ஆலயம் கட்டும் மாபெரும் திட்டத்திற்கு தொழிலாளர்களை (சுமை சுமைக்க, மலைப்பகுதி மரம் வெட்ட மற்றும் கற்களை வெட்ட) ஆட்சேர்ப்பு செய்வதற்காக சாலொமோன் ராஜா மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து தகவல்களை சேகரித்தான் (2 நாளாகமம் 2:18).
தேவனுக்கு ஆலயம் தேவையில்லை:
வானம் அவருடைய சிங்காசனம், பூமி அவருடைய பாதபடி என்று தேவன் ஏசாயாவிடம் பேசினார் (ஏசாயா 66:1). தாவீது ராஜா ஆலயம் கட்ட விருப்பம் தெரிவித்தபோது, இஸ்ரவேலின் தலைவர்கள் யாரிடமாவது எனக்கு ஆலயம் கட்டும்படி கட்டளையிட்டேனா என்று கர்த்தர் கேட்டார். மாறாக, தாவீது சந்ததியினர் என்றென்றும் ஆட்சி செய்வார்கள் என்றும் கர்த்தர் வாக்களித்தார் (2 சாமுவேல் 7:1-17). தாவீது பல யுத்தங்களில் இரத்தம் சிந்தியிருப்பதால், ஆலயம் கட்டுவதற்கு பொருத்தமான நபராக இருக்க மாட்டான். ஆகையால் தாவீதின் ஆசையை நிறைவேற்ற, கர்த்தர் அவனுடைய மகன் சாலொமோன் ஒரு ஆலயம் கட்டுவான் என்று கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர்:
தாவீதின் பெருமையின் நிமித்தம் அதை சாத்தான் பயன்படுத்தி, அவனை தூண்டிவிட்டு, இஸ்ரவேலின் மக்களை கணக்கெடுத்தான். தளபதி யோவாபின் வார்த்தைகளையும் எதிர்த்து, அவன் சொற்களும் நிராகரிக்கப்பட்டது. இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள். சங்கரிக்கிற தூதனை தேவன் தடுத்து சேதம் மற்றும் பேரழிவிலிருந்து நிறுத்தினார். கொள்ளைநோய் நிறுத்தப்பட்ட இடத்தில், தேவதூதன் தோன்றி, பலி செலுத்தும் இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, பிற்காலங்களில் அது ஆலயத்திற்கான இடமாக மாறியது (1 நாளாகமம் 21).
மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு:
இருப்பினும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு முற்றிலும் ஒழிக்கப்படாமல் நடப்பில் இருந்தது. கணக்கெடுப்பு என்ற ஒன்றை அழிப்பது தான் சரியான செயலாக இருந்திருக்கும், ஆனால் தாவீது அதை செய்யவில்லை. பின்னர் வந்த சாலொமோன் புலம்பெயர்ந்தவர்களை அடையாளம் காண அந்த கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தினான்.
அந்நியர்கள்:
இஸ்ரவேலர்களால் விரட்டியடிக்கப்படாத பழைய குடிமக்கள் சிலர் இருந்தனர். மற்றவர்கள் யூத நம்பிக்கையை ஏற்று அவர்களிடையே வாழ்ந்தனர். ஏத்தியனான உரியா தாவீதின் தளபதிகளில் ஒருவன். ஆலயத்திற்கான பொருட்களைத் தயாரிக்க தாவீது அவர்களை நியமித்தான். "தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய ஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்" (1 நாளாகமம் 22:2). ஆக, சாலொமோன் புலம்பெயர்ந்தோரை ஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் ஆலயப் பணியை கட்டாயமாகச் செய்யும்படி கட்டாயப்படுத்தினான். தேவன் இஸ்ரவேலர்களுக்கு என்ன கட்டளையிட்டு இருந்தார்?! "அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே" (யாத்திராகமம் 22:21; 23:9) ஆம், நாம் அடிமைகளாக இருக்கும் போது எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோம்; அதனால் இஸ்ரவேலர்கள் தங்கள் மத்தியில் வசிக்கும் அந்நியரையோ அல்லது வெளிநாட்டவர்களையோ ஒடுக்கவோ அல்லது சுரண்டவோ கூடாது அல்லவா; நாமும் நம் கடந்து வந்த பாதையை நினைத்து பார்ப்பது மிக மிக அவசியம்.
கட்டிட திட்டம்:
விசுவாசிகளான இஸ்ரவேல், ஆலயம் கட்டும் வேலையை வெளியாட்களை வைத்து செய்தனர். ஒருவேளை அது இஸ்ரவேலர்களால் கட்டமைக்கப்பட்டிருந்தால், அது விசுவாசத்தின் வெளிப்பாடாகவும், அன்பின் நிரூபணமாகவும் இருந்திருக்கும். ஆனால் வெளியாட்களை கட்டிடப் பணியில் ஈடுபடுத்தும் போது, அது ஒரு மதக் கட்டமைப்பாக மாறியது என்பது தான் உண்மை.
மதத்தின் பெயரால் நான் பிறரை ஒடுக்குகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்