ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை ஏன் புனித வெள்ளி என்று அழைக்கிறார்கள் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காக மரித்தார்; எனவே இது மனித குலத்திற்கு நல்லது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலர் மட்டுமே இந்த உண்மையான நற்செய்தியை நம்புகிறார்கள்.
பழிவாங்க அலறுதல்
காயீனின் சகோதரன் ஆபேலின் இரத்தத்தை சிந்தியதற்காக தேவன் அவனைக் கடிந்து கொண்டார். ஆபேலின் இரத்தம் நீதிக்காக தேவனிடம் மன்றாடுவதாக அவர் கூறினார். மனித இரத்தம் சிந்தும் போது பழிவாங்குவதற்காக அலறும் (யோபு 16:18). இருப்பினும், தேவ குமாரன், பிரதான ஆசாரியரால் சிந்தப்பட்ட இரத்தம், பரலோகத் தகப்பனிடம் அவரை நம்புபவர்களுக்கு மன்னிப்புக்காக பரிந்துப் பேசுகிறது (எபிரெயர் 12:24)
இரத்தத்தை மூடுதல்
இரத்தம் சிந்தும்போது, அது மணல் அல்லது புழுதியால் மூடப்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் அது கோபத்தையும் பழிவாங்கலையும் தூண்டும். எசேக்கியேல் தீர்க்கதரிசி இவ்வாறாக எழுதினார்; “அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள். நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்” (எசேக்கியேல் 24:7-8).
கல்வாரி
கல்வாரி மலை வெறும் பாறையாக இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டு, மணலால் மூடப்பட்டிருக்கவில்லை, அது மோசேயின் பிரமாணத்தை மீறுவதாகும் (லேவியராகமம் 17:13; உபாகமம் 12:16,24: 15:3). அது மனித இரத்தமாக இருந்திருந்தால், அது தேவனின் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கும். ஆனால் அது தேவ குமாரனுடையது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களை நீதிமான் என்றும் தேவன் அழைக்கிறார்.
நீதியும் பரிசுத்தமும்
தேவன் நீதியும் பரிசுத்தமுமான குமாரன்; மரண தண்டனை, கோபம் மற்றும் நீதியான தீர்ப்புக்கு தகுதியான மனிதர்களுக்கு மாற்றாக இருக்க தன்னை ஒப்புக்கொடுத்தார்; ஆம், பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23). அவர் தனது சொந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு, நித்திய தேவனின் பிரசன்னமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் (எபிரெயர் 9:12). பிரதான ஆசாரியர்கள் பிரவேசிக்க முடியாது, ஏனென்றால் மனிதர்களுக்கு ஆலயத்தில் (சபையில்) அவர்களின் வேலை ஒருபோதும் முழுமையடையாது. கிறிஸ்துவில், மீட்பின் பணி முழுமையானது மற்றும் பரிபூரணமானது.
அவருடைய இரத்தத்தால் நான் கழுவப்பட்டு நீதியுள்ளவனாக அறிவிக்கப்பட்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்