ஆசீர்வதிக்கப்படுவதற்கான பல அம்சங்களை வேதாகமம் கற்பிக்கிறது. பாவமன்னிப்பு பெறுவதே முதன்மையான அம்சமாகும். மற்றொன்று என்னவென்றால், இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையில் தியானமாக இருப்பதாகும் (சங்கீதம் 32:1; 1:1-3). இன்று, பல குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அல்லது தற்கொலை செய்துகொள்வது வருத்தமாக இருக்கிறது. நல்ல ஆசீர்வாதமாக வாழ்வது எப்படியென கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பு.
1) சுயநலமின்மை:
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் போட்டியிட இரக்கமற்ற முறையில் தள்ளுவதற்குப் பதிலாக, மற்றவர்களிடம் அக்கறை காட்டவும் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிற குழந்தைகளை உக்கிரமான எதிரிகள் மற்றும் ஒழிக்கப்பட வேண்டிய போட்டியாளர்களைப் போல நடத்துவது ஆபத்தானது மற்றும் பேரழிவு தரக்கூடியது.
2) தியாகம்:
குழந்தைகளுக்கு எனக்கு மட்டும் தான் மற்றும் இப்போதே / உடனே வேண்டும் என்ற மனநிலை லட்சியவாத பெற்றோர்களால் வளர்க்கப்படுகிறது. தியாகத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும், அது தான் எனக்கு மட்டுமே உடையது என்ற எண்ணத்திற்கு எதிரானது. குழந்தைகளை எல்லையில்லாமல் மனநிறைவை அனுபவிக்க அனுமதிப்பது அவர்களுக்கு உரிமை மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. நன்றியுணர்வு, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பதே மாற்று மருந்து.
3) சேவை:
காய்கறிகளை நறுக்குதல், இரவு உணவிற்கு சாப்பிடும் இடத்தை ஆயத்தம் செய்தல், பாத்திரங்கள் மற்றும் தங்களின் துணிகளை கழுவுதல், தரையைத் துடைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், கழிவறையைச் சுத்தம் செய்தல், படுக்கை விரிப்புகள் மாற்றுதல்... போன்ற வீட்டு வேலைகளில் உதவப் பயிற்சியளிப்பதன் மூலம் சேவையின் மதிப்பை பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
4) உக்கிராணத்துவம்:
நமது திறமைகள் மற்றும் திறன்களை சமூகத்திற்கு சேவை செய்ய பயன்படுத்துவது என்பது தேவன் கொடுத்த வரம். குழந்தைகள் உலகில் தேவ நோக்கத்துடன் இருக்கிறார்கள், பெற்றோரின் நோக்கத்திற்காக அல்ல. பல பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத லட்சியங்களை தங்கள் குழந்தைகளின் மூலம் நிறைவேற்ற விரும்புகிறார்கள். "நான் மருத்துவராக ஆகவில்லை (பொறியாளர், ஐஏஎஸ் அதிகாரி, ஐஐடி, ஐஐஎம் படிப்பு), நீங்கள் ஒருவராக ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்பதாக சில பெற்றோர் கூறுகிறார்கள். தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, குழந்தைகள் தங்கள் பெற்றோரின் தெளிவற்ற கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இறுதியில் இது விரக்தியில் முடிகிறது.
5) வெற்றி:
வெற்றி என்பது மதிப்பெண்கள் பெறுவதும் நல்ல சம்பளத்தில் வேலை செய்வதும் மட்டும் அல்ல என்பதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆவிக்குரிய மற்றும் தார்மீக விழுமியங்களை விட பொருள் மதிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெற்றோர்கள் குழந்தைகளை தவறாக வழிநடத்துகிறார்கள். உண்மை, நீதி, அன்பு, அமைதி, பகிர்தல், அக்கறை, நியாயம், கடின உழைப்பு, கண்ணியம், கீழ்ப்படிதல், அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, பொறுமை, இரக்கம் என்பதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறது.
என் வாழ்வின் நோக்கம் என்ன; மற்றவர்களுக்கு நான் என்ன கற்பிக்கிறேன் என்பதை அறிநது செயல்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்