தொடர் - 11
“டிங் - டிங்” பதினோரு முறை ஒலித்து ஓய்ந்தது சுவர்க் கடிகாரம். ஹாலில் அமர்ந்திருந்த பியூலாவின் உள்ளத்தில் காலையில் நடந்த நிகழ்ச்சிகள் திரைப்படம் போல் ஓடின. எதிர்பாராமல் வந்த பியூலாவை யாரும் “வா” வென அழைக்கவில்லை. அனல் பறக்கும் பார்வையை வீசிவிட்டுச் சென்றார் மாமியார். மகிழ்ச்சி பொங்கும் பார்வையால் அவளை, வரவேற்றார் மாமனார். வாய் திறந்து கூப்பிட பயம் போலும், அலுவலகத்திற்காக புறப்பட்டுக் கொண்டிருந்த ராஜசேகர் பியூலாவைக் கண்டதும், “என்றைக்கும் “கணவனுக்கு மனைவி அடிமைதான். அதைப் புரிஞ்சுகிட்டு வந்திட்டியா” என்று கேட்டுச் சிரித்தான். பியூலா பதில் ஒன்றும் பேசாமல் புன்னகை பூத்தபடி மாடி ஏறி, தங்களுடைய அறைக்குச் சென்றாள். அவள் நினைவுகளைக் கலைத்தது கேட்டைத் திறக்கும் ஓசை. மோட்டார் சைக்கிள் உள்ளே நுழைந்தது. கதவைத் திறந்தாள் பியூலா. தள்ளாடியபடி உள்ளே நுழைந்த ராஜசேகர் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“என்ன பியூலா தூங்கலையா? மணி பதினொன்றுக்கு மேல் ஆகுமே!”
“நீங்க வரட்டும் என்று காத்திருந்தேன்” அமைதியாகச் சொன்னாள். மாடிப்படியில் ஏறினவன் தடுமாறி விழப்போனான். பியூலா பிடித்துக்கொண்டாள்.
“பியூலா! நீ வந்த சந்தோஷத்தில் ஓவர் டோஸ் எடுத்திட்டேன். கொஞ்சம் தடுமாறுது” சிரித்தான். “ஆனா... பாரேன், பைக்கில் விபத்தில் மாட்டாம வந்திட்டேன்” பெருமையாகக் கூறியபடி அறையினுள் நுழைந்தவன். ஷுவுடன் அப்படியே படுக்கையில் விழுந்தான்.
“சாப்பிடலையா?” கேட்டாள் பியூலா.
“நோ! நோ! நான் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டேன்! நீ சாப்பிடலையா?” ஆச்சரியமாகக் கேட்டான்.
“ஊஹும் ..... நீங்கள் வந்தபின் சாப்பிடலாம் என்றிருந்தேன்” என்று கூறியபடி அவள் ஷுவைக் கழற்றினாள்.
“நீ போய் சாப்பிடு”
“எனக்குப் பசிக்கவில்லை” பதிலுறைத்தாள் பியூலா! அப்படியே தூங்கிவிட்டான் சேகர். பியூலாவின் விழிகளிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் உருண்டது. முழங்கால் படியிட்டாள். உள்ளம் கசிந்துருக மன்றாடினாள்.
அதிகாலை 4.00 மணி! கண்விழித்தாள் பியூலா! பல்துலக்கி முகம் கழுவினாள்! தூக்கம் பறந்தது! மேஜை விளக்கை ஏற்றியவள் திருமறையை எடுத்து சில பகுதிகளைப் படித்தாள். பின் ஜெபிக்க ஆரம்பித்தாள். நேரம் ஓடியது. மணி 5.00 ” காலைக் கடமைகளைச் செய்ய ஆரம்பித்தாள். சமையலறைக்குச் சென்று ராஜசேகரை எழுப்பி, அவன் குளிப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தாள். அதன்பின் அவனை சாப்பிட அழைத்துச் சென்றாள். தானே பறிமாற ஆரம்பித்தாள்! இன்று நடப்பது எல்லாம் அவனுக்குப் புதுமையாக இருந்தது, நினைத்த நேரத்தில் எழுந்து, வேலைக்காரி வைத்ததை விழுங்கி, அலுவலகத்திற்கு ஓடும் அவனுக்கு இன்று தன் மனைவி தன்னை கவனிப்பது அறிந்து ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தான்.
“நீயும் சாப்பிடேன் பியூலா” ஆவலாகச் சொன்னான். -
“நீங்கள் சாப்பிடுங்கள்” என்றவள் “இன்னும் ஒரு இட்லி மட்டும்” என்றபடி இருமுறைகள் வைத்தாள். வழக்கத்திற்கு அதிகமாகவே சாப்பிட்டான் சேகர். காப்பியை ருசித்தவன்.
“இன்று தான் மீனாட்சி நான் சொல்றபடி லைட் டிகாக்ஷன் போட்டிருக்கிறாள்” என்றவனை இடைமறித்தாள் பியூலா. இன்று காபியை நான் தான் போட்டேன்”.
“நீயா? உனக்கு காபி போடத் தெரியுமா? ..பைன்! ஏ ஒன் காபி” பாராட்டினான் சேகர். பியூலாவின் முகம் பாராட்டலால் மலர்ந்தது.
“ஒரு வேண்டுகோள்!” ஆவலாகக் கேட்டாள். என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.
“இரவு ஹோட்டலில் சாப்பிடக் கூடாது. இங்கு வந்து விட வேண்டும்”. ஒரு நிமிடம் யோசித்தவன் “சரி வருகிறேன்” என்றான்.
மாலை மயங்க இரவு நெருங்கியது. நன்றாகக் குடித்தவன் ஹோட்டலை நாடினான். பியூலாவின் முகம் அவன் முன் தோன்றியது. காலையில் அவள் கூறியது நினைவில் எழுந்தது. நேற்று இரவு அவள் காத்திருந்துவிட்டு, ' சாப்பிடாமலே படுத்தது நினைவிற்கு வந்தது. பைக் வீட்டை நோக்கிப் பறந்தது.
பியூலா சமையல் குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்தாள். சமையல் அறையில் வேலைக்காரியின் உதவியுடன், தானே சமைத்தாள். அத்தையின் ஆத்திரப் பேச்சுக்களைக், கேட்க நேர்ந்தாலும், எதிர்த்துப் பேசுவதை விட்டுவிட்டாள். “அத்தை... அத்தை” என்று தன் மாமியாரை வளைய வந்தாள். வீடு தூய்மையாக அழகாக விளங்கியது. பியூலாவின் அன்பு ராஜசேகரின் தாயையும் மாற்றியது. வீட்டில் ஆனந்தம் பொங்கி வழிந்தது. ஆனால் இரவிலும், அதிகாலையிலும் ஆண்டவர் பாதத்தில் கண்ணீரைக் கொட்டினாள் பியூலா.
“என் கண்ணீரை உம் துருத்தியில் வையும்” என்ற தாவீதின் வேண்டுதலின்படி பியூலாவின் கண்ணீரும் ஆண்டவர் துருத்தியில் இருப்பது அதிக நிச்சயமல்லவா? எம்பெருமான் இயேசு செயலாற்ற ஆரம்பித்தார்.
ஒருநாள் இரவு! திடீரென கண்விழித்தான் சேகர். படுக்கையில் பியூலாவைக் காணவில்லை! விசும்பல் சத்தம் வெடித்தது. மேஜை அருகே முழங்காலில் நின்றபடி அழுது கொண்டிருந்தாள் பியூலா! திடுக்கிட்டான் சேகர் ஏன்? ஏன்? அவன் இருதயம் விழித்தது.
தன் கணவன் குடிப்பதைவிட்டு மனம் மாற வேண்டுமென கண்ணீரோடு கெஞ்சும் வார்த்தைகள் சேகர் உள்ளத்தை நெருப்பாய் சுட்டன. தன்குடிபழக்கம் தனது அருமை மனைவியை கலங்கச் செய்வதை அறிந்தான். மறுநாள் விடிந்தது. அவனால் மகிழ்ச்சியோடிருக்க முடியவில்லை. அவனது வாட்டத்தை உணர்ந்த பியூலா, பலமுறை அவனைக் கேட்டாள். “தலைவலி” என்று கூறிவிட்டான். மாலை வந்தது. அவனால் குடிக்க முடியவில்லை குடிக்காமலிருக்கவும் முடியவில்லை. கொஞ்சம் குடித்தவன் வீட்டிற்கு வந்தான். சாப்பிட மறுத்துவிட்டான். இரவு வளர்ந்தது.
“பியூலா” என்றழைத்தவன் அவளையே கண்கொட்டாமல் பார்த்தான். “தினமும் இரவில் அழுகிறாயா?” கண் கலங்கக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் பியூலா! உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற வினா விழிவழி வந்தது.
“நான் குடிப்பது உனக்கு அதிக வருத்தத்தைத் தருகிறது இல்லையா?” என்றவன் அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
“எனக்கு வருத்தமாக இருக்காதா? நீங்க குடித்துக் குடித்து உங்க உடம்பைக் கெடுத்துக்கிட்டா நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? நீங்க நல்லா இருந்தாத்தானே, நான் நல்லா இருக்க முடியும்?” கண்ணீர் வழிந்தது.
“டியர்! நான் பிரண்ட்ஸ்களோட குடிக்க ஆரம்பிச்சப்ப ஜாலியா இருந்தது! அதைப் பெருமையாக நினைச்சேன். அப்புறம் தான் குடிக்கிறது தப்புன்னு தெரிந்தது! ஆனா விட முடியவில்லை. நான் குடிக்க விரும்பலை பியூலா! ஆனா... விடவும் முடியலையே! நான் என்ன செய்யட்டும் பியூலா நான் என்ன செய்யட்டும்? அவனது கண்ணீர்த் துளிகள் அவள் கரங்களில் விழுந்தன. இருளை விலக்கி ஆதவன் மெல்ல எழுவதுபோல தன் வாழ்வில் துன்ப இருள் நீங்க போவதை உணர்ந்தவள் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள்.
“நீங்க ஜெபம் செய்யுங்க! நான் குடிப்பதை விட்டுவிட எனக்கு உதவி செய்யும்” என்று இயேசு சாமிகிட்ட கேளுங்க.
“ஜெபிப்பதா? எனக்கு ஜெபிக்கத் தெரியாதே!” சிறுபிள்ளைபோல் விழித்தான் சேகர்“ அதுவும் நான் எப்படி ஜெபிக்க முடியும். நான் ரொம்ப ரொம்ப தப்பு செய்தவம்மா! என் ஜெபத்தை சாமி கேட்கமாட்டார்.
“ஏன் ஜெபத்தைச் சாமி கேட்கமாட்டார்” என்ற தன் அன்புக் கணவரை பாசத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் பியூலா.
“நீங்க தப்பு செய்தவங்க என்பதற்காக உங்க அப்பா, அம்மா உங்களை வெறுத்து விரட்டிட்டாங்களா? இல்லையே தாய் மறந்தாலும் நான் மறவேன் என்ற தேவன் உங்களை வெறுக்கமாட்டார். பாவிகளை இரட்சிக்கத்தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். நீங்க உங்க அப்பா கிட்ட பேசத் தெரியாதா? அதே போல் உங்க மனத்தில் என்ன நினைக்கிறீங்களோ, அதை சாமிக்கிட்டச் சொல்லுங்க. “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசா 1:18). “துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன்தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்கு பிரியம்” (எசே 18:23) என்றும் கர்த்தர் கூறுகிறார். மன்னிக்கும் தேவன் நம் தேவன்!” என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14) என்று வாக்குத்தந்த நம் கர்த்தர் வாக்குமாறாதவர். அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார். (1பேதுரு 2:24. நமக்கு மன்னிப்பு விடுதலை வழங்கிவிட்டார். நீங்க ஜெபித்து, பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பை வாங்கிக்கங்க. குடியிலிருந்து விடுதலையை வாங்கிக்கங்க. ஜெபிப்போமா?” ஆவலே வடிவாகக்கேட்டாள்.
அவள் பேச பேச சேகரின் உள்ளத்தில் நம்பிக்கை பிறந்தது. தன்னுயிர்க்கு மேலாக தன்னை நேசிக்கும் தன் மனைவியை மகிழ்வோடு வாழ வைக்க வேண்டும் என்ற, வைராக்கியம் எழுந்தது. முழங்கால்படியிட்டான். உள்ளம் உடைந்து சிதறியது, கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டது. அவனது பாவங்கள் ஒவ்வொன்றாக மனத்திரையில் படமாயின. உள்ளம் நொறுங்க ஜெபிக்க ஆரம்பித்தனர். குடியிலிருந்து விடுதலை வேண்டி இறைஞ்சினர். மணித்துளிகள் மணிகளாக உருண்டன. அவன் உள்ளத்தே ஓர் ஒளி தோன்றியது. ஓர் அமைதி நிலவியது. இருவரும் ஜெபத்தை முடித்தனர். ஆனந்தமாகத் தூங்கினர்.
மறுநாள் அலுவலகத்திற்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தவனிடம் “இன்று உங்க பிரண்ட்ஸ் கூப்பிட்டால் மறுத்துவிட்டு வந்துவிட வேண்டும். சோதனையில் வீழ்ந்து விடுவீர்கள் போல தோன்றினால் “இயேசுவின் இரத்தம் ஜெயம்” என்று கூறுங்கள். சோதனையை வென்றுவிடுவீரகள்” என்றாள் பியூலா! தலையை ஆட்டினான் சேகர். சோதனை வந்தது! வேதனையாக முடியவில்லை! சாதனையாக்கி விட்டான் சேகர்!
தன் மகனின் மாற்றத்தைக் கண்ட பெற்றோர் மகிழ்ந்தனர். மருமகளின் பக்திவாழ்வு பற்றிப் பிடித்தது. குடும்ப ஜெபம் நடைபெற ஆரம்பித்தது. “கிறிஸ்து இவ்வீட்டின் தலைவர்” என்ற அவ்வீட்டில் அழகிய சட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்த வாசகம் உயிர்பெற்றது.
இதன் தொடர்ச்சி எதிர்பாராத பேரிடி! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.