"எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்" (ஓசியா 5:11). "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது" (நீதிமொழிகள் 26:11 2;பேதுரு 2:22). யூதர்களைப் பொறுத்தமட்டில் நாய்களும் பன்றிகளும் அசுத்தமான விலங்குகள்.
வாந்தி என்பது குமட்டலினாலோ அஜீரணக் கோளாறினாலோ ஏற்படும். பெரும்பாலும், இது அமிலம் அல்லது பித்தத்துடன் கலந்து சிறுகுடலில் இருந்து வெளியேறுகிறது. இது நாய்க்கு விஷம் ஏற்படாமல் பாதுகாக்கும். சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் உணவுக் குழாயில் மாட்டிக் கொண்டாலும் எதுக்களித்தல் நடக்கும், வாந்தி எடுக்கும் நிலை ஏற்படும். நாய்கள் சில நேரங்களில் நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க அவ்வாறு செய்கின்றன. பன்றிகள் சுத்தமான இடத்தை விட சேறு அல்லது சேற்றை விரும்புகின்றன. அதற்கான காரணங்களாக நிபுணர்கள் கூறுவது; அவைகள் தங்களை குளிர்வித்து, பேன் மற்றும் பிற தொற்று பூச்சிகளை அகற்ற முடியும்.
மனந்திரும்புதலை அனுபவித்தும், பாவம், அசுத்தம், துன்மார்க்கம் என கைவிட்ட பின்னரும் மீண்டும் சில காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் பழைய பாவ வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள், அப்படிப்பட்டவர்களை பேதுரு இந்த விலங்குகளோடு ஒப்பிடுகிறார். இஸ்ரவேல் தேசம் அசுத்தத்திற்குப் பின் செல்வதில் உறுதியாக இருந்ததாக ஓசியா எழுதுகிறார்.
1) மனதின் தீர்மானம்:
முடிவுகள் எடுக்கும்போது எதைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை, சிந்தித்தே செயல்படுகிறார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எது சரி, எது தவறு, பரிசுத்தமானது எது என்பதை அறிவார்கள். ஆனாலும், அவர்கள் சத்தியத்திற்கு மதிப்பளிக்காமல், அநியாயத்தையும், அபத்தமானதையும், அக்கிரமத்தையும் தேர்ந்தெடுத்தார்கள்.
2) விருப்பமான தீர்மானம்:
இது ஒரு அப்பாவித்தனமான முடிவு அல்ல, திட்டமிட்டு எடுக்கப்பட்ட தீர்மானம். தீமை அல்லது அசுத்தத்தைத் தொடர அனைத்து வளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
3) உணர்ச்சிக்கரமான தீர்மானம்:
இஸ்ரவேல் தேசம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதில் மகிழ்ச்சியடையவில்லை அல்லது சத்தியத்திற்காகவும் கர்த்தருக்காகவும் அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய துன்பங்களைக் கண்டு விரக்தியடைந்தனர். தேவனுக்குப் பிரியமானதை விட, தங்களுக்கு எது நல்லதாக உணர்கிறார்களோ அதற்கே முக்கியத்துவம் அளித்தனர்.
4) சமூகத்தின் தீர்மானம்:
இஸ்ரவேல் தேசத்தின் பிரச்சனை என்னவென்றால், தனிநபர்களாக அல்ல, முழு சமூகமும், இன்னும் சொல்லப்போனால் தேசம் கூட்டாக அசுத்தத்தைத் தொடர்ந்தது. தீர்க்கத்தரிசனம் உரைப்பவர்கள் கூட மௌனமானார்கள் அல்லது தவிர்க்கப்பட்டனர். அது சமூகத் தீமையாகவும் தேசிய அக்கிரமமாகவும் மாறியது; கொடுமையென்னவெனில்; கர்த்தர் தம்முடைய சொந்த ஜனங்களை அவர்களுடைய துரோகத்திற்காக நியாயந்தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பழக்கம் அல்லது இயல்பாகவே விலங்குகள் முட்டாள்தனமான செயல்களைச் செய்யக் கூடியவைகள் தான். ஆனால் மனிதன் பரிசுத்தமற்ற அல்லது அசுத்தத்தின் பின்னால் சென்றால், அது நியாயத்தீர்ப்பை அல்லவா வரவழைக்கும்.
நான் எல்லா நேரங்களிலும் பரிசுத்தத்தையும் நீதியையும் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran