மலர்ந்தது புத்தாண்டு

செங்கதிரோன் தன் செக்கச் சிவந்த கரங்களை மெல்ல மெல்ல நீட்டி மேலெழுந்தான். இருண்ட வானத்தில் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அவனது வருகைக்கு புள்ளினங்கள் வரவேற்புப் பா பாடிப் பறந்தன. அழகிய மலர்கள் தங்கள் இதழ்விரித்துப் புன்னகை புரிந்தன. அந்த மருத்துவமனையின் ஜன்னல் அருகே அமைந்திருந்த படுக்கையில் நீலவானையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சந்தோஷ். இரவெல்லாம் அவன் உறங்கவில்லை. அதனால் அவன் விழிகளும் கதிரவனோடு போட்டியிடுவது போல் சிவந்திருந்தன. கழுத்திலிருந்து தொங்கிய துணித் தொட்டிலில் அவனது கட்டுப் போடப்பட்ட வலது கை தூங்கிக் கொண்டிருந்து. வலது கரத்தைப் பார்த்தான். அவன் விழியினின்று கண்ணீர்முத்துக்கள் கொட்டின. கடந்த கால நினைவுகள் நெஞ்சில் படமாயின.
ஆகஸ்ட் 30, சனிக்கிழமை மதுபனியிலுள்ள தன் இல்லத்தில் இரவு பதினொன்றுக்குப் படுக்க ஆயத்தமானவனின் அருகில் வந்தாள் அவன் மனைவி பானு.
“என்னங்க..... இந்த அறையில் இன்று படுக்க வேண்டாம். என் மனதில் ஏதோ பயமாக இருக்கிறது. உள்அறையில் படுப்போம்” அவன் முகத்தில் இனம் தெரியாத கலவரம். 

“பானு எதிர் வீட்டு கிறிஸ்தவ நாய்களுடன் பேசிப் பேசி உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. முழங்காலில் நின்று பிதற்றிக் கொண்டிருப்பாய். இன்று என்னையும் அந்த அறைக்கு வரச் சொல்லுகிறாயா? உன்னை அவர்களுடன் பேச விட்டதே தப்பு , தவறு.” கோபம் அவள் முகத்தில் தாண்டவமாடியது.

“அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை. எனக்குத் தான்....” மெல்ல இழுத்தாள்.

“உனக்குப் பயமாயிருந்தால் நீ போய் அங்குப் படுத்துக்கொள். என்னை எந்த பூதமோ, பிசாசோ பிடித்துக் கொண்டு போகட்டும்” கோபமாகக் கத்தியவன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

“என்ன நடந்தாலும் உங்களை விட்டு நான் போக மாட்டேன்!” என்று கூறிய பானு, கட்டில் அருகிலேயே பாயை விரித்தாள். 

ஆகஸ்ட் 31 அதிகாலை மணி 4:40 பூமியின் அடியில் ஒருவித இரைச்சல் கேட்டது. கட்டடம் ஆடத் தொடங்கியது. “எழுந்து ஓடுங்கள். இயேசுவே என் கணவரைக் காப்பாற்று” என்ற மனைவியின் அலறல் விழித்த சந்தோஷ், விழுந்தடித்து வெளியே ஓடினான். எதிரே இருந்த கல் தட்டி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடி வலதுகரம் ஒடிந்து தொங்கியது.
இரத்தம் பீறிட்டது. அவன் விழிகள் சுற்றிச் சுழன்றன. தரை விரிசல் கண்டு பிளந்தது. பிளந்த பகுதிகளிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. கடும் மழை பொழிந்தது. எங்கும் மரண ஓலம்.

நேற்றைய தினம் தன் மனைவியின் எச்சரிப்பின் வார்த்தைகள் அவன் நினைவில் எழுந்தன. “ஐயோ! பானு நீ என்ன ஆனாய்?” அவன் உள்ளம் ஓலமிட்டது.

நினைவிழந்தான் சந்தோஷ்.

அவன் கண்விழித்த போது மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டதையும், தன் அருமை மனைவியுடன், தன் எதிர் வீட்டில் குடியிருந்த அந்தக் கிறிஸ்தவ மாதுவும் இருப்பதையும் கண்டான்.

“பானு உனக்கொன்றுமில்லையே” ஆதரவாகக் கேட்டவனின் கரத்தைப் பிடித்துக்கொண்டாள் பானு. அவள் விழிகளினின்று கண்ணாத் துளிகள் வீழ்ந்தன. ”

“சகோதரனே! தைரியமாயிருங்கள். உங்கள் மனைவியின் கண்ணீர் வேண்டுதல்கள் கேட்கப்பட்டது. இயேசுவின் அருளால் நீங்கள் பிழைத்துக் கொண்டீர்கள். நம்பிக்கையோடிருங்கள்” என்று கூறிய அந்தக் கிறிஸ்தவ மாது பானுவிடம் திரும்பி,

“பானு! அழக்கூடாது. தைரியமாயிரு. நான் திருமதி ராம்ஜியைப் பார்த்து வருகிறேன் என்றபடி நகர்ந்தார்.

பானு..... நான் எப்படி இங்கே வந்தேன்?” சந்தோஷ் வினவினான். நிலநடுக்கம் ஏற்பட்ட அன்று “இயேசுவே என் கணவரைக் காப்பாற்று” என் மனைவி அலறிய அலறல் இன்னும் அவன் செவிகளில் எதிரொலித்தது.

“நிலநடுக்கம் நடந்த அன்று எதிர்வீட்டு ரூத் அக்காவும் அவர்களுடைய கணவரும், வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு எழுந்து பாட்டுப்பாடி, வேதம் வாசித்து ஜெபித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். பூமியிலிருந்து இரைச்சல் கேட்ட மறுகணம் நிலம் ஆடத் தொடங்கியிருக்கிறது. உடனே வெளியே ஓடி வந்திருக்கின்றனர். கட்டடங்கள் இடிந்து சரிவதையும், மனிதர்கள் உயிர் தப்ப, மாடியிலிருந்து வீழ்ந்து மடிவதையும் ஓடி வந்து கை, கால் உடைத்துக் கொள்வதையும் கண்டு பரிதவித்து கலங்கி நின்றிருக்கின்றனர். அதேசமயம் கடும் மழை பொழிய ஆரம்பித்திருக்கின்றது. உங்களைத் தூக்கி அருகிலிருந்த தள்ளுவண்டியில் போட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அவர்கள் தான் உங்களை இந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். உங்களுக்கு நிறைய இரத்தம் வீணாயிடுச்சாம். சாம் அண்ணன்.... அது தான் ரூத் அக்காவின் கணவன் தான் உங்களுக்கு இரத்தம் கொடுத்தார். உங்களை மட்டுமல்ல..... எத்தனையோ பேருக்கு ஓடிஓடி உதவி செய்திருக்காங்க. கிறிஸ்தவங்கன்ன நீங்க வெறுப்பீங்க! அந்த கிறிஸ்தவங்கதான்..... என்னமோ ஒரு குழுவாம்..... அவர்களும்கூட நிறையப்பேர் நம்ம பகுதிக்கு வந்து வீடுவீடாப் போய் உதவி செய்றாங்க!” என்றவள் பெரு மூச்சுடன் நிறுத்தினாள்.

“பானு! நீ எப்படியம்மா தப்பிச்ச? என்னைப் பற்றியே கவலைப்பட்டாயே . உன்னைப் பற்றி யோசிக்காம நான் மட்டும் ஓடி வந்திட்டேனே... நீ எப்படியம்மா தப்பிச்ச?” பாசம் அவன் சொற்களில் இழையோடியது.

“முதல் நாளே என்னுள்ளத்திலே ஒருவித பயம். “பிரார்த்தனை அறைக்குப் போங்க” என்று என் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. அதனால் தான் உங்ககிட்ட சொன்னேன். நீங்க திட்டிட்டீங்க! நீங்க இல்லாம நான் இந்த உலகத்தில் வாழவா? உங்க கட்டிலுக்குக் கீழேயே படுத்துக் கொண்டேன். உங்களுக்கு பயந்துகிட்டு முழங்கால் போட்டு நான் பிரார்த்திக்கலை. ஆனா படுத்துக்கிட்டே தூங்காம பிரார்த்தனை பண்ணிட்டே இருந்தேன். எப்பத் தூங்கினேனோ தெரியாது. ஒரு இரைச்சல் கேட்டது. உடனே உங்களை வெளியே போகச் சொல்லி கத்தினேன். அதே வினாடி நான் படுத்திருந்த நிலப்பகுதி விரிசல்பட நான் உங்க கட்டிலின் கீழே உள் பாகத்தை நோக்கி உருட்டி விடப்பட்டேன். மடமடவென கட்டடங்கள் இடிந்து விழுந்த சத்தம் கேட்டது. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியாது. மயங்கிட்டேன்” சிறிது நிறுத்தினாள். பின் தொடர்ந்தாள்....

“இடிபாடுகளை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். கடவுள் தம் கரத்தால் மூடிக் காத்த மாதிரி கட்டிடம் இடிந்து, தாறுமாகக் கிடந்த கட்டிலின் அடியில் நான் மயங்கிக் கிடந்திருக்கின்றேன். என்னையும் அவர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். எனக்கு சிறு சிராய்ப்பு காயம் தான். மறுநாளே நினைவு திரும்பி விட்டது”

சிலகணம் நேரம் அங்கு மெளனம் நிலவியது. பானுவே மெல்ல தயங்கி... தயங்கி சொன்னாள்.

“என்னங்க நான் பிரார்த்தனை பண்ணுவேனே. அந்த சின்ன அறை இடியலைங்க!       

ஆச்சரியத்தில் தன் கண்களை அகல விரித்தான் சந்தோஷ், அவள் பிரார்த்தனைகளே தூண்களாக அந்த இடத்தை தாங்கியுள்ளது என அவன் இதயம் இயம்பியது. அபாயத்தின் மத்தியில் ஆண்டவரின் அற்புதச் செயல், கிறிஸ்தவ ஊழியர்களின் அன்பு, பிள்ளைகளுக்கு தேவன் வரும் ஆபத்தை முன்னறிவித்தது!, அனைத்தும் அவன் நெஞ்சில் நிழலாடின.
“இயேசுதான் உண்மையான தெய்வம்” அவன் இதழ்கள் இசைத்தன. அக மகிழ்ந்தாள் பானு.

பானுவையே பார்த்தான். “பானு உன்னைக் கொடுமைபடுத்தின எனக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்திட்டாரம்மா” வேதனை அவன் வார்த்தை வழி வந்தது.

அவன் வாயை தன் கரத்தால் பொத்தினாள். ' அப்படியெல்லாம் பேசாதீங்க. நம்ம ஜென்ம பாவம் போக்க தன்னுயிரையே தந்த தெய்வந்தான் இயேசு. இப்ப நம்ம உயிரைக் காப்பாற்றியவர் நம்மை உதவாக்கரையா உலகத்தில் விட்டிட மாட்டார். ஓவியம் வரைந்த உங்க கை கட்டாயம் வரையத்தான் போகுது. வேணா... பாருங்களேன்” உறுதியாகச்
சொன்னாள்.
நாட்கள் நத்தையிலும் மெதுவாக நகர்ந்தன. 4மாதங்கள் மறைந்தன. இன்று டிசம்பர் 31. பக்கத்து வார்டில் சிறு குழந்தையொன்று சத்தமிட்டு அழுதது. நனவுலகுக்கு வந்தான் சந்தோஷ்.

பார்த்ததை படமாகத் தீட்டுவதில் வல்லவன் அவன். அதுமட்டுமல்ல, கற்பனை சாம்ராஜ்யத்தின் காவலன் என்றும் கூறலாம். அவனது ஓவியங்கள் உலகத்தாரைக் கவர்ந்தன. உயர்ந்த இடத்தை அவனுக்குத் தந்திருந்தன. இனி.... அவனால் வரையமுடியுமா? மருத்துவர்கள் சந்தேகந்தான் என்று கூறினார்கள். மனைவியோ, “கடவுள் கைவிடமாட்டார். நிச்சயம் எலும்புகள் இணையும்” எனக் கூறுகிறாள். அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலிருக்கவும் இயலவில்லை. “கடவுள் தனக்கிட்ட தண்டனையோ” என்ற எண்ணமே அவனை வாட்டியது. இன்று கட்டு பிரிக்கும் நாள். அவனுக்கு முடிவு தெரியும் நாள். அவனுக்கு வரப்போகும் வருடம் இருண்ட கண்டமா? அல்லது ஒளி மிகுந்த எதிர்காலமா? என்பதை நிர்ணயிக்கும் நாள்.

மலர்ந்தது புத்தாண்டு, வண்ணத்தூரிகை திரையில் விளையாட தன்னை மறந்திருந்தவனின் அருகில் வந்தாள் பானு.

ஆலய ஆராதனையில் இருவரும் பங்கு பெற்று, புத்தாண்டு வாழ்த்துக்களைப் பெற்று வீட்டிற்கு வந்ததிலிருந்து வரைவதிலேயே லயித்திருந்தான், சந்தோஷ். ஆலயத்தில் கண்ட, கையில் ஆட்டுக் குட்டியுடன் இயேசு நாதர் காட்சியளித்த படம் திரையில் உயிரோவியமாகத் திகழ்ந்தது.

ஓவியத்தை முடித்து நிமிர்ந்தவன், பானு.... கறைபடிந்த படங்களை இனி என் கரம் வரையாது என்பதற்காக என்னை ஆட்கொண்டு, எனக்குப் புதுவாழ்வு அளித்த எம்பெருமான் இயேசுவின் திருவுருவப் படத்தை இன்று இவ்வாண்டின் முதற் படமாக வரைந்தேன்.” உணர்வுகள் கொப்பளிக்க கூறிய கணவனைக் கண்டாள்; களிப்பெய்தினாள். பாசமிகு பக்திப் புது வாழ்விற்கு புதுப்பாதை தந்தவரை நோக்கி “ஸ்தோத்திரமப்பா” என்றாள் பானு. 

இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story இதயம் தந்த பரிசு - கதை

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download