தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் தண்டிக்காமல் மன்னித்திருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள், இது ஒரு நல்ல லாஜிக் தான். ஆனால் மனிதப் பகுத்தறிவை விட தேவனுக்கு அனைத்துமே நன்றாகத் தெரியும். "துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்" (ஏசாயா 26:10) என்பதாக ஏசாயா எழுதுகிறார்.
1) துன்மார்க்கத் தெரிவு:
ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்ணத் தேர்ந்தெடுத்தனர்; அது என்ன கட்டாயமா அல்லது வற்புறுத்துதலா அல்லது விரக்தியான நிலையா, அப்படி எதுவும் இல்லை. இது விருப்பமான, சுயமான மற்றும் ஆர்வமுள்ள தெரிவாகும் (ஆதியாகமம் 3:1-7). எனவே, அவர்கள் நிலை அப்பாவி என்பதிலிருந்து பாவிகள் என்பதாக மாறியது. ஆனால் அப்பாவிகளை துன்மார்க்கரிடமிருந்து வித்தியாசமாக நடத்துவது எப்படி என்று தேவனுக்குத் தெரியும். "அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்" (2 பேதுரு 2:9).
2) நீதியான நிலம்:
தேவன் சிருஷ்டித்த உலகம் பாவத்தால் மாசுபடவில்லை. ஏதேன் தோட்டம் நேர்மையான நிலமாக இருந்தது. அதாவது சூழல் தூய்மையாகவும் அல்லது பரிசுத்தமாகவும் இருந்தது. ஆதாமும் ஏவாளும் சுற்றுச்சூழலைக் குறை கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. பலர் தங்கள் பாவங்களை நியாயப்படுத்த விரும்புகிறார்கள், அதாவது அவர்களின் சூழ்நிலைகள் அல்லது சூழல்களைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
3) தேவனின் மகத்துவத்தை அலட்சியம் செய்தல்:
ஆதாமும் ஏவாளும் சாத்தானோடு உரையாடலைத் தேர்ந்தெடுத்தபோது, சாத்தானை நம்பினார்கள், தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தார்கள் என்றே சொல்ல வேண்டாம். அவர்கள் தேவனின் மகத்துவத்தைப் புறக்கணித்தனர். அவர்கள் மீது தேவ அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது. கர்த்தராகிய ஆண்டவர் ஒரு பரிசுத்த தேவன். பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது நிவிர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அவருடைய பரிசுத்தம் கோருகிறது.
4) கற்றுக்கொள்ள முடியாதே:
தேவன் அவர்களை மன்னித்திருந்தால் அல்லது அவர்களுக்கு தயவு செய்திருந்தால், அவர்கள் ஒருபோதும் நீதியைக் கற்றுக்கொள்ள மாட்டார்களே. பாவிகளாக, இப்போது தேவனின் நீதியைக் கற்றுக்கொள்வது முற்றிலும் அவசியமானது அல்லது அவர்கள் என்றென்றும் அழிந்துபோய் விடுவார்களே. ஆதாமும் ஏவாளும் தங்கள் பாவங்களை மறைப்பதற்கு இரத்த பலி தேவை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது, தேவன் அவர்களுக்கு கிருபையுடன் விலங்குகளின் தோல்களை அணிவித்தார். பாவ மன்னிப்புக்காக தேவ ஆட்டுக்குட்டியினாவர் தனது இரத்தத்தை சிந்த வேண்டும் என்பதை மனிதகுலம் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுதல், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் சத்தியத்தை அறியாதவர்கள் தேவ தயவைப் பெற மாட்டார்கள்.
வெறுமனே அவருடைய தயவைத் தேடுவதற்குப் பதிலாக, மனிதகுலம் அவரிடம் தாழ்மை, மனந்திரும்புதல் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என அவரிடம் நெருங்கி வர வேண்டும்.
நான் நீதியின் பாதையைக் கற்றுக்கொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்