"தாயின் பால் மறந்த குழந்தையைப் போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" (சங்கீதம் 131:2). அதாவது ஒரு மனிதன் குழந்தையாக இருக்கும் போது எதிர்கொள்ளும் முதல் திண்டாட்டம் தாய்ப்பாலை மறப்பது. நம்மில் எவராலும் அந்த அனுபவத்தை நினைவுகூரவோ, ஞாபகப்படுத்திப் பார்க்கவோ முடியாது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். இதை வைத்துப் பார்க்கும் போது இவ்வுலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தற்காலிகமானதுதான், அவற்றை நாம் நேர்மறையாகவும் நல்ல மனநிலையிலும் எடுத்துக் கொண்டு கடந்து போக முடியும். எப்படி ஒரு குழந்தைக்கு தொடர்ந்து பாலைக் குறித்த ஏக்கங்களும் அழுகைகளும் பிடிவாதங்களும் மறைந்து விடுகின்றதோ அது போல அனைத்தும் மறந்து விடும். தாவீது தன் ஆத்துமாவை அமரப்பண்ணினதற்கு மூன்று காரணங்களைக் கூறுகிறான் (சங்கீதம் 131:1).
1) இறுமாப்புள்ள மனப்பான்மையை அகற்ற வேண்டும்:
தாய்ப்பால் மறந்த குழந்தை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அகந்தையானவர்களால் மற்றவர்களை நம்ப முடியாது, ஏனெனில் தங்களுக்கான முக்கியத்துவம் மற்றும் மேட்டிமையான எண்ணங்களால் பாதிக்கப்படுவார்கள். தாங்கள் சார்ந்திருக்காதபோதும் மற்றவர்கள் தங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்களைச் சிறந்த மனிதர்களாகக் காட்டிக்கொள்வார்கள், அது அவர்களைச் சுற்றியுள்ளவர்களை அதாவது எளிய மக்களை அல்லது பெரிதாக சிந்திக்க தெரியாத ஜனங்களை அது கவரும். இந்த முகஸ்துதியாளர்களுக்கு தங்கள் தற்பெருமை இன்னும் பெரிதாக அதிகரிக்கும்.
2) தகுந்த உயர்ந்த லட்சியம் வேண்டும்:
கர்வமுள்ளவர்கள் தகுதிக்கு மீறின உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அநேகமாக பரலோகத்தில் ஒரு தலைமைத் தூதனாக மற்றும் பாடல்குழுவின் தலைவனாகவோ அல்லது ஆராதனையை நடத்துபவனாக லூசிபர் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவன் அதில் திருப்தி அடையவில்லை. தேவனுடைய சிங்காசனத்தில் அமர வேண்டும் என்பது அவனது லட்சியமாக இருந்தது, அப்போது தானே எல்லா துதிகளையும் தானே பெற முடியும் (ஏசாயா 14:13). அது அவனுடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. திருப்தியற்ற நிலையும், நன்றிக் கெட்டத்தனமும், முணுமுணுப்பும் அவனை சூழ்ச்சிக்கு நேராக இழுத்துச் சென்றது மட்டுமல்லாமல் தேவனுக்கு எதிராக தன்னை உயர்த்திக் கொண்டான்.
3) அடுத்த காரியங்களில் தலையிடு வேண்டாம்:
தாவீது தனக்கு தேவையில்லாத எல்லைகளில், புரியாத ஒன்றில் மற்றும் தன் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிடுவதில்லை என்று கூறுகிறான். அனைவருக்கும் ஆலோசகர்களாகவும், எல்லாவற்றின் வர்ணனையாளர்களாகவும், அனைத்து பாடங்களிலும் வல்லுனர்களாகவும் இருக்க விரும்பும் பலர் உள்ளனர். இதுபோன்ற தலையீட்டு விஷயங்களை இன்றைய சமூக ஊடகங்களில் நாம் காண முடியும்.
பால் மறந்த குழந்தை முன்பு போல் அழாமல், தாயின் அரவணைப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவளை நம்பும். கவலை, துன்பம், மன அழுத்தம், பயம், அமைதியின்மை, குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் சொற்களஞ்சியத்தில் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாய்ப்பால் மறந்த குழந்தையின் இந்த சூழ்நிலையை நிலை நிறுத்துகிறார் மற்றும் அவரது சீஷர்கள் அனைவரையும் ஒரு குழந்தையைப் போல ஆகுமாறு அறிவுறுத்துகிறார் (மத்தேயு 18:1-3).
நானும் பால் மறந்த குழந்தையைப் போல உலக காரியங்களை விட்டு பரலோக வாசியாக சிந்திக்கிறேனா? அதற்கான செயல் என்னிடம் உண்டா?
Author : Rev. Dr. J. N. Manokaran