பழைய ஏற்பாட்டு வழிபாட்டின் இன்றியமையாத பகுதியாக இரத்த பலிகள் இருந்தது. பொதுவாக, கூடாரத்திலுள்ள பலிபீடத்தின் கீழ் இரத்தம் ஊற்றப்பட்டது. ஆயினும்கூட, பழைய ஏற்பாட்டில் மக்கள் மீது இரத்தம் தெளிக்கப்பட்ட மூன்று சூழ்நிலைகள் இருந்தன. மேலும் அவை அனைத்தும் செழுமையான ஆவிக்குரிய சத்தியங்களைக் குறிக்கின்றன.
உடன்படிக்கை:
இஸ்ரவேல் புத்திரர் நானூறு வருடங்கள் சகித்த எகிப்திய கொடுங்கோன்மையிலிருந்து பலத்த கரத்தால் தேவன் அவர்களை விடுவித்தார். அவர்கள் செங்கடலை வெற்றிகரமாக கடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன, அதே நேரத்தில் எகிப்திய இராணுவம் மூழ்கியது. தேவன் உணவையும் தண்ணீரையும் கொடுத்தார். மோசேயின் பரிந்துரையாலும், யோசுவாவின் இராணுவத் தாக்குதலாலும் அமலேக்கியர்களுக்கு எதிரான வெற்றியையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். தேவன் சீனாய் மலையில் தம்மை வெளிப்படுத்தினார் மற்றும் இஸ்ரேல் தேசத்துடன் ஒரு உடன்படிக்கை செய்தார். உடன்படிக்கை இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது, மோசே இரத்தத்தை மக்கள் மீது தெளித்தார் (யாத்திராகமம் 24:5-8).
அபிஷேகம்:
வாசஸ்தலத்தை நிறுவவும், ஆசாரியத்துவத்தை உருவாக்கவும் தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். ஆரோனும் அவருடைய மகன்களும் ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடைய பிரதிஷ்டைக்காக, இரத்தம் அவர்கள் மீதும், அவர்களுடைய ஆடைகள் மீதும் தெளிக்கப்பட்டது. இதனால், அவர்கள் பணிவிடை ஊழியத்திற்காக நியமிக்கப்பட்டனர் (யாத்திராகமம் 29:21). அவர்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக அறிவிக்கப்பட்டன, கர்த்தருக்கென்று விசேஷ பணிவிடை ஊழியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்கள் இவ்வாறாக நியமிக்கப்பட்டதால், அவர்கள் ஆசாரியர்களாக ஊழியம் செய்ய தகுதி பெற்றனர்.
சுத்திகரிப்பு:
சுத்தப்படுத்தப்பட்ட தொழுநோயாளிகள் சமூகத்தில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் சுத்திகரிப்பு முறைமை மூலம் செல்ல வேண்டும். இந்த முறைமையில் ஒரு அம்சம் ரத்தம் தெளிப்பது ஆகும் (லேவியராகமம் 14:6-7). இதற்குப் பிறகு, ஒரு தொழுநோயாளி தேவனுடைய மக்களின் சமூகத்தில் சேர்க்கப்படுவார்.
இயேசுவின் இரத்தம் தெளித்தல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுவது மூன்று காரியங்களை நிறைவேற்றுகிறது (1 பேதுரு 1:2). முதலில் , புதிய உடன்படிக்கை நிறுவப்பட்டது. இரண்டாவது, அனைத்து விசுவாசிகளும் இராஜரீக ஆசாரியத்துவத்தில் உள்ளனர். மூன்றாவது , தொழுநோயாளியைப் போலவே, எல்லா பாவிகளும் விசுவாசத்துடன் அவரிடம் வரும்போது அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படும்போது, நம் இதயங்கள் குற்றமுள்ள மனசாட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு, நம் சரீரங்கள் சுத்தமான தண்ணீரால் கழுவப்படுகின்றன (எபிரெயர் 10:22-24).
இந்த உடன்படிக்கை, நியமனம் மற்றும் சுத்திகரிப்புக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்