப்படுவதில்லை; எனவே, மாறிவரும் சூழ்நிலைகளுக்கு விசுவாசிகள் பயப்படுவதில்லை; பயப்பட வேண்டியதில்லை.
அசைவில்லாதது:
நிச்சயமற்ற உலகில் பலர் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கோவிட் 19 போன்ற தொற்றுநோய் பொருளாதாரத்தை சீர்குலைக்கக்கூடும். யுத்தங்கள் உணவு விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கலாம். உணவுப் பற்றாக்குறை எந்த நாட்டிலும் வரலாம். ஆனாலும் சீஷர்கள் நாளையைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஏனெனில் தேவன் எதிர்காலத்தின் இறையாண்மை ஆட்சியாளர். விசுவாசிகள் ராஜ்ய மக்கள். அவர்கள் நித்தியமான மற்றும் அசைக்க முடியாத ஒரு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் (எபிரெயர் 12:28). தாவீது கர்த்தரை நம்புவதாகவும், அவருக்காகக் காத்திருப்பதாகவும், அதனால் தன்னுடைய விசுவாசம் அசைக்கப்படாது என்றும் கூறுகிறான் (சங்கீதம் 62:1-2).
கிறிஸ்துவே மையம்:
உலகம் நாளுக்கு நாள் சிக்கலானதாகத் தெரிகிறது. அறிவின் அதிவேக அதிகரிப்பு, மக்களுக்குப் புரிய வைப்பதற்கான நிபுணர்களின் தேவையை உருவாக்குகிறது. எனவே, தேர்வுகளை மேற்கொள்வதும் முடிவெடுப்பதும் ஒரு சிக்கலான செயலாகிறது. தேவனுக்கு சிக்கலானது என்று ஒன்றும் இல்லை, எல்லாமே எளிமையானவை, அவர் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையில் இருந்தல்லவா சிருஷ்டித்தார். அனைத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் மற்றும் அவருக்காகவும் படைக்கப்பட்டது என்று பவுல் எழுதுகிறார் (கொலோசெயர் 1:16). தேவன் தம் மக்களை ஒரு நோக்கத்துடன் சில சூழலில் வைத்திருக்கிறார். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், தேவனின் சித்தம் இனிமையானது, நல்லது மற்றும் சரியானது (ரோமர் 12:2).
நங்கூரம்:
சீஷர்கள் தேவனின் வார்த்தையில் நங்கூரமிடப்பட்டுள்ளனர். கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவன் உவமையில் கர்த்தர் கற்பித்தபடி கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வேதாகமமே அடித்தளம் (மத்தேயு 7:24-27). தேவ வார்த்தையில் நிச்சயமற்ற தன்மை என்பது இல்லை. அவருடைய கட்டளைகள், போதனைகள், நியமனங்கள், சித்தம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தெளிவாக உள்ளன.
ஆகையால் சீஷர்கள் இன்றைய உலகத்தைப் பற்றி பயப்படுவதில்லை; ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
நான் கிறிஸ்துவில் பாடுகளுடனான ஆவிக்குரிய வாழ்க்கையை எதிர் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்