"ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது". (உன்னதப்பாட்டு 1:10), என்று மணவாளன் தன் மணவாட்டியின் அழகான ஆபரணாதிகள் பூண்ட கன்னங்களையும், ஆரங்கள் பூண்ட கழுத்தையும் வர்ணித்து பாடுகிறார். இந்த சரீர பாகங்கள் ஆண்டவர் அளிக்கும் ஆபரணாதிகள், ஆரங்கள் மூலம் அழகாக காட்சியளிக்கிறது. நம்மில் சிலருக்கு அருளும் பரிசுத்தாவியானவரின் அழகான வரங்களால் கிறிஸ்துவின் எல்லா சரீர பாகங்களும் மகிமையடைகிறது. ஒரு தனி நபருக்கு அருளப்படும் வரத்தால் முழு சரீரமும் கனமடைகிறது. கிறிஸ்துவாகிய சரீரத்திற்கு இந்த வரங்கள் மிகவும் அவசியம். இந்த வரங்களின் மூலம் அநேகர் கவர்ந்து இழுக்கப்பட்டு இரட்சிக்கப்படுகிறார்கள்! உங்களுக்கு சிலருக்கு ஒன்றோ அல்லது அதற்கு மேலாக சில ஆவியின் வரங்களை பரம மணவாளன் கொடுக்கக்கூடும். இது உங்களை அழகுபடுத்துவதற்கு அல்ல! அல்லது இந்த வரங்களைக் காண்பித்து உங்களது ஊழியங்களை மேன்மை பாராட்டுவதற்கு அல்ல! முழு கிறிஸ்துவின் சரீரத்தை அழகுபடுத்துவதற்கு மாத்திரம் இவைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகப்பிரகாரமாக ஒரு பெண் நகையணிந்து, தனது கன்னங்களையோ கழுத்தையோ, வெளிப்படையாக காண்பித்து அழகாக காட்சியளிக்கிறாள். இன்று ஒரு கிறிஸ்தவ பெண் ஒரு தங்க தாலி செயினை அணிந்து கொண்டாலே பெந்தெகோஸ்தே சபை போதகர்கள் அவளை குற்றவாளியெனத் தீர்ப்பு செய்கிறார்கள். ஒரு கிறிஸ்தவ மணப்பெண் தன் தலையில் பூ வைத்து அலங்கரித்தாலோ, நகை அணிந்தாலோ தனது ஆத்தும மணவாளன் பொறாமை கொள்வாரா? இந்த போதகர்கள் வேறு ஒரு கிறிஸ்துவை, அதாவது பூ வைத்து அலங்கரிக்கும் அல்லது சில நகைகள் அணிந்து அழகுப்படுத்தும் பெண்களின் மேல் பொறாமை கொள்ளும் வேறு ஒரு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார்கள். இதை செய் அதை செய்யாதே என்று பழைய ஏற்பாட்டின் பத்து கற்பனைகளை கூட்டிக்கொள்கிறார்கள்.