துன்பத்தில் இருப்பவர்கள் அவரிடம் செல்கிறார்கள். அவர் சொல்லும் பல விஷயங்கள் பலருக்கு பெரும் ஊக்கமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றியும் கணிக்கிறார். அவருடைய பல கணிப்புகள் நிறைவேறவில்லை. ஆனாலும், மக்கள் அவரிடம் குவிந்தனர். ஒரு பெண் இப்படியாக கூறினார்: “அவர் ஒரு நேர்மறையான செய்தியைக் கூறுகிறார். நிச்சயமாக, அவர் எங்கள் நம்பிக்கையைத் தூண்டுகிறார். எதிர்காலத்தைப் பற்றி அவர் சொல்வது ஒருவேளை நடக்காமல் போகலாம், ஆனால் அவரின் வார்த்தைகள் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் அது நல்ல கனவுகளை உருவாக்குகிறது. அத்தகைய கற்பனையில் / கனவில் நான் திருப்தி அடைகிறேன்". ஒருவேளை இதைதான் 'மணல் கோட்டை கட்டுவது' என்பதோ! ஆம், இந்த ஜோசியக்காரர்கள் தவறு என்ன ஏது என்று கண்டிக்கவில்லை அல்லது பகுத்தறிவதில்லை, ஆனால் கடந்த காலத்தை புதைத்து கற்பனையான எதிர்காலத்தை தருகிறார்கள், அது மக்களுக்கு உத்வேகத்தைத் தருகிறது.
ஒரு நோயாளி மருத்துவரிடம் செல்கிறார். நோய்க்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சில ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல், அவரின் பசி, தண்ணீர் உட்கொள்ளுதல், தூக்கம், ஓய்வு, வேலை, பதற்றம், உறவுகள் போன்ற பல கேள்விகளை மருத்துவர் கேட்கிறார். ஆனால் ஜோசியம் சொல்பவர் எதையும் விசாரிப்பதில்லை, ஆனால் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதியளித்து கேட்பவரின் நான் என்னும் அகங்காரத்தை உயர்த்துகிறார்.
எரேமியா கள்ள தீர்க்கதரிசிகளைப் பற்றி எழுதுகிறார், அவர்கள் இந்த ஜோசியம் சொல்பவர்களைப் போன்றவர்கள். "சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்" (எரேமியா 6:14). கள்ள தீர்க்கதரிசிகள் செழிப்பு, சமாதானம், சிறந்த எதிர்காலம் போன்ற வாக்குறுதிகளை அளித்து, காயங்களையும் பாவத்தின் விளைவுகளையும் சமாளித்து மறுக்கிறார்கள், மறைக்கிறார்கள். அறுவைசிகிச்சை செய்து காயங்களைச் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக, மருந்துகளைப் பூசி அவற்றைக் கட்டுவதற்குப் பதிலாக, காயங்கள் குணமாகும் என்று வெறுமனே அறிவிக்கிறார்கள்.
இதற்கு நேர்மாறாக, உண்மையான தீர்க்கதரிசிகள் ஒரு நல்ல அறுவை சிகிச்சை நிபுணரைப் போன்றவர்கள். அவர்கள் நோயாளியின் நலன் மற்றும் அவரது குணப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அவர்களுக்கு குணமாகி விடும் என்று சமாளிக்காமல் அவர்கள் குணப்படுவதற்கான வேலையைச் செய்கிறார்கள். உண்மையான தீர்க்கதரிசிகள் நாத்தான் எப்படி தாவீதின் குற்றத்தை எதிர்த்தானோ; ஆகாபின் அநியாயமான நில ஆக்கிரமிப்பைக் கண்டித்தல்; ஏரோதின் விபச்சாரத்தை பகிரங்கமாக கண்டித்தது, பேதுரு செய்தது போல் அனனியாவையும் சப்பீராளையும் தண்டித்தது என பாவத்தை எதிர்த்து நிற்கிறார்கள்; கள்ள தீர்க்கதரிசிகள் சுயநலம், தணியாத அபிலாஷைகள் மற்றும் தவறான நாட்டம் போன்ற குற்றங்களை மன்னிக்கிறார்கள். உண்மையான தீர்க்கதரிசிகள் மக்களின் கவனத்தை தேவ ராஜ்யம் மற்றும் நீதியின் பக்கம் திருப்புகிறார்கள் (மத்தேயு 6:33). "அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்" (2 தீமோத்தேயு 4:2-3).
என் காதுகள் சத்தியத்திற்கு செவியை சாய்க்கின்றதா அல்லது விலக்குகின்றதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்