விளையாட்டு துறையின் பயிற்சியாளர்கள் தங்கள் மாணவர்கள் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்றால் வெகு நாட்களுக்கு முன்பதாகவே ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார்கள்; அதிலும் வெறும் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பல்ல, பல மாதங்கள் மற்றும் வருடங்கள் முன்பே ஆயத்தமாகும்போது அது அவர்களுக்கு தேவையான வலிமையையும் சகிப்புத்தன்மையையும் தருகிறது. ஆக, தேவன் இஸ்ரவேலர்களை கானானுக்குள் கொண்டு செல்லும் முன் நாற்பது வருடங்கள் வனாந்தர பயணத்தில் எவ்வாறு ஆயத்தப்படுத்தினார்? (யாத்திராகமம் 15:22-27). பலவீனமான அடிமைகள் பஸ்கா உணவின் போதும் அதற்குப் பின்னரும் ஆவிக்குரிய, தார்மீக, மன ரீதியான மற்றும் சரீரம் என வலிமையைப் பெற்றனர்.
மூன்று நாட்கள்:
தேவன் செங்கடலைப் பிரித்து, இஸ்ரவேலர்களைக் கடந்து செல்ல செய்த அதே நேரத்தில், எகிப்தியர்களை அதே கடலில் மூழ்கடித்து அவர்களை நியாயந்தீர்க்கவும் செய்தார். மோசே அவர்களை காலங்காலமாக சென்ற பாதையில் அழைத்துச் செல்லாமல் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். மூன்று நாட்கள் நீண்ட காலம் அல்ல, ஆனால் தேவனின் வல்லமை, அவருடைய வெற்றி, மகிமை மற்றும் ஆசீர்வாதங்களை மறக்க போதுமானது. பாலைவனத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வேண்டுமானால் மனிதர்களால் வாழ முடியும் அல்லது சமாளிக்க முடியும் எனலாம்.
மாராவின் தண்ணீர்:
அவர்கள் தண்ணீரைக் கண்டார்கள், ஆனால் அது கசப்பாக இருந்தது. எனவே, அதற்கு மாரா என்று பெயரிட்டு மோசேயிடம் முறையிட்டனர். இது இஸ்ரவேலுக்கு கொடுமையாக இருந்தது, ஆகையால் அவர்கள் முணுமுணுத்தனர்.
ஜெபம்:
மோசே தானாகவே ஒரு கோலை எடுத்து அதை தண்ணீரில் போட்டு கசப்பை மாற்ற முயற்சிக்காமல், அவன் கர்த்தரை நோக்கி அழுதான். அவன் ஒண்ணும் மந்திரவாதி இல்லையே. ஆம், தேவனுக்கு செவிசாய்ப்பதும் அவருடைய சித்தத்தைச் செய்வதும் மிக அவசியம். தேவன் மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார், அவன் அதை வெட்டி தண்ணீரில் போட்டான், அது இனிமையாக (மதுரமாக) மாறியது.
கனிம உள்ளடக்கம்:
வெட்டிப் போடப்பட்ட மரம் அதிகப்படியான கனிம உள்ளடக்கத்தை உறிஞ்சி, தண்ணீர் குடிக்கக்கூடியதாக மாற்றியது.
மலமிளக்கி விளைவு:
அதிலும் மெக்னீசியம் மற்றும் கால்சியம், செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தும் பேதி மருந்து என நீர் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது எகிப்தியர்களிடையே காணப்பட்ட பொதுவான அமீபிக் வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய்கள் இஸ்ரவேலர்களிடம் இருந்து அகற்றப்பட்டன.
செயல்திறன் மேம்பாடு:
மெக்னீசியம் மற்றும் கால்சியம் விளையாட்டு வீரர்களால் செயல்திறன் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது: அதாவது டோலமைட் எடுத்துக்கொள்வது போன்றது. எனவே, இஸ்ரவேலர்களை ஒரு நீண்ட வனாந்தர பயணத்திற்கு வலிமை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் கூடிய நல்ல உடல் தகுதியுடன் இருக்க தேவன் ஆயத்தம் செய்தார்.
யெகோவா ரஃபா:
எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தேவன் தான் என்றும், தானே ஒரு பரிகாரியாகிய கர்த்தர் என தன்னை வெளிப்படுத்தினார்.
ஆவிக்குரிய குறியீடு:
வெட்டப்பட்ட மரம் சிலுவையைக் குறிக்கிறது. ஆத்துமாவுக்கு ஜீவத் தண்ணீரை வழங்க கர்த்தர் கசப்பான சிலுவையை எடுத்தார். கர்த்தராகிய இயேசுவை நம் வாழ்வில் பெறும்போது உலகில் நம் கசப்பான வாழ்க்கை இனிமையாகிறது.
என் இனிமையான வாழ்க்கைக்கு சிலுவை தான் காரணம் என்பதை உணர்கிறேனா? இந்த அனுபவம் இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்