பெங்களுருவில் உள்ள எலாக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் உணவு ஆர்டர் செய்தவருக்கு உணவுப் பார்சலை வழங்க டெலிவரி பாய் சென்றுள்ளார். அங்கிருந்தவர்களால் அவர் தர்ம அடிக்கு ஆளானார்; அது ஏனென்றால் 8 வயது சிறுமியின் புகாரே அவர் அடிவாங்க காரணம். அதாவது அந்த டெலிவரி பாய் 8 வயது சிறுமியை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றதாகவும் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்ததாகவும் அந்த அப்பார்ட்மென்டில் குடியிருக்கும் 8 வயது சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், அப்பார்ட்மென்டில் வசிப்பவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உணவு விநியோக முகவரை தாக்கினர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சிசிடிவி-யை பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி தனியாகத்தான் மொட்டைமாடி சென்றுள்ளார். டெலிவரி பாய் அந்த சிறுமியை அழைத்துச்செல்லவில்லை. இதனால் அந்த சிறுமி வேண்டுமென்றே பொய் சொல்லியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். ஏன் பொய் சொன்னாய்? என அந்த சிறுமியிடம் கேட்டபோது, படிக்கும் நேரத்தில் விளையாடியது தெரிந்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால், அவர்களுக்கு பயந்து பொய் சொன்னதாக தெரிவித்தாள். ஒரு சிறுமியின் பொய்யால் உணவு விநியோக முகவர் (டெலிவரி பாய்) தர்ம அடி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது (டெக்கான் ஹெரால்ட் , ஜூன் 16, 2023).
பொய் சொல்வது:
படித்த தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு தேவ பயம், தார்மீக விழுமியங்கள் மற்றும் பிறரிடம் உள்ள அணுகுமுறை என எவ்வித நல் ஒழுங்குகளையும் கற்பிக்கவில்லை அல்லது பயிற்றுவிக்கும் இல்லை. ஒரு 8 வயது சிறுமி, படிக்கும் நேரத்தில் விளையாடியதை பெற்றோரிடம் மறைக்க எவ்வளவு அப்பட்டமான பொய்யை கூறியுள்ளாள்; அதிலும் சிறு குழந்தை ஒரு கடத்தல் நாடகத்தையே நிகழ்த்தி விட்டதே.
மற்றவரைக் குற்றம் சாட்டுதல்:
தன் தவறை மறைக்க, மற்றவர் மீது கொடூரமாக குற்றம் சாட்டினாள். தனக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது; தான் நல்ல சொகுசாக மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்பினாள். ஆனால் தன்னால் ஒருவன் அடிவாங்குகிறானே கஷ்டப்படுத்தப்படுகிறானே என்ற கவலையே இல்லை. யாரோ முன்பின் அறியாதவர் மீது குற்றம் சாட்டி அவருக்கு தண்டனை கிடைக்கிறதே என்பதைக் காட்டிலும், சிறுமி தன் செயலுக்கான தண்டனையைக் குறித்து மட்டுமே பயந்தாள்.
சுயநலம்:
தனது பொய்யினால் உணவு விநியோக முகவருக்கு ஏற்பட்ட பெரும் துன்பத்தைக் கண்ட போதும் அவள் உணர்ச்சியற்றவளாக இருந்தாள்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்:
எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு அப்பாவி நபர், சிறுமியின் பெற்றோர் தலைமையிலான கட்டுக்கடங்காத கும்பலால் இரக்கமின்றி தாக்கப்பட்டார். "தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக" (யாத்திராகமம் 23:2) என வேதாகமம் எச்சரிக்கிறது. கொடூரமான தண்டனையை வழங்கி அந்தக் கும்பல் தங்களைக் காவல்துறையாகவும் நீதிபதிகளாகவும் காட்டிக் கொண்டனர்.
பாவத்தின் பரம்பரை:
"இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்" (சங்கீதம் 51:5) என்பதாக தாவீது ராஜா கூறுகிறான். ஆம், மனித வீழ்ச்சி என்றால் அனைவரும் பிறப்பால் பாவிகளே.
அப்பாவித்தனமான வயது:
சுமார் 12 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பாவம் செய்யக்கூடியவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண் அதற்கும் குறைவான வயதுதான். ஒரு குழந்தை அறிவார்ந்த மற்றும் தார்மீக பொறுப்புக்கூறல் நிலையை அடையும் போது, தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆக, வயதை வைத்து அல்ல போலும், ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடலாம்.
வீழ்ச்சியடைந்த சமூகம்:
இந்த சோகமான நிகழ்வு சமூகத்தின் தார்மீக மற்றும் சமூக விழுமியங்களின் வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது.
ஒழுக்க விழுமியங்களைக் காக்க நான் சமுதாயத்தில் உப்பாக காணப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்