ஆசீர்வாதத்தை உறுதியளிக்கும் வசனங்கள் பேரின்பங்கள் (பாக்கியம்) என்று அழைக்கப்படுகின்றன. வேதாகமத்தில் பல பகுதிகளில் ஏராளமான வசனங்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான தொகுப்பு மலைப்பிரசங்கம் ஆகும் (மத்தேயு 5: 3-12). வெளிப்படுத்துதல் புத்தகத்திலும், ஊக்கம், உறுதிப்பாடு மற்றும் நித்திய வாக்குறுதிகளை அளிக்கும் ஏழு பேரின்பமான வசனங்கள் உள்ளன.
1. வாசித்தல் கேட்டல்:
(வெளிப்படுத்துதல் 1:3) தேவனுடைய வார்த்தை சத்தியமானது, அதற்கு செவிசாய்த்து, கீழ்ப்படிந்து அவ்வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் உண்மையில் பாக்கியவான்கள். கேட்பது என்பது ஒரு பாக்கியம், அது நம் விசுவாசத்தை வளர்க்கிறது (ரோமர் 10:17).
2. கர்த்தருக்குள் மரித்தல்:
(வெளிப்படுத்துதல் 14:13) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்கள், மறுபடியும் பிறப்பார்கள், அவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் இடம்பெறும், அப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இறக்கும் போது, சபிக்கப்பட்ட உலகத்திலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட பிரசன்னத்திற்கு செல்கிறார்கள். தேவனிடத்தில் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள், அவர் சமூகத்தில் நித்திய வாழ்வை அனுபவிக்கிறார்கள்.
3. வஸ்திரத்தை காத்துக் கொள்ளல்:
(வெளிப்படுத்துதல் 16:15) கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பாவத்துடனும் சாத்தானுடனும் நிகழும் தொடர்ச்சியான மற்றும் நிலையான போராட்டமாகும். அவர்கள் ஒரு மீனைப் போன்றவர்கள், இது கடல் நீரில் இருக்கும் உப்பில் இருந்து கூட பாதுகாக்கப்படுகிறது, அதுபோல ஒரு கிறிஸ்தவர் பாவத்திலிருந்து, அவருடைய வார்த்தை மற்றும் ஆவியால் பாதுகாக்கப்படுகிறார்கள்.
4. ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்கு அழைக்கப்படுதல்:
(வெளிப்படுத்துதல் 19:9) இந்த விருந்து சிரத்தையுடன் எதிர்பார்க்கப்படுகிறது, உன்னிப்பாகத் தயாரிக்கப்படுகிறது, அன்புடன் பரிமாறப்படுகிறது மற்றும் அனைவரும் அனுபவிக்கிறார்கள்.
5. முதல் உயிர்த்தெழுதல்:
(வெளிப்படுத்துதல் 20:6) டொமிஷியன் ஆட்சியின் போது வெளிப்படுத்துதல் எழுதப்பட்டது. பல கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தனர். இரத்த சாட்சிகள் முதல் உயிர்த்தெழுதலின் ஒரு பகுதியாக இருப்பார்கள், கிறிஸ்துவுடன் 1000 ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள், மேலும் புதிய எருசலேமில் நித்திய வாழ்வு மற்றும் இரண்டாவது மரணம் இல்லை.
6. தீர்க்கதரிசனத்திற்கு கீழ்ப்படிதல்:
(வெளிப்படுத்துதல் 22:7) இந்த ஆசீர்வாதம் இரண்டாம் வருகையைப் பற்றிய கர்த்தரின் வாக்குத்தத்துடன் வருகிறது. அவருடைய வருகைக்காகக் காத்திருப்பவர்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தங்களைப் பரிசுத்தமாக காத்துக் கொள்வார்கள் (1 யோவான் 3:3).
7. கட்டளைகளை கடைபிடித்தல்:
(வெளிப்படுத்துதல் 22:14) பரிசுத்தவான்களுக்கு 'ஜீவ விருட்சத்தின்’ அதிகாரம் இருக்கும். ஆதாமும் ஏவாளும் வெளியேற்றப்பட்டு, ஜீவ விருட்சத்தை அணுக மறுக்கப்பட்டனர், அதனால் அவர்கள் பாவத்திலும் சாபத்திலும் தங்கள் ஆயுளை நீடிக்க மாட்டார்கள். தேவனால் மீட்கப்பட்ட ஜனங்கள் அவருடன் என்றென்றும் வாழ முடியும்.
நம்மை மிகவும் ஆசீர்வதித்த ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரை நான் எப்படி ஆராதிப்பது?
Author: Rev. Dr. J. N. Manokaran